PUBLISHED ON : ஆக 29, 2021

விளையாட்டு விபரீதம்!
சமீபத்தில், உறவினர் இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன்.
மணமகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால், திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பி, லட்சக் கணக்கில் செலவு செய்திருந்தனர். திருமணத்திற்கு முதல் நாள் இரவு நிச்சயதார்த்தம். ஆடல், பாடல், கச்சேரி, என, விமரிசையாக நடைபெற்றது.
மறுநாள், திருமணம் இனிதே நடந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்கள் மணமக்களிடம் பரிசுப் பொருட்களை கொடுத்து, வாழ்த்தி, புகைப்படம் எடுத்தனர்.
திடீரென்று, மண மேடையில் ஏறி, மிகப்பெரிய பார்சல் ஒன்றை கொடுத்தனர், மணமகனின் நண்பர்கள். அதை பிரித்துப் பார்த்தால், உயிருள்ள ஒரு ஜோடி வெள்ளை புறா இருந்தது.
மணமகன் மற்றும் மணமகள் கையில், தலா ஒரு புறாவை கொடுத்து, அதை பறக்க விட செய்தனர். மணமக்கள் பறக்க விட்ட புறாக்கள், மண்டபத்தில் சுற்றிக் கொண்டிருந்த, மின் விசிறியில் அடிபட்டு, புறாவின் ரத்தம், அங்கு கூடியிருந்தவர்கள் மீது தெறித்தது.
சந்தோஷமாக இருந்த நிலை மாறி, அங்கு சோகம் சூழ்ந்தது.
எனவே, திருமணத்தின்போது, நண்பர்கள் இதுபோன்ற விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாமே!
— எம்.பி. சங்கரபாண்டியன், மதுரை.
உழைப்பை நம்பி...
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குடிசையில் வாழ்ந்து வரும் முதியவருக்கு, 80 வயதுக்கு மேல் இருக்கும். அவருக்கு, ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள். அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார். அவரது மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் இறந்து போனார்.
இருந்த சேமிப்பு பணம் முழுவதும் மனைவியின் மருத்துவத்துக்கு செலவு செய்து, தீர்த்தார். பிள்ளைகள் யாரும் உதவ முன் வரவில்லை. இப்போது, வறுமையில் வாடுகிறார்.
ஆனால், சுறுசுறுப்பாக காலையில் எழுந்து, வீட்டில் இருக்கும் கஞ்சியை துாக்குச் சட்டியில் எடுத்து, தோளில் மண்வெட்டியுடன் புறப்பட்டு விடுவார். அவர் எங்கே செல்கிறார் என்று அறியும் நோக்கில், ஒருநாள் அவரை பின் தொடர்ந்தேன்.
பெரிய வீடுகள் அமைந்திருக்கும் தெருவிற்கு செல்வார். ஏதாவது ஒரு வீட்டை தேர்வு செய்து, அந்த வீட்டின் வெளிப்புறம் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள புற்களை வெட்டி, கற்களையும், மணல் கட்டிகளையும் சீர்படுத்தி, அழகு படுத்துவார்.
புல் வெட்டும் சத்தம் கேட்டு, வீட்டு அம்மா வெளியே வந்து, முதியவர் வேலை செய்வதை கவனித்தபடி, அவரை பற்றி விசாரித்து, சுத்தப்படுத்த அனுமதிக்கிறார். வேலை முடிந்ததும், முதியவருக்கு, 100 ரூபாயை தருகிறார்.
அதை வாங்கிய முதியவர், நன்றியோடு இரு கைகூப்பி வணங்கி, விடைபெறுகிறார்.
அடுத்த நாள் அடுத்த தெரு. இதுபோல், அவர் வாழ்க்கை, உழைப்பை மட்டுமே நம்பி நகர்கிறது.
முதியவரை கண்காணித்ததில் இதைத் தெரிந்த நான், அவரின் முயற்சியை பார்த்து, பிரமித்துப் போனேன்.
தா. ஸ்ரீனிவாசன், சாத்தன்விளை.
ஓவிய நண்பரின் நல்ல முயற்சி!
ஓவிய நண்பர் ஒருவர், தன் வருமானத்திற்காக, கடை மற்றும் சுவர் விளம்பரம் என, எழுதி வருகிறார்.
பொது இடங்களில் வளர்ந்திருக்கும், ஆல், அரசு, வேம்பு உள்ளிட்ட மரங்களை, திருட்டுத்தனமாக வெட்டி எடுத்துச் செல்வோரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, தொழில் நேரம் போக, ஓய்வு நேரங்களில், நுாதனமான முயற்சியாக, அந்த மரங்களின் தண்டுப் பகுதியை சுற்றி, குழந்தை ஓவியங்களை வரைந்து வருகிறார்.
இதுபற்றி கேட்டால், 'குழந்தைகளின் முகத்தைக் கண்டால், எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரர்களுக்கும் இரக்கம் பிறக்கும். தண்டுப் பகுதியிலுள்ள குழந்தைகளின் ஓவியத்தை பார்த்து, சிறிதேனும் மனம் பதறி, வெட்டாமல் சென்று விட வாய்ப்பிருக்கிறது.
'அதனால் தான், என் வருமானத்தில் சிறிதளவு தொகையை ஒதுக்கி, பெயின்ட் வாங்கி, மரங்களை காப்பதற்காகவும், மன திருப்திக்காகவும், இச்சேவையை செய்து வருகிறேன்...' என்றார்.
மரங்களை அழிவிலிருந்து காக்க, இப்படி யோசித்ததற்காகவே, ஓவிய நண்பருக்கு, 'சபாஷ்' சொன்னேன்!
— எஸ்.விஜயன், கடலுார்.
