PUBLISHED ON : ஆக 29, 2021

ஆக., 30 கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ணர் என்றாலே புல்லாங்குழல் தான். இந்த புல்லாங்குழலை, இவர் ஒரு சமயம் வெறுத்து ஒடித்து விட்ட கதை தெரியுமா?
வசுதேவர்- - தேவகியின் பிள்ளை, கிருஷ்ணர். இவர், உத்தரபிரதேசத்திலுள்ள மதுராவில் பிறந்தார். இவ்வூர் அருகிலுள்ள ராவல் கிராமத்தில் வசித்த விருஷபானு- - கீர்த்தி தம்பதியின் மகள், ராதா; கோபியர்களின் தலைவியாக விளங்கினாள்.
கிருஷ்ணர், தன் எட்டு வயதில் ராதாவை சந்தித்தார். ராதாவுக்கு கிருஷ்ணரை மிகவும் பிடித்து விட்டது. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல என்பது போல, இவர்களது காதல் தெய்வீகமாக அமைந்தது.
ஒருமுறை, கிருஷ்ணருக்கு புல்லாங்குழல் ஒன்றை பரிசளித்தார், சிவன். இதன் பெயர், பன்சூரி. புல்லாங்குழல் என்பது, மனதைக் குறிக்கும் அடையாளம். மற்ற இசைக்கருவிகளை விட, புல்லாங்குழல் இசை, மிக எளிதில் மனதை மயக்கி விடும். கிருஷ்ணரின் குழலிசையை விரும்பிக் கேட்பாள், ராதா.
ருக்மணியையும், பாமாவையும் திருமணம் செய்தார், கிருஷ்ணர். ராதா, கிருஷ்ணரை காதலித்தாலும் கூட, இதற்காக வருத்தப்படவில்லை.
கிருஷ்ணர் துவாரகையில் வசித்த போது, அவரது அரண்மனைக்கு சென்றாள், ராதா. தனக்கு அரண்மனையிலேயே சேவகம் செய்யும் பணியைக் கேட்டாள். கிருஷ்ணரும் அவளுக்கு அனுமதி அளித்தார். கிருஷ்ணரின் மகா அபிமானி ராதா என்பது, பாமா, ருக்மணிக்கும் தெரியும். அவர்களும் இதற்காக அவள் மீது வருத்தப்படவில்லை.
ஒரு சமயம், கிருஷ்ணரின் பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள், ருக்மணி. அப்போது அங்கு வந்த ராதா, அவரது திருவடி அழகில் மெய்மறந்து போனாள். அவளுக்கு பால் கொடுத்தாள், ருக்மணி.
அது மிக சூடாக இருந்தது.
ஆற வைத்து குடிக்கச் சொன்ன ருக்மணியின் குரல், ராதாவின் காதில் விழவில்லை. திருவடியைப் பார்த்தபடியே அதை பருகி விட்டாள். அப்போது, கிருஷ்ணரின் அடிப்பாதத்தில் கொப்புளம் ஏற்பட்டது. அதிர்ந்து விட்டாள், ருக்மணி.
'கிருஷ்ணா, இது எப்படி ஏற்பட்டது?' என்றாள் பதற்றத்துடன்.
'இதற்கு நீ தான் காரணம் ருக்மணி. தன் இதயத்தில் என் திருவடிகளை பதித்து வைத்திருக்கிறாள், ராதா. அது புரியாமல் நீ, சூடான பாலை அவளுக்கு கொடுத்தாய். அதை அவள் பருகியதும், என் பாதங்கள் கொப்பளித்து விட்டது...' என்றார்.
அந்தளவுக்கு ராதா - கிருஷ்ணர் காதல் உன்னதமானது. ராதா, தன் கடைசி காலம் வந்து விட்டதை உணர்ந்தாள். அப்போது ராதாவை சந்தித்த கிருஷ்ணர், 'உன் கடைசி ஆசை என்ன?' என்றார்.
'உங்கள் புல்லாங்குழல் இசையை கேட்க விரும்புகிறேன்...' என்றாள்.
கிருஷ்ணர் வாசிக்க வாசிக்க, உருகிப் போனாள், ராதா. அந்த மயக்கத்திலேயே அவளது ஆத்மா, கிருஷ்ணருடன் கலந்தது. ராதாவின் இறப்பைத் தாங்க முடியாத கிருஷ்ணர், தன் குழலை ஒடித்து, புதரில்
எறிந்து விட்டார். அதன்பின், அவர் குழல் இசைக்கவே இல்லை.
மதுராவிலிருந்து, 9 கி.மீ., துாரத்திலுள்ள ராவலில், ராதாவுக்கு கோவில் உள்ளது. குழந்தை வடிவில் காட்சியளிக்கிறாள், ராதா.
தம்பதியர் உள்ளத்தளவில் நேசிக்க வேண்டும் என்ற உயரிய சபதத்தை,
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் மேற்கொள்வோம்.
தி. செல்லப்பா
