PUBLISHED ON : நவ 07, 2021

கருத்து சொல்ல வருகிறார், சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனிடம், காதல் காமெடி கலந்த கதைகளை இயக்குனர்கள் சொன்னால், 'ஏன் எங்களைப் பார்த்தால், கருத்து சொல்லும் நடிகராக தெரியவில்லையோ?' என்று எதிர் கேள்வி கேட்கிறார். மேலும், 'நான் பார்க்கத்தான் ஜாலியான பையனா தெரிவேன். எனக்குள் இந்த சமூகத்தைப் பற்றி எக்கச்சக்கமான கவலை உறைந்து கிடக்கிறது. அதனால், சமூக பிரச்னை கொண்ட கதைகளுடன் என்னிடம் வாருங்கள். அப்படியே உணர்ச்சி பிளம்பாய் வெடித்துச் சிதறுகிறேன்...' என்கிறார். இதனால், சிவகார்த்திகேயனை ஜாலி பையனாக நினைத்த இயக்குனர்கள், இப்போது கருத்து நடிகர் என்பதை மனதில் கொண்டு, காரசாரமான கதை பண்ணி வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
ஆண்கள் உள்ளாடை விளம்பர படத்தில், ராஷ்மிகா!
பொதுவாக மார்க்கெட்டில் இருக்கும் நடிகையர், உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தயங்கும் நிலையில், தற்போது, ஆண்கள் உள்ளாடை விளம்பர படத்தில் நடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா. இப்படியொரு விளம்பரத்தில் நடித்ததற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தபோதிலும், மீண்டும் இன்னொரு உள்ளாடை விளம்பரத்தில் நடிப்பதற்கும் அவர் கையெழுத்திட்டுள்ளார். அதோடு, 'எந்த மாதிரி விளம்பரமாக இருந்தாலும் அதன் மூலம் சொல்லப்படும் கருத்துக்களைத்தான் கவனிக்க வேண்டும். உள்ளாடை என்பதால் மட்டமாக கருதக்கூடாது...' என்று சொல்லி, தன்னை விமர்சித்த ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார், ராஷ்மிகா. உளறிக் கொட்டி கிளறி மூடாதே!
— எலீசா
ஐஸ்வர்யா ராஜேஷ், அதிர்ச்சி பதில்!
'மெகா ஹீரோ'கள் கைவிட்ட நிலையில், கதையின் நாயகியாக அடுத்த ரவுண்டை துவங்கி விட்டார், ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த நேரத்தில், த்ரிஷாவின் முன்னாள் காதலரான ராணாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், தன் கதாபாத்திரத்தில் வலுவில்லை, 'டம்மி'யாக உள்ளது என்றதும், நடிக்க மறுத்து விட்டார். 'என்னைப் பொறுத்தவரை, வயதான அம்மாவாக கூட நடிப்பேன். ஆனால், என் கேரக்டரில் அழுத்தம் இருக்க வேண்டும். அப்படித்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருகிறேன். பெரிய, 'ஹீரோ' படம் என்பதற்காக, ஒருபோதும், என்னை தாழ்த்தி நடிக்க மாட்டேன்...' என்று, அந்த படக்குழுவுக்கு, அதிர்ச்சி பதில் கொடுத்துள்ளார். தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை!
—எலீசா
சுதந்திரம் பறி போனது!
'நம்பர் ஒன்' வில்லனாக நடித்து வந்தார், பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக, மார்க்கெட் இல்லாத பல, 'ஹீரோ'கள் வில்லனாக உருவெடுத்திருப்பதால், அவர்களுடன் போட்டி போட விரும்பாமல், குணசித்ர நடிகராக தன், 'ரூட்'டை மாற்றிக் கொண்டுள்ளார். அவரிடத்தில், 'வில்லன், -குணசித்ர நடிகர் இந்த இரண்டில் எது உங்களுக்கு பிடித்திருக்கிறது?' என்று கேட்டனர். 'வில்லன் வேடம் தான். காரணம், ஹீரோ, குணசித்ர வேடம் என்றால், ஒரு வட்டத்திற்குள் நின்று நடிக்க வேண்டும். ஆனால், வில்லன் என்றால், வட்டத்தை விட்டு வெளியே வந்து நடிக்கலாம்; அதில் நடிக்க நிறைய சுதந்திரம் கிடைக்கும். அதனால், நிறைய, 'ஸ்கோர்' பண்ண முடியும்...' என்கிறார், பிரகாஷ்ராஜ்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் உப்பென்னா படங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார், விஜய் சேதுபதி.
* பிசாசு-2 படத்தை இயக்கியுள்ள, மிஷ்கின் அடுத்து இயக்கும் படத்தில், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கிறார்.
* 'சினிமாவில் நிலைத்து நிற்க, திறமை வேண்டும். ஆனால், சினிமா கதவுகளை திறப்பதற்கு, நடிகைகளுக்கு கவர்ச்சி தான் வேண்டும். அது இருந்தால் தான் நம் பக்கம் திரும்பியே பார்ப்பர்...' என்கிறார், மாளவிகா மோகனன்.
அவ்ளோதான்!
