PUBLISHED ON : நவ 07, 2021

வேதங்களில் கரை கண்ட, ஆசார- - அனுஷ்டானங்களை தவறாமல் கடைப்பிடிக்கும் வேதியர் ஒருவர், அம்பாளை பூஜை செய்ய விரும்பினார். வீட்டில் அதற்கான சூழ்நிலை இல்லை.
அப்போது அவரிடம், 'ஏன் கவலைப்படுகிறாய்... அம்பாள் பூஜையை மானசீகமாக செய்தாலே போதும். அவள் அருளை அடையலாம்...' என்று சொல்லி, வழிமுறைகளையும் உபதேசித்தார், பெரியவர் ஒருவர்.
மகிழ்ந்தார், வேதியர்.
மறுநாள் காலை, அருகில் உள்ள ஆற்றில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்து, கரையில் நின்றபடி அம்பிகையின் மானசீக பூஜையை செய்யத் துவங்கினார்.
அப்போது, ஆற்றங்கரைக்கு வந்தார், மகாகவி காளிதாசர். வந்தவர் பல் தேய்த்து கொப்பளித்துத் துப்பினார். ஓசை கேட்டு வேதியர் திரும்பிப் பார்த்தார்.
காளிதாசரின் செய்கையை அனாசாரமாகத் தனக்கு இடையூறாக நினைத்த வேதியர், 'ப்ச்... இவன் அரசருக்கு மிகவும் வேண்டியவன். நாம் ஏதாவது சொல்லப் போய், அது பிரச்னையானால் என்ன செய்வது, நாளை வேறு இடத்திற்குச் செல்ல வேண்டியது தான்...' எனத் தீர்மானித்தார்.
மறுநாள், வேறு இடத்திற்குச் சென்று, நதிக்கரையில் நின்று அவசர அவசரமாக மானசீகப் பூஜையை துவங்கினார், வேதியர்.
அம்பாளை, ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்தி, அபிஷேகங்கள் செய்து, பட்டாடை அணிவித்து, அலங்காரங்கள் செய்து, அணிகலன்களைப் பூட்டினார். அம்பாளின் திருமுடியில் மணிமகுடத்தை வைத்த பிறகு, 'அடாடா... அம்பாளுக்கு மாலை சாற்றாமல் மகுடத்தை வைத்து விட்டோமே... என்ன செய்வது?' என்று திகைத்தார்.
'கிரீடத்தை எடுத்து விட்டு, மலர் மாலையைச் சாற்றலாமா அல்லது மாலை சாற்றாமலே பூஜை செய்யலாமா... மானசீகப் பூஜையைக் கூட முறையாக செய்து, அம்பாளின் அருளைப் பெற முடியவில்லையே...' என்று வருந்தினார், வேதியர்.
'சுவாமி... மகுடத்தை எடுத்து விட்டு, மாலை சாற்றி மறுபடியும் மகுடத்தை அணிவித்து வழிபாட்டைத் தொடரலாம் அல்லது மாலை சாற்றாமலேயே வழிபாட்டை செய்யலாம். அதற்காக அம்பிகை கோபித்துக் கொள்ள மாட்டாள். கருணையே வடிவானவள், துாய பக்தியைத் தான் விரும்புகிறாள். ஏன் வீணாக வருந்துகிறீர்கள்...' என்ற குரல் கேட்டது.
திகைத்த வேதியர் திரும்பிப் பார்த்தார். காளிதாசர் நின்று கொண்டிருந்தார்.
'ஆடு மேய்த்தவன் தானே இவன் என்று, மட்டமாக நினைத்தோம். ஆனால், நம் மனதில் செய்த பூஜையில் நடந்த தவறை உணர்ந்து, அதற்குத் தீர்வும் சொன்ன இவர், மகாபுருஷர் தான்; மாகவிதான்...' என்று தீர்மானித்து, 'காளிதாசரே, என்னை மன்னித்து விடுங்கள்...' என்று கூறி, அவரின் கால்களில் விழுந்தார், வேதியர்.
'சுவாமி... என்ன இது, நேற்று உங்களுக்கு இடையூறாய் இருந்து விட்டேனே என்று வருந்தி, இடத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று இங்கு வந்தேன். இங்கு வந்தால், உங்கள் மானசீகப் பூஜையை உணர்த்தினாள், அம்பிகை. அனைத்தும் அவள் அருளாடல்...' என்றார், காளிதாசர்.
பக்குவம் அடைந்தவர்கள், அடுத்தவர்களின் அவமானங்களைப் பொருட்படுத்தாமல், அவர்களையும் பக்குவப்படுத்துவர் என்பதை விளக்கும் நிகழ்வு இது.
பி. என். பரசுராமன்
