PUBLISHED ON : நவ 07, 2021

விட்டில் பூச்சிகளுக்கு ஆயுசு கெட்டி!
விட்டில் பூச்சிகளுக்கு
ஆயுசு கெட்டி
அவை விளக்கில் விழுந்து
செத்துப் போவதில்லை!
ஏனென்றால்,
விளக்கேத்தும் கலாசாரம்
இப்போதெல்லாம்
விரிசலாகிப் போனதால்!
முள்ளில் விழுந்த சேலையை
மெதுவாய் தான்
எடுக்க வேண்டுமென்பதில்லை
இப்போதெல்லாம்
சேலைகள் மின் விசிறியால்
உலர்த்தப்படுவதால்!
கிராமத்து வீதிகளில்
வண்டித்தடம் மறைந்தே போனது
அதுவே
வாழ்வின் வளமை
வறண்டு போகவும் காரணமாயிற்று!
தும்மல் விழுந்தால் கூட
தாயும், தந்தையும்
நினைப்பதாக நினைக்கும்
நிர்மலமான அன்பு
நிலையானதாகவே வேண்டும்!
கடும் ஜுரமானாலும்
கடும் குளிரானாலும்
தேன் கலந்த
செந்துாரப் பொடியை
வெற்றிலையில் வைத்து
நக்கித் தின்று
நோய் தீர்த்த நாள்
நொடியில் மலர வேண்டும்!
கூரையில் காகம் கரைந்தால்
விருந்து வருமென
ஆருடம் பேசி ஆனந்தப்பட்ட நாள்
அப்படியே மீளவும்
அனுபவப்படல் வேண்டும்!
மாற்றுத் துணி இல்லாத
காலங்களில்
மலர்ந்து கிடந்த மாண்புகள்
மறுபடியும்
மலர்ந்திட வேண்டும்!
அங்கே...
மண் செழிப்புற வேண்டும்
மானுடம்
வாழ வேண்டும்!
சு. கந்தன், மேலச்செவல்
