PUBLISHED ON : டிச 19, 2021

'மெகா ஹீரோ'களை அலற விடும், யோகிபாபு!
காமெடியன், கதையின் நாயகன் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும், யோகிபாபு, தற்போது, லயன் என்ற ஹிந்தி படத்தில், ஷாரூக்கானுடனும் நடிக்கிறார். இந்நிலையில், கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும் படத்தை, தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும், 'டப்' செய்து வெளியிடப் போகின்றனர். இதனால், காமெடியோடு கலந்து கருத்து சொல்லும் கதைகளாக தேடி வருகிறார். அதோடு, தமிழ் சினிமாவில், பல, 'மெகா ஹீரோ'கள் இன்னமும் கோடம்பாக்கத்தையே தாண்ட முடியாமல் தடுமாறி வரும் நேரத்தில், யோகிபாபுவோ, பாலிவுட் வரை ஆதிக்கம் செலுத்துவதைப் பார்த்து, பலரும் மிரண்டு போயுள்ளனர்.
— சினிமா பொன்னையா
பிரமிக்க வைத்த, விஜய்!
விஜய் நடித்து வரும், பீஸ்ட் படத்தில், இதுவரை இந்திய சினிமாவில் எந்த திரைப்படங்களிலும் பயன்படுத்தாத, 'ரெட் வி ரேப்டர்' என்ற உயர் ரக கேமராவை பயன்படுத்துகின்றனர். இது, விலை உயர்ந்தது மட்டுமின்றி, துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யக்கூடிய திறன் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த கேமராவின் விலை, 24 ஆயிரத்து 500 அமெரிக்கன் டாலர். (இந்திய மதிப்பில், 1 டாலர் - 75 ரூபாய்)
சி.பொ.,
ஜொள்ளு விட வைக்கும், வரலட்சுமி
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் ஆந்திரா பக்கம் ஒதுங்கினார், வரலட்சுமி. அப்படி சென்றவர், அங்கேயும் வில்லி, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 'கிளுகிளு' வேடங்களிலும் நடிக்க கூறினர், சில கமர்ஷியல் இயக்குனர்கள். வரலட்சுமியும் ஒப்புக்கொள்ள, இப்போது, அவரைத் தேடிச் செல்கின்றனர். ஆரம்பத்தில், கவர்ச்சி நடிகையாக உருவெடுத்தால், தன், 'இமேஜ்' போய்விடும் என்று தயங்கினார். ஆனால், அதுபோன்ற வேடங்களில் தெலுங்கில் நடித்தால், பெரிய அளவில் கல்லா கட்டலாம் என்பதால், வந்த வரைக்கும் லாபம் என்று, முழுநேர, 'கிளுகிளு' நடிகையாக வலம் வர முடிவெடுத்து விட்டார். வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
எலீசா
எஸ்.ஜே.சூர்யாவுக்கு, 'ரூட்' காட்டிய, ரஜினி!
சமீபகாலமாக, இயக்குனர் அவதாரத்தை ஓரங்கட்டி வைத்து, முழுநேர நடிகராக உருவெடுத்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா. மாநாடு படத்தில் அவரின் வில்லன் நடிப்பை, ரஜினிகாந்த் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். இதனால், உற்சாகத்தில் மிதந்து கொண்டிருப்பவர், 'இதுவரை, எந்த, 'ரூட்'டில் செல்வது என்று, குழப்பத்தில் இருந்து வந்தேன். இப்போது, 'வில்லன் தான் நீ போக வேண்டிய பாதை...' என, ரஜினியே சொல்லி விட்டார். அதனால், கோலிவுட் மட்டுமின்றி, பாலிவுட் சினிமா வரை அதிரடியான வில்லன் வேடங்களாக தேடிப் பிடித்து நடிக்கப் போகிறேன்...' என்று, வரிந்து கட்டி நிற்கிறார்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* சமீபத்தில், மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர், புனித் ராஜ்குமாருக்கு, 'கர்நாடக ரத்னா' என்ற விருதை வழங்க, அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இவ்விருதை பெறும் பத்தாவது நடிகர், புனித்ராஜ்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
* 'ஹீரோயினாக' நடித்த படங்களில் மட்டுமே குத்தாட்டம் போட்டு வந்த, சமந்தா, இப்போது, அல்லு அர்ஜூன் நடித்து வரும், புஷ்பா என்ற படத்தில், 'நானும், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடப் போகிறேன்...' என்கிறார்.
* சுல்தான் படத்திற்கு பிறகு, தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஹிந்திக்கு சென்றார், ராஷ்மிகா மந்தனா. தற்போது, தமிழ், 'ஹீரோ'களில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என, பலரும் தெலுங்கில் நடிக்கத் துவங்கியிருப்பதால், தெலுங்கில் அவர்களுடன் நடித்து அப்படியே தமிழுக்கு வந்துவிட வேண்டும் என்று மாற்றி யோசிக்கத் துவங்கியுள்ளார்.
அவ்ளோதான்!
