தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிச., 24 எம்.ஜி.ஆர்., நினைவு நாள்

நெல்லை ஜெயந்தா எழுதிய, 'வாலி 100' நுாலிலிருந்து: படகோட்டி படத்திற்கான பாடல்கள், 'கம்போசிங்' நடைபெற்ற நேரம்.

முதல் நாள், 'என்னை எடுத்து தன்னைக் கொடுத்து' பாடல் முடிந்திருந்தது. மறுநாளும் சரவணா பிலிம்ஸ் அலுவலகத்தில் அனைவரும் ஆஜராகி இருந்தனர்.

கதையில், மீனவரான எம்.ஜி.ஆர்., கடற்கரை ஓரமாக உலாவியவாறு தனியாக ஒரு பாடல் பாடுவது போன்ற சூழல். பாட்டு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

எம்.ஜி.ஆருடைய இயல்பை வெளிப்படுத்துவது மாதிரி இருந்தால் நல்லது என்று, வாலியிடம் சொல்லப்பட்டது.

தான் ஏற்கனவே எழுதி வைத்துள்ள ஒரு பாட்டு, இந்த இடத்தில் பொருத்தமாக இருக்குமென்று நினைத்தார், வாலி.

ஆனால், அப்போது தான் சிந்தித்து எழுதுவது போல் எழுதி, மெல்லிசை மன்னரிடம் நீட்ட, அவர் அதை தயாரிப்பாளர் வேலுமணியிடம் காட்டினார்.

'எம்.ஜி.ஆருக்கு இதைவிட பொருத்தமான பாட்டு இருக்கவே முடியாது. அவரோட குணாதிசயங்களை மனசுல வச்சு எழுதுன மாதிரி இருக்கு. தியேட்டர்ல எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் சீட்டியடிச்சு துாள் கிளப்ப போறாங்க...' என்று மகிழ்ச்சியாக சொன்னார், வேலுமணி.

எம்.ஜி.ஆருக்காக, கவிஞர் வாலி எழுதியது:

'கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன்

யாருக்காக கொடுத்தான் - உன்

ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை

ஊருக்காக கொடுத்தான்' என்ற கொள்கை பாடல்.

துளசி பழனிவேல் எழுதிய, 'மனிதநேயத்தால் மறையாதவர்' நுாலிலிருந்து:

'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியார் பொறுப்பில், சென்னை அடையாறில், 'அவ்வை ஹோம்' பள்ளி நடத்தி வந்தார், என் அத்தை.

'அந்த பள்ளிக்கு, எம்.ஜி.ஆரிடம் நிதி கேட்டிருந்தார். அதற்கு அவரும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அந்த நேரம் அவரிடம் பணம் இல்லை.

'வாக்குறுதி கொடுத்து விட்டோமே என்று கவலைப்படாமல், கடன் வாங்கி எம்.ஜி.ஆர்., கொடுத்ததாக, என் அத்தை கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்...' என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார், ஜெமினிகணேசன்.

ராஜதாசன் எழுதிய, 'காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர்.,' நுாலிலிருந்து:

எம்.என்.நம்பியாருக்கும், எம்.ஜி.ஆருக்கும் நாடக நாட்களிலேயே அறிமுகமும், நட்பும் உண்டு. இதனால், திரைப்படங்களில் நடிக்க, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும் உண்டு.

திரைப்படங்களில் நீரும் நெருப்புமாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில், ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் நட்பாய் இருப்பர்.

ஒருமுறை, எம்.ஜி.ஆருடன் வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றார், நம்பியார். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று தரிசித்து வர விரும்பினார். இதை அறிந்த எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பு வேலைகள் தடைபடக் கூடாது என தடுத்தார்.

'என்னால் தடங்கலே வராது...' என, நம்பியார் உறுதியளித்ததும் தான், கோவிலுக்கு சென்று வர அனுமதித்துள்ளார், எம்.ஜி.ஆர்.,

'என்னைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆரிடத்தில் சிறிது மன வருத்தம் உண்டு. என்னை கலை உலகத்தில் விட்டு விட்டு, அவர் மட்டும் அரசியலுக்கு சென்று விட்டார். எனக்கு அரசியல் அரிச்சுவடி கூட தெரியாது. அதனால், திரைப்படங்களில் நாங்கள் சண்டையிட்டதை போல, அரசியலில் சண்டை போட முடியாமல் போய் விட்டது.

'இருக்கிற எதிரிகள் போதாதா, இன்னொரு எதிரியா என்று, நீங்கள் கேட்பது புரிகிறது. அதனால் தான் பிழைத்து போகட்டும் என்று விட்டேன்...' என்று சிரித்தபடி கூறினார், நம்பியார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us