PUBLISHED ON : பிப் 06, 2022

'பீரியட்' கதையில், தனுஷ்!தன் வயதுக்கு மீறிய கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து, 'ஸ்கோர்' பண்ணி வரும், தனுஷ், தன் உருவத்தை மீறிய, 'கேங்ஸ்டர்' கதைகளிலும் நடிக்க தயங்குவதில்லை. அந்த வகையில், இதற்கு முன், புதுப்பேட்டை மற்றும் ஜகமே தந்திரம் போன்ற படங்களில், 'கேங்ஸ்டர்' கதையில் நடித்தவர்; அடுத்தபடியாக, தன், 47வது படத்திலும், 'கேங்ஸ்டர்' ஆக நடிக்கிறார். 'இந்த படம், 1940களில் நடக்கும், 'பீரியட்' கதையில் தயாராக இருப்பதால், அந்த காலகட்டத்து இளைஞனாக, 'கெட் - அப்'பை முழுமையாக மாற்றி நடிக்கப் போகிறேன்...' என்கிறார்.சினிமா பொன்னையா
ஆண்ட்ரியாவின் வித்தியாசமான, 'டீலிங்!'ஆண்ட்ரியாவை பொறுத்தவரை, தன்னை தேடி வரும் அத்தனை படங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. முதலில் கதைச் சுருக்கத்தை அனுப்ப சொல்லி, அது தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே, இயக்குனர்களை நேரில் அழைத்து, மொத்த கதையும் கேட்கிறார். கதைச்சுருக்கம் பிடிக்கவில்லை என்றால், 'இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை...' என்று, இயக்குனர்களுக்கு, 'மெசேஜ்' அனுப்பி விடுகிறார். 'பத்து கதைகள் கேட்டால், அதில், இரண்டு தான் எனக்குப் பிடிக்கிறது. காசுக்காக, பிடிக்காத கதைகளில் நடிக்க ஒருபோதும் விரும்புவதில்லை. என் இந்த, 'டீலிங்' மற்றவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், எனக்கு இது ரொம்பவே பிடித்திருக்கிறது...' என்கிறார். உண்மையைச் சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!— எலீசா
பாம்பை பச்சை குத்திய, ஓவியா!பெரும்பாலான நடிகையர் தங்களது உடம்பின், 'சீக்ரெட்' பகுதிகளில் எல்லாம் பச்சைக் குத்திக்கொள்வதை, 'பேஷன்' ஆக வைத்திருக்கின்றனர். காதலரின் பெயர், பிடித்த மலர்கள், பிடித்த விலங்குகள் என்று பச்சைக் குத்திக்கொள்வர். அந்த வரிசையில் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, ஹன்சிகா போன்ற நடிகையருக்கு முக்கிய இடம் உண்டு. இந்த வரிசையில் தற்போது, ஓவியாவும் சேர்ந்துள்ளார். இவர், தன் காலில் பாம்பை பச்சைக் குத்தியிருக்கிறார். 'பாம்பு என்றால் படையும் நடுங்குமே...' என்று அவரிடம் சொன்னால்... 'நான் நடுங்க மாட்டேன். அந்த பாம்புதான் எனக்கு பயப்படணும். அதனால் தான், அதை என் காலில் வைத்திருக்கிறேன்...' என்கிறார். எலீசா
'டாப் கியர்' போடும், ராசிகண்ணா!திடீரென்று மார்க்கெட் சூடுபிடித்து விட்டதை அடுத்து, மேலும் எகிறியடிக்கும் முயற்சியாக, 'ஐட்டம் டான்ஸ்' நடிகையருக்கே, 'டப்' கொடுக்கும் நடிகையாக சூடு காட்டி நிற்கிறார், ராசிகண்ணா. அதிலும், 'ஹீரோ'களின், 'ரேஞ்சை' பொறுத்து, தன் உடைகளின் அளவை குறைத்து நடிக்க தயாராக இருப்பதாக, 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்' கொடுக்கும் நடிகை, 'டபுள் ஹீரோயினி' கதைகள் என்றால், உடன் நடிக்கும் நடிகையர் தெறித்து ஓடும் அளவுக்கு துகிலுரிந்து நிற்கிறார். இதனால், ராசிகண்ணா நடிக்கும் படங்களில், இன்னொரு நாயகியாக நடிக்க வேண்டும் என்று சொன்னாலே, மெகா நடிகையர் மிரண்டு ஓடுகின்றனர். அந்த அளவுக்கு, 'டாப் கியர்' போட்டு துாக்குகிறார், அம்மணி. வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தைத் தள்ளியது!எலீசா
விஜயின், 'டபுள் ஆக் ஷன்!'அழகிய தமிழ் மகன் மற்றும் பிகில் என, சில படங்களில், 'டபுள் ஆக் ஷன்' கொடுத்துள்ள விஜய், தன், 66வது படத்திலும், இரண்டு வேடங்களில் நடிக்கப் போகிறார். அதில் ஒரு வேடத்தில், 'எரோட்டோமேனியா' என்றொரு மன நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னை யாரோ காதலிப்பதை போன்று நினைத்தபடியே இருப்பராம். இந்த உணர்வில் கலந்து, அவர் காதலில் மூழ்கிப் போவது வித்தியாசமான முறையில் படமாக்கப்பட உள்ளதாம். அதனால், விஜயின், 66வது படம், அவரை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் கதையில் உருவாகப் போகிறது என்கின்றனர், சினிமா வட்டாரத்தினர்.சினிமா பொன்னையா
சினி துளிகள்!* இதுவரை புதிய கதைகளில் மட்டுமே நடித்து வந்த சந்தானம், இப்போது மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் தமிழ், 'ரீ - மேக்'கிலும் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்காக மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களைப் பார்க்க துவங்கியுள்ளார்.
அவ்ளோதான்!
