PUBLISHED ON : பிப் 06, 2022

நம்பிக்கையை ஒருபோதும் கைவிடக் கூடாது. செய்ய வேண்டியவைகளைச் செய்வோம்; முடிவு, தெய்வத்தின் கையில். நிலச்சீர் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தத் துவங்கியபோது, குறிப்பிட்ட சில நிலங்களை உழுபவருக்கே கொடுத்துவிட வேண்டும் என்று சட்டம் வந்தது.அந்த நேரத்தில், தன் ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த ஓர் விதவைத் தாய், 30 ஏக்கர் நிலம் வைத்திருந்தாள். அதை சோமன் என்பவரிடம் குத்தகைக்கு விட்டு, அதில் வரக்கூடியதை வைத்து குடும்பத்தை நடத்தியதுடன், மகனையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள்.அன்றாடம் கோவிலுக்கு சென்று, மகனுக்காக தெய்வத்தை வழிபடுவதும், அந்த தாயின் தினசரி கடமையாக இருந்தது. நிலச்சீர்திருத்தச் சட்டம் அந்த தாயை நடுங்கச் செய்தது. ஏனென்றால், தான் உழும் நிலத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ள அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்திருந்தார், சோமன்.சோமனிடம் எவ்வளவோ கெஞ்சியும், அவர் கேட்பதாக இல்லை. மனம் உடைந்து வீடு திரும்பினாள்.மறுநாள் காலை, வழக்கம்போல் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, 'தெய்வமே... ஏதாவது நல்லவழி காட்டு...' என்று மனமார பிரார்த்தித்துத் திரும்பினாள். கோவில் வாசலில் அவளைச் சந்தித்த ஒருவர், 'அம்மா... விபரம் கேள்விப்பட்டேன், கவலைப்படாதீர்கள். கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் சோமனின் மகன் சகனிடம் போய்ச் சொல்லிப் பாருங்கள். அவன் இரக்கம் உள்ளவன், படித்தவன், நல்லவன்...' என்றார்.உடனே சகனிடம் ஓடினாள், ஏழைத்தாய். தன் ஏழ்மையை சொல்லி, குடும்ப நிலையையும் சொல்லிக் கெஞ்சினாள். 'அம்மா... கவலைப்படாதீர்கள், என் அப்பாவிடம் சொல்லி, உங்கள் நிலத்தை உங்களுக்கே தரச்சொல்கிறேன். இல்லாவிட்டால், கண்டிப்பாகப் பாதி நிலமாவது கிடைக்கும்படிச் செய்கிறேன்...' என்று வாக்குறுதி தந்தான், சகன்.அப்பாவிடம் எவ்வளவோ வாதாடியும் கேட்காததால், சொத்தில் தனக்குள்ள பங்கைப் பிரித்துத் தரும்படிக் கேட்டான். வேறு வழியற்ற நிலையில், மகன் பங்காக, 15 ஏக்கர் நிலத்தை அவன் பெயருக்குப் பதிவு செய்து கொடுத்தார். அதை அப்படியே, ஏழைத்தாய் பெயருக்கே எழுதிக் கொடுத்து விட்டான், சகன். பத்தாண்டுகள் ஆகின. ஒருநாள், சகன் வீட்டு முன், குதிரை வண்டியில் வந்து இறங்கிய ஏழைத்தாய், 'அப்பா... என்னை நினைவிருக்கிறதா?' என, அவனிடம் கேட்டாள்.'நன்றாக நினைவிருக்கிறது. வாருங்கள்...' என வரவேற்றான், சகன். 'அப்பா... 10 ஆண்டுகளுக்கு முன், பெரும் தியாக உள்ளத்துடன், 15 ஏக்கர் நிலத்தை எனக்குத் திருப்பித் தந்தாயே, அதை வைத்து, என் பிள்ளையை முன்னுக்குக் கொண்டு வந்தேன். அவனுக்கு, இப்போது வேலை கிடைத்து விட்டது.'ஆகையால், இனி அந்த நிலத்தை நீயே வைத்துக்கொள். நல்ல நேரத்தில் நீ செய்த உதவிக்காக, என் வீட்டையும் உனக்கே கொடுப்பதெனத் தீர்மானித்து விட்டேன்...' என்றாள், ஏழைத்தாய்.'அம்மா... நானும் உங்கள் பிள்ளை தான்...' என்று சொல்லியபடியே, காலில் விழுந்து வணங்கினான், சகன்.நல்லவர்கள் என்றும் இருக்கின்றனர், எங்கும் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தெய்வம் காப்பாற்றும் என்பதை விளக்கும் வரலாறு, இது. பி. என். பரசுராமன்
