PUBLISHED ON : பிப் 06, 2022

பத்திரிகையாளர் நவீனன், ஒரு பேட்டியில் கூறியது:திருச்சியில் தேவர் நாடக அரங்கில் சில புரட்சிகரமான கருத்துகளை கொண்ட நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார், எம்.ஆர்.ராதா.ராமாயணத்திற்கு எதிராக, 'கீமாயணம்' என்ற பெயரால் நாடகம் நடத்திக் கொண்டிருந்த போது, நாடகம் பார்க்க வந்தவர்களில் சிலர், நாடகம் நடத்த விடாமல் கிளர்ச்சி செய்து, 'நாடகம் நடத்தக் கூடாது...' என்று, கோஷமிட்டனர்.எம்.ஆர்.ராதா மேடையில் தோன்றி, 'உங்களுக்கு இஷ்டமிருந்தால் நாடகம் பாருங்கள், விருப்பம் இல்லையென்றால் டிக்கெட் பணத்தை திரும்ப தந்து விடுகிறேன். உங்கள் கலாட்டாவிற்கு பயந்து நாடகத்தை நிறுத்த மாட்டேன்...' என்று கோபத்துடன் எதிர் குரல் எழுப்பினார்.அதற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன், அங்கு நாடகங்களை நடத்தினார்.
ஆர்.வி.பதி எழுதிய, 'உலக வெற்றியாளர்கள்' நுாலிலிருந்து:ஒரு சமயம், நெப்போலியனுக்கு, ஐரோப்பாவில், விருந்து உபசார விழா நடத்தப்பட்டது. அவ்விருந்தில் நெப்போலியனும், அவருடைய தளபதி முதலானோரும் கலந்து கொண்டனர்.நெப்போலியனுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதை அறிந்தவர்கள், அவருடைய தைரியத்தை சோதிக்க விரும்பினர்.விருந்தில் நெப்போலியன் உட்பட அனைவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர். அச்சமயம், வெளியே பீரங்கி வெடிக்கச் செய்யப்பட்டது. எதிர்பாராத அந்த பெரும் சத்தத்தை கேட்டு அங்கிருந்தோர் திடுக்கிட்டு, பயந்து போயினர். சிலர், தங்கள் கையிலிருந்த தேநீர் கோப்பைகளை தவற விட்டனர்.நெப்போலியன் மட்டும் பயப்படாமல், பதட்டப்படாமல், 'வெளியே ஏதோ சத்தம் கேட்டதே, அது என்ன சத்தம்...' என்று கேட்டார்.நெப்போலியன் உண்மையிலேயே எதற்கும் பயப்படாத ஒரு மாவீரன் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து, அவரது தைரியத்தை பாராட்டினர்.நெப்போலியனின் மாபெரும் வெற்றிக்கு, அவருடைய இந்த துணிச்சலான மனநிலையே காரணம்.
திரைப்பட கதை - வசனகர்த்தாவான கலைஞானம் எழுதிய, 'சினிமா சீக்ரெட்!' நுாலிலிருந்து:தமிழிலும், தெலுங்கிலுமாக நட்சத்திரங்களை வைத்து இரு மொழியில் ஒரே நேரத்தில், காதல் படுத்தும் பாடு படப்பிடிப்பு நடந்தது. தெலுங்கு படத்தில் கதாநாயகியாக கிருஷ்ணகுமாரி நடித்து வந்தார். நான் அவ்வப்போது வசனங்களில் திருத்தம் தேவைப்பட்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்கு போவேன்.அப்படி போயிருந்தபோது, தெலுங்கு படத்திற்காக, கதாநாயகி கிருஷ்ணகுமாரியும், அவரின் தோழி வேடத்தில் நடிக்கும் தெலுங்கு பெண்ணும், 'மேக் - அப்' போட்டு அறையிலிருந்து வெளியே வந்தனர்.அந்த தோழி வேஷ இளம்பெண், களையான முக அழகால் என் கண்ணையும் மனசையும் கவர்ந்தாள்.'இந்த பெண்ணை எங்கய்யா புடிச்சீங்க...' என, புரொடக் ஷன் மேனேஜரிடம் கேட்டேன்.'சார்... உங்க வீடு இருக்கும் மயிலாப்பூர் காரணீஸ்வரர் தெருவுல தான், அந்த பொண்ணு வீடும் இருக்கு...' என்றார்.'வாம்மா... வந்து இப்படி உட்கார்...' என்றேன்.சரளமாக தமிழ் பேசியபடி அமர்ந்தாள், அந்த பெண்.'என் மனைவி அடிக்கடி உன்னை பத்தி சொல்லுவா. ஆமா, இவ்வளவு நல்லா தமிழ் பேசறியே... நல்ல லட்சணமாவும் இருக்கியே, பின்ன ஏன் தெலுங்கு படத்துல, அதுவும் தோழி வேஷத்துல நடிக்கிற...' என, கேட்டேன்.'வாய்ப்பு குடுத்தா தான சார் திறமையை காட்ட முடியும்...' என்றாள்.அந்த பெண் பிரபலமாவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆர்., -சிவாஜியுடனெல்லாம் ஜோடி போடுவார், உடை மற்றும் கூந்தல் அலங்கார ஸ்டைலில் புது 'ட்ரெண்டை'யே உருவாக்குவார் என்றெல்லாம் அப்போது நான் நினைத்திருக்கவில்லை. அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான், வாணிஸ்ரீ.
நடுத்தெரு நாராயணன்
