தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு -நான், 17 வயது இளைஞன்; பிளஸ் 2 படிக்கிறேன். எனக்கு, 14 மற்றும் 10 வயதில் இரு சகோதரிகள். நகைக்கடை வைத்திருக்கிறார், அப்பா. அம்மா, இல்லத்தரசி. அப்பா வழி பாட்டி படுத்த படுக்கையாய் கிடக்கிறார்.நான் மிகவும் லட்சணமாக இருப்பேன். படிப்பின் மீது ஆர்வம் அதிகம். படித்து, வன இலாகா அதிகாரியாய் காட்டுக்குள் வலம் வர வேண்டும் என்பது, என் ஆசை. குடும்ப ஜோசியரிடம் என் ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொன்னார், அப்பா.ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோசியர், 'உங்க பையனுக்கு இன்னும் நான்கு மாதங்களில், 17 வயது பூர்த்தியாகிறது. அதன் பின், 14 ஆண்டுகள், உங்கள் மகனுக்கு இரட்டை சனி பீடிக்கிறது.'இந்த காலகட்டத்தில் உங்கள் மகனுக்கு திருமணம் செய்தால், ஜாதகன் அப்பா அகால மரணமடைவார் அல்லது வியாபாரம் நொடித்து தெருவுக்கு வருவார். ஆகையால், உங்கள் மகனுக்கு நான்கு மாதங்களுக்குள் திருமணம் செய்து வைத்து விடுங்கள்...' என்றார்.ஜோசியர் சொல்வது, அப்பாவுக்கு எப்போதுமே வேத வாக்கு. எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார். 'ஜோசியத்தை நம்பாதீர்; எனக்கு இப்ப திருமணம் வேண்டாம். 25- - 28 வயதில் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை படிக்க விடுங்கள்...' என, அப்பாவின் கால்களில் விழுந்து, கெஞ்சினேன். 'உன் கல்யாணத்துல மூணு மாங்கா அடிக்க போறேன். ஒண்ணு, இரட்டை சனியை ஜெயிக்க கல்யாணம். இரண்டு, மரண படுக்கையில் இருக்கும் என் அம்மா, தன் பேரன் கல்யாணத்தை கண் குளிர பார்ப்பாள். மூன்று, குடும்பஸ்தனாக நீ, என் நகை கடையை பார்ப்பாய். கல்யாணத்துல எதாவது குழப்பம் பண்ண பார்த்தேன்னா தொலைச்சுப்புடுவேன்...' என, மிரட்டுகிறார்.என் உறவினர்களிடம் முறையிட்டேன். அவர்களும், 'அப்பா சொல்வதை கேள்...' என்கின்றனர்.'இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கலைன்னா, நான் தற்கொலை செஞ்சிப்பேன்...' என்கிறார், அம்மா.என் தரப்பு நியாயத்தை பேச வந்த வகுப்பு ஆசிரியரை, அடித்து விரட்டி விட்டார், அப்பா.எனக்கு பெண் கொடுக்க சம்மதித்துள்ள பெண்ணின் அப்பாவை போனில் எச்சரிக்கை செய்தேன்.'போங்க தம்பி, விளையாடாதீங்க... உங்கப்பாவை எனக்கு, 20 வருஷமா தெரியும்... விரும்பி தான் சம்பந்தம் பேசுறார்.'என் மகளுக்கு, 200 பவுன் நகை போடுறேன்; பத்தாதுன்னா கேளுங்க கூட போடுறேன். 17 வயசுல கல்யாணம் பண்ணிக்கிறதுல ஆயிரம் சவுகரியங்கள் உள்ளன. மவுனமாக இருந்து ஆகவேண்டிய காரியங்களை பாருங்க...' என்கிறார்.வீட்டை விட்டு ஓடி போய் விடலாமா அல்லது தற்கொலை செய்து கொள்ளலாமா என, தீவிரமாக யோசிக்கிறேன். இல்லையென்றால், எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கி திருமணத்துக்கு சம்மதிக்கவா?மிக சீக்கிரம் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் தந்து, என்னை இந்த இக்கட்டிலிருந்து மீட்டெடுங்கள், அம்மா.— இப்படிக்கு,அன்பு மகன்.

அன்பு மகனுக்கு -இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதில் சில சாதகங்களும், பல பாதகங்களும் உள்ளன. பணம் சார்ந்த உலகில் ஓர் ஆணோ, பெண்ணோ, படிக்க, வேலைக்கு செல்ல, பொருளாதார ரீதியாய் சொந்தக்காலில் நிற்க, குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் தேவை.ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால், 25 வயதில் சுய அடையாளத்தை வடிவமைத்து விடலாம். அப்பாவின் நகைக்கடை தொழிலை கவனிக்கக் கூட, முதுகலை மேலாண்மை நிர்வாகம் படிக்க வேண்டி வரும்.

இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...உன் படிப்பை நிறுத்த வேண்டாம். 25 வயதில் திருமணம் செய்து வைத்தால் போதுமானது என்ற உனக்கு சாதகமான கருத்துகள் கூறும், இன்னொரு ஜோசியரை அழைத்து வந்து, சொல்ல சொல் அல்லது முதல் ஜோசியர் சொன்ன ஜோசியத்துக்கு, ஏதேனும் பரிகாரம் இருந்தால் கேட்டு, அப்பாவை செய்ய சொல்.உன் பிடிவாதத்துக்கு அப்பா மசியவில்லை என்றால், குழந்தைகள் திருமண தடுப்பு உதவி எண், '1098'க்கு பேசி, அவர்களின் உதவி கேள். குழந்தைகள் திருமண நன்னடத்தை அதிகாரியோ, முதல் வகுப்பு குற்றவியல் நடுவரோ, மாநகர நீதிபதியோ, உன் பிரச்னையை தீர்த்து வைப்பார்.நாளை என்பது யாருக்கும் நிச்சயமில்லை என்ற யதார்த்த உண்மையை மறந்து, ஆயிரம் அபிலாஷைகளுடன் வாழ்கிறோம்.மனைவி எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்வார், உனக்கு ஜோசியம் சொன்ன ஜோசியர் எத்தனை ஆண்டு உயிர் வாழ்வார், யாருக்கு தெரியும்?மூடநம்பிக்கைகளை தவிர்த்து, ஆக்கரீதியான ஆன்மிகத்தில் திளைக்க, அப்பாவிடம் சொல்ல சங்கடமாய் இருந்தால், அறிவார்ந்த பெரியவர் யாரையாவது விட்டு அறிவுரை சொல்ல சொல்.நீ விரும்பின படிப்பை படித்து, 25 வயதுக்கு மேல் படித்த பெண்ணை பார்த்து மணமுடி.காதல் திருமணம் ஒன்றும் தேவகுற்றம் அல்ல. திருமண வயதை எட்டிய பின், உடல் பொருத்தம், மன பொருத்தம் உள்ள பெண் கிடைத்தால், தாராளமாக காதல் செய்.திருமணத்துக்கும், தாம்பத்யத்துக்கும் ஏங்கும் விடலை ஆண்கள் மத்தியில், நீ ஒரு சொக்கதங்கம். உன் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us