PUBLISHED ON : ஏப் 24, 2022

ஹாலிவுட்டுக்கு செல்லும், பிரபாஸ்!
பாகுபலி படத்தின் மூலம், உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராகி விட்டார், பிரபாஸ். அதனால், தற்போது நேரடி ஹிந்திப் படங்களிலும் நடித்து வருபவர், அடுத்தபடியாக, ஒரு பிரமாண்ட ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு, ஒப்பந்தமாகியுள்ளார்.
'பாகுபலி படத்தை விடவும், பிரமாண்டமான பட்ஜெட்டில் அந்த படம் தயாராக இருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு, அப்படத்தில் அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சிகளிலும் நடிக்கவிருக்கிறேன். அந்த படத்துக்காக என், 'பாடி லாங்குவேஜை' முழுமையாக மாற்றி நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்...' என்கிறார், பிரபாஸ்.
— சினிமா பொன்னையா
'ஹோம்லி இமேஜை' துாக்கி எறிந்த, இனியா!
வாகை சூடவா இனியாவுக்கு, எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இல்லை. அதனால், சில படங்களில் வில்லியாகவும், மம்மூட்டி போன்ற மூத்த நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்தார். இந்நிலையில், மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்து அடுத்த ரவுண்டை துவக்கியுள்ள இனியா, யாரிடத்திலும், 'ஹீரோயின்' வாய்ப்பு கேட்பதில்லை.
மாறாக, 'கவர்ச்சிகரமாக அல்லது வில்லத்தனமாக ஏதாவது, 'வெயிட் ரோல்' இருந்தால் கொடுங்கள். முடிந்தவரை இறங்கி அடிக்கிறேன்...' என்று, வரிந்து கட்டியுள்ளார். கூடவே, 'என் வில்லி அவதாரத்துக்கு, படையப்பா நீலாம்பரி தான் ரோல் மாடல். அதை மனதில் கொண்டு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, கூறுகிறார்.
எலீசா
'இமேஷை' மாற்றும், சன்னி லியோன்!
ஜெய் நடித்த, வடகறி என்ற படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழில் அறிமுகமான, சன்னி லியோன், அதையடுத்து, வீரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. என்றாலும், 'தமிழ் சினிமாவில் கொடி நாட்டியே தீருவேன்...' என்ற வெறியோடு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தார், சன்னி லியோன்.
தற்போது, ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, 'சன்னிலியோன் என்றாலே, பாலிவுட் சினிமா ஆபாச நடிகை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள், இந்த படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் என்னை அதிரடியான, 'பார்பாமன்ஸ்' நடிகையாக பார்க்கப் போகின்றனர். அந்த அளவுக்கு, இதுவரை சினிமாவில் நான் கற்றுக்கொண்ட மொத்த நடிப்பு வித்தையையும் இந்தப் படத்தில் இறக்கி வைத்துள்ளேன்...' என்கிறார்.
— எலீசா
தெலுங்கில், சொல்லி அடிக்கும், வரலட்சுமி!
தமிழை விட தெலுங்கில், தனக்கு பெரிய சம்பளம் தருவதாக பெருமையாகப் பேசிக் கொள்ளும் வரலட்சுமி சரத்குமார், தன் அப்பா வயது, கதாநாயகர்களுடன் நடிப்பதற்கும் தயங்குவதில்லை. தற்போது, பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிப்பவர், தொடர்ந்து, 'சீனியர் சிட்டிசன்'களுடன் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அடுத்தபடியாக, தமிழில் நடிப்பதற்கு, கோலிவுட் தயாரிப்பாளர்கள் அழைத்தபோது, 'தெலுங்கில் தருவது போன்று, பெரிய சம்பளம் தந்தால் நடிக்கிறேன். இல்லையேல், என் வீடு இருக்கிற பக்கமே வந்துடாதீங்க...' என்று எகிறியடித்திருக்கிறார், அம்மணி.
— எலீசா
ஹிந்தி சினிமாவை தவிர்க்கும், மகேஷ்பாபு!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான, மகேஷ் பாபு நடித்த சில படங்கள், ஹிந்தியிலும், 'ரீ - மேக்' செய்யப்படுகின்றன. அந்த படங்களில் நடிக்க, ஹிந்தி பட இயக்குனர்கள் அழைத்தபோது, மறுத்து விட்டார்.
'என்னை, சூப்பர் ஸ்டார் நடிகர் ஆக்கியது, தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான். அதனால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து, தெலுங்கு நடிகராக மட்டுமே இருப்பேன்.
'அதோடு, நான் நடிக்கும் தெலுங்கு படங்கள், உலக அளவில் வியாபாரம் ஆகி வருகின்றன. அதனால், நான் நடிக்கும் படங்களை, 'டப்பிங்' செய்து, ஹிந்தியில் வெளியிடுவேன். ஒருபோதும் நேரடி ஹிந்திப் படங்களில் நடிக்க மாட்டேன்...' என்று, தேடி வந்த வாய்ப்புகளை, திருப்பி அனுப்பியிருக்கிறார், மகேஷ்பாபு.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* ராஜ்கிரண் நடிப்பில், ப.பாண்டி என்ற படத்தை இயக்கிய, தனுஷ், அதன்பிறகு இயக்கிய, நான் ருத்ரன் என்ற படம், சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. தற்போது, காமெடி கதையில் ஒரு படத்தை இயக்கி, நடிக்க தயாராகி வருகிறார்.
* நகர்ப்புற கதைகளை விட, மதுரை போன்ற மண் வாசனை கதைகளில், கிராமத்து இளைஞனாக நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டுகிறார், விஷால்.
அவ்ளோதான்!
