PUBLISHED ON : ஜூன் 19, 2022

பாலிவுட் - டோலிவுட், 'ஹீரோ'களை பின் தள்ளிய, விஜய்!
இந்திய சினிமாவில், அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் பட்டியல், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த, 'டாப் 10' பட்டியலில், பாலிவுட் - டோலிவுட் 'ஹீரோ'களை பின்தள்ளி, முதலிடம் பிடித்திருக்கிறார், விஜய்.
இரண்டாமிடத்தை, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரும்; மூன்றாமிடத்தை, பிரபாசும்; நான்காம் இடத்தை, அல்லு அர்ஜுனும்; ஐந்தாம் இடத்தை, ஹிந்தி நடிகர் அக் ஷய் குமாரும்; ஆறாவது இடத்தை, அஜித்குமாரும் பிடித்துள்ளனர்.
இப்போது தான் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார், விஜய். இந்நிலையில், இந்திய அளவில் பிரபலமாக உள்ள பல, 'ஹீரோ'களை ஓரங்கட்டி, அவர் முதலிடத்தை பிடித்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து, தெலுங்கு, ஹிந்தி படங்களில் பரவலாக நடிக்கும்போது, அசைக்க முடியாத, நம்பர் -ஒன் இடத்தை, விஜய் பிடித்து விடுவார் என்ற கருத்து எழுந்துள்ளது.
சினிமா பொன்னையா
சர்ச்சை கதைகளை தேடும், வாணி போஜன்!
இன்றைய சினிமாவில் திறமை, அழகு இருந்தால் மட்டும் ஒரு நடிகை கோலோச்சிவிட முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளார், வாணி போஜன். அதன் காரணமாகவே, தன்னை சந்திக்கும் நிருபர்களிடம், முன்னணி 'ஹீரோ'களுடன் இணைத்து, 'கிசுகிசு'க்கள் வெளியிடுமாறு கூறி வருகிறார்.
அதோடு, வழக்கமான கதாபாத்திரங்களாக இல்லாமல், சர்ச்சைகளை ஏற்படுத்தும் கதைகளில் நடித்து, பரபரப்பு வளையத்திற்குள் வரவேண்டுமென்று தயாராகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், அரசியல் மற்றும் பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட அதிரடி கதைகளில் நடிப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார், வாணி போஜன்.
எலீசா
ரகசியம் காக்கும், விக்ரம்!
ஒவ்வொரு படத்திலும், விதவிதமான, 'கெட் - அப்'பில் நடிக்கும், விக்ரம், அந்த படங்கள் வெளியாவதற்கு முன், அந்த ரகசியம் வெளிப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, வெளியில் தலை காட்டுவதே இல்லை. அதோடு, ஒரு படத்தில் நடித்து முடித்ததும், அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, அடுத்த படத்தில் அவர் நடிக்க துவங்கி விடுகிறார்.
இதனால், முதலில் நடித்த படத்தின், 'பிரமோஷனில்' கலந்து கொண்டால், அதன் பிறகு நடித்து வரும் படத்தின், 'கெட் - அப்' வெளியாகி விடும் என்பதால், தவிர்த்து வருகிறார். 'இப்படி, என், 'கெட் - அப்' வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக, 'பிரமோஷன்'களை தவிர்த்து வருகிறேன்...' என்கிறார், விக்ரம்.
சினிமா பொன்னையா
பெருமை அடிக்க விரும்பாத, ராதிகா ஆப்தே!
தமிழில் ரஜினி நடித்த, கபாலி உட்பட பல படங்களில் நடித்த பாலிவுட் நடிகை, ராதிகா ஆப்தே, சில படங்களில், நிர்வாண காட்சிகளில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தியவர். அதோடு இந்தியா முழுக்க ஏராளமான ரசிகர்களை கொண்டவரான ராதிகா ஆப்தே, 'சில நடிகையரை போன்று மூன்றாம் தரப்பு நடிகர்களுடன் நடித்துவிட்டு பெருமை அடிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்தபோது கூட, இதை பாலிவுட்டில் நான் பெருமையாக பேசிக் கொண்டதில்லை.
'அதோடு, சினிமா துறையில் நடிகையாக இருக்கும் நான், படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி விட்டால், சாதாரணமான பெண்ணாகி விடுவதோடு, சினிமா குறித்து ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வதில்லை. அந்த அளவுக்கு சினிமா வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று தரம் பிரித்து வாழ்ந்து வருகிறேன்...' என்கிறார்.
— எலீசா
சினி துளிகள்!
* அஜித்தின், விவேகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த, அக் ஷரா ஹாசன், தற்போது, விஜய் ஆண்டனி நடித்துள்ள, அக்னிச்சிறகுகள் படத்திலும், முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.
* பிகில் படத்தில் விஜய் நடித்த, ராயப்பன் என்ற கேரக்டரின் இளமை காலத்தை மையமாகக் கொண்ட கதையில், பிகில் - 2 படத்தை எடுக்க, தயாராகி வருகிறார், அட்லி.
* லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று திரும்பி உள்ள, தன் மூத்த மகள் அவந்திகாவை, சினிமாவில் அறிமுகம் செய்ய, தயாராகி விட்டார், குஷ்பு.
* கே ஜி எப் - 2 படத்தில், நாயகியாக நடித்த, ஸ்ரீநிதி ஷெட்டி, அப்படத்தின் வெற்றி காரணமாக, தன் சம்பளத்தை, 2 கோடியாக உயர்த்தி, தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவ்ளோதான்!
