
ஒரே படத்தில் இணையும், ரஜினி - கமல்!
கமலும், ரஜினியும், ஆரம்ப காலத்தில், பல படங்களில் இணைந்து நடித்தனர். ஒரு கட்டத்தில், தனித்தனியாக நடிக்க துவங்கினர். அதன்பிறகு, அவர்களை இணைத்து படம் இயக்க, பலரும் முயற்சித்தபோதும், அது பலன் கொடுக்கவில்லை.
இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்த, கமலஹாசன், மீண்டும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை தயாரிக்கப் போகிறார். அந்த படத்தில், ரஜினி, 'ஹீரோ'வாக நடிக்கிறார்.
ரஜினியும் - கமலும் இணைந்து நடிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி நடிக்கும் படத்தை தயாரித்து, அவருடன் இணையப் போகிறார், கமல்ஹாசன்.
— சினிமா பொன்னையா
படப்பிடிப்பு தளங்களை கலகலப்பாக்கும், வடிவேலு!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி - 2 மற்றும் மாமன்னன் என, பல படங்களில் நடித்து வரும், வடிவேலு, முன்பெல்லாம் கேமரா முன் வரும்போது மட்டும் தான், தன்னை காமெடியனாக வெளிப்படுத்துவார். மற்ற நேரங்களில் சீரியஸாகத்தான் அமர்ந்திருப்பார்.
அப்படிப்பட்டவர், இப்போது, கடந்த காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரஸ்யமான கதைகளை கூறி, அனைவரையும் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைக்கிறார்.
அதோடு, தான் அடுத்து நடிக்கப் போகும் காமெடி காட்சியையும் அனைவர் முன்னிலையிலும் நடித்துக் காட்டி, ஒத்திகை பார்த்த பின்பே, கேமரா முன், 'என்ட்ரி' கொடுக்கிறார், வடிவேலு.
— சி.பொ.,
த்ரிஷாவின் நம்பிக்கை!
தமிழ் சினிமாவில், 23 ஆண்டுகளாக நடித்து வருகிறார், த்ரிஷா. தற்போது, 39 வயதாகி விட்ட போதும், திருமணத்தைப் பற்றி கவலைப்படவில்லை. சமீப காலமாக, தன் திறமைக்கு தீனி போடக் கூடிய சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று, 'பீல்' பண்ணி வந்த, த்ரிஷாவுக்கு, தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை என்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார், மணிரத்னம்.
இதன் காரணமாக, 'இதுவரை எனக்குள் அடக்கி வைத்திருந்த மொத்த நடிப்பு வித்தையையும் இந்த படத்தில் இறக்கி வைத்திருக்கிறேன். ஏற்கனவே ஹிந்தியில், 'என்ட்ரி' கொடுத்துவிட்ட போதும், தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. இந்த படத்தை, ஹிந்தியிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுவதால், பொன்னியின் செல்வன் படம் மூலம் அடுத்து, பாலிவுட்டிலும் என் கொடியை பறக்க விடப்போகிறேன்...' என்கிறார், த்ரிஷா.
— எலீசா
போட்டி போடும், லாரன்ஸ் - சிவகார்த்திகேயன்!
ரஜினி நடித்த, சந்திரமுகி படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்கும், ராகவா லாரன்ஸ், அடுத்த ரஜினியாகி விட வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், ரஜினி முன்பு நடித்த, மாவீரன் என்ற படத்தின் டைட்டிலில் நடித்து வரும் சிவகார்த்திகேயனும், ரஜினி நடித்த அதே, 'கெட் - அப்'பில் தற்போது நடித்து வருகிறார்.
அதோடு, 'ரஜினியின் முகச்சாயல் உங்களிடத்தில் இருக்கிறது. முயற்சித்தால், அடுத்த ரஜினி நீங்கள் தான்...' என்று, பலரும் சொன்னதை அடுத்து, இந்த படம் மூலம் அடுத்த ரஜினி ஆகிவிட வேண்டும் என்று, அவரும் வரிந்து கட்டி, களம் இறங்கி இருக்கிறார்.
அந்த வகையில், ஒரே நேரத்தில், இரண்டு நடிகர்கள், ரஜினி இடத்துக்கு குறி வைத்து, களத்தில் இறங்கி இருக்கின்றனர்.
சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விஜயுடன், மாஸ்டர், தனுஷுடன், மாறன் படங்களில் நடித்த, மலையாள நடிகை மாளவிகா மோகனன், உத்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டே, தமிழில் மீண்டும் புதிய பட வேட்டையில் இறங்கியுள்ளார்.
* தி பேமிலிமேன் - 2 என்ற, 'வெப் சீரியலில்' சண்டைக் காட்சியில் நடிக்கும், சமந்தாவுக்கு, தற்போது, தாய்லாந்து தலைநகர், பாங்காங்கில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அவ்ளோதான்!