
கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்!
'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 'மிமிக்ரி' கலைஞராகவும் இருந்தவர் தான், நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு கட்டத்தில், கடுமையாக போராடி, சினிமாவில், 'ஹீரோ' ஆகி விட்டார்.
அதோடு, சின்னத்திரை கலைஞர்கள் யாராவது, தன்னை சந்தித்து வாய்ப்பு கேட்டால், தன் படங்களில் தவறாமல் வாய்ப்பு கொடுக்கிறார், சிவகார்த்திகேயன்.
'நான் சினிமாவில் நடிக்க வந்த காலகட்டத்தில், சின்னத்திரை கலைஞர்களுக்கு திறமை இருந்தாலும், சினிமாவில் மரியாதையே கிடைக்காது. அதன் காரணமாகவே, பெரிய அளவில் போராடி தான் பட வாய்ப்புகளை பெற்றேன்.
'அதனால், என்னைப் போன்று சின்னத்திரையில் இருந்து வருபவர்களின் திறமையை உலகறிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வாய்ப்பளிக்கிறேன். யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும், திறமையானவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது என்பதே, என் எண்ணம்...' என்கிறார், சிவகார்த்திகேயன்.
— சினிமா பொன்னையா
தூண்டிலில் சிக்காத, பிரியங்கா மோகன்!
டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த, பிரியங்கா மோகன் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை ஆகிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், 'கிளாமர் ரோலில் நடித்தால், இன்னும் பெரிய இடத்துக்கு சென்று விடலாம். கோடி கோடியாக சம்பாதிக்கலாம்...' என்று, சில இயக்குனர்கள், அவருக்கு துாண்டில் போட்டனர்.
ஆனால், பிரியங்கா மோகனோ, 'கிளாமர் ஹீரோயினாக நடித்தால், பெரிய அளவில் சம்பாதிக்கலாம். ஆனால், நல்ல நடிகை என்ற புகழ் கிடைக்காது. அதோடு, அப்படி நடித்தால் பத்தோடு பதினொன்றாகவே நானும் இருப்பேன். தனித்துவமான ஒரு நடிகையாக முடியாது...' என்று சொல்லி, 'கிளாமர் ஹீரோயின்' ஆக நடிக்க தன்னை வற்புறுத்திய இயக்குனர்களின் கோரிக்கையை, நிராகரித்து விட்டார்.
— எலீசா
மீண்டும் மாளவிகா!
உன்னைத் தேடி, ஆனந்த பூங்காற்றே மற்றும் வெற்றி கொடி கட்டு என, பல படங்களில் நடித்தவர், மாளவிகா. திருமணத்திற்கு பின், தன், 43 வயதில், மீண்டும், கோல்மால் என்ற படத்தின் மூலம், 'ரீ என்ட்ரி' கொடுத்திருக்கிறார். இருப்பினும், அவர் உடல் ஊதிப் பெருத்து போய் இருப்பதால், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு தயங்கினர், இயக்குனர்கள்.
இதன் காரணமாக, தீவிரமான, 'ஒர்க் -அவுட்'டில் ஈடுபட்டுள்ளவர், 'எண்ணி இரண்டே மாதங்களில், மீண்டும் பழைய மாளவிகாவாக வந்து, உங்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறேன்...' என்று, சில இயக்குனர்களிடத்தில், 'தில்' ஆக கூறியுள்ளார். அத்துடன், 'கிளாமரு'க்கும், 'கிரீன் சிக்னல்' கொடுத்திருக்கிறார்.
— எலீசா
ஜெயம் ரவியின், 'சென்டிமென்ட்'!
மணிரத்னம் இயக்கத்தில் நடித்த, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு, தன் மார்க்கெட் எகிறும், படக்கூலியும் எகிறும் என்று எதிர்பார்த்தார், ஜெயம் ரவி.
'பொன்னியின் செல்வன், மணிரத்னம் படம். அதோடு, அந்த படத்தில் விக்ரம், கார்த்தி ஆகியோரும் நடித்தனர். அதனால், அந்த படத்தின் வெற்றியை வைத்து, உங்களது மார்க்கெட்டை முடிவு செய்ய முடியாது...' என்று கூறிய தயாரிப்பாளர்கள், இப்போதும், ஜெயம் ரவிக்கு குறைவான சம்பளத்தை கொடுக்கின்றனர்.
மேலும், அவர் நடிக்கும் படங்களை குறைவான தொகை கொடுத்தே வாங்கி வருகின்றனர், விநியோகஸ்தர்கள். இந்த வருத்தத்தில் இருக்கும் ஜெயம்ரவிக்கு, ஆறுதல்கொடுத்துள்ளார், நடிகை நயன்தாரா.
அதாவது, 'நயன்தாராவுடன் நடித்த, தனி ஒருவன் படத்திற்கு பிறகு தான், என் மார்க்கெட் உயர்ந்தது. தற்போது அவருடன் மீண்டும் நான் நடித்து வரும், இறைவன் படத்திற்கு பிறகு, மறுபடியும் என் சினிமா மார்க்கெட் எகிறும் என்று நம்புகிறேன்...' என்கிறார், ஜெயம்ரவி.— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* தாரா நடிகையின் கைவசம் பல படங்கள் இருந்த போதும், திருமணத்திற்கு பிறகு, புதிதாக அவருக்கு ஒரு படம் கூட ஒப்பந்தமாகவில்லை. இதனால், பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள, தாரா நடிகை, இந்த நேரத்தில் மார்க்கெட்டில், 'பிரேக்' விழுந்தால், அதுவே வீழ்ச்சிக்கு காரணமாகி விடும் என்பதற்காக, ஒருவேளை, தன்னை யாரும் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தன்னை வைத்து தொடர்ந்து படம் எடுக்குமாறு, காதல் கணவரை வலியுறுத்தி வருகிறார். அந்த அளவுக்கு திருமணத்திற்கு முன், அவரிடத்தில் கதை சொல்லி இருந்த பல இயக்குனர்கள், தற்போது மாயமாய் மறைந்து விட்டனர்.
சினி துளிகள்!
* ஷாருக்கானுடன் நடிக்கும், ஜவான் படத்தின், ஒரு பாடலில், முன்பு, பில்லா படத்தில், அஜித்துடன் நடித்தது போன்று, படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார், நயன்தாரா.
அவ்ளோதான்!