PUBLISHED ON : ஜூன் 25, 2023

எஸ்.ஜே.சூர்யாவை, 'பீல்' பண்ண வைத்த, 'ஹீரோ' வேடம்!
தமிழ் சினிமாவில், இயக்குனராக களம் இறங்கி, அதன் பின், 'ஹீரோ' ஆனவர், எஸ்.ஜே.சூர்யா. ஆனால், அவர் நடித்த படங்கள், எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால், 'ஹீரோ' வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிம்பு நடித்த, மாநாடு படத்தில், வில்லனாக நடித்து, பிரபலமானார்.
தற்போது, கமல் நடித்து வரும், இந்தியன் -- 2 படத்தில், வில்லனாகி, முன்னணி இடத்துக்கு வந்து விட்டார். எனினும், 'ஹீரோ' ஆக ஜொலிக்க முடியாததை நினைத்து, 'பீல்' பண்ணும், எஸ்.ஜே.சூர்யாவிடம், 'இப்போது வில்லனாக வெற்றி பெற்று விட்டதால், மீண்டும், 'ஹீரோ'வாக நடிக்க முயற்சி எடுப்பீர்களா?' என்று கேள்வி எழுப்பினர்.
'கண்டிப்பாக... மீண்டும், 'ஹீரோ' ஆக நடிக்க ஆசைப்பட்டால், வில்லனுக்கு கிடைத்த இடமும் பறிபோய்விடும் என்பதால், இப்போதைக்கு அந்த விஷப்பரீட்சையில் இறங்க மாட்டேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
பெண்களுடன், 'கனெக்ட்'டாகும், கீர்த்தி சுரேஷ்!
மகாநடி படத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற, கீர்த்தி சுரேஷ், தற்போது, கதாபாத்திரங்களை தேர்வு செய்து தான் நடித்து வருவதாக கூறுகிறார். அதோடு, 'நான் நடிக்கும் கதாபாத்திரங்கள், படம் பார்க்கும் பெண்களுடன், 'கனெக்ட்' ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த வகையில், இந்த சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். என்னை அழகாக காட்ட வேண்டும் என்பதை விட, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்...' என்கிறார்.
— எலீசா
விஜய்சேதுபதியின், அயல்நாட்டு ரசிகர்கள்!
விஜய்சேதுபதி நடித்து வரும் பெயரிடப்படாத படத்திற்கு மலேஷியாவில் பூஜை போடப்பட்டு, அங்கேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்சேதுபதி அங்கிருக்கும் சேதி அறிந்து, மலேஷிய மக்கள் மட்டுமின்றி, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து நாட்டு சுற்றுலாப் பயணியரும், அவரை காண முற்றுகையிட்டு வருகின்றனர்.
கடல் கடந்தும், தனக்கு ரசிகர்கள் இருப்பதை கண்டு வியந்து போன, விஜய்சேதுபதி, ஓய்வு நேரங்களில், அவர்களை அவ்வப்போது சந்தித்து உரையாடி, போட்டோவுக்கும், 'போஸ்' கொடுத்து வருகிறார்.
'இனிமேல், என் படங்களை அயல்நாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடும் முயற்சியில் ஈடுபடப் போகிறேன்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
'சில ஹாலிவுட் நடிகையரை போன்று, 'ஹீரோ'களுக்கு இணையாக, 'ஹீரோயினி'களுக்கும், சம்பளம் கொடுக்க வேண்டும். நாங்களும், நடிகர்கள் அளவுக்கு படத்துக்கு படம், கடுமையான உழைப்பை கொடுக்கிறோம்...' என்று, டோலிவுட்டில் எக்குத்தப்பாக பேசி வந்தார், உலக நடிகரின் வாரிசு.
இதனால், கடுப்பான சில, 'ஹீரோ'கள், மேற்படி நடிகையை ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து காலி பண்ணுவது என, தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த விவகாரம், வாரிசு நடிகையின் காதுகளை எட்டியதை அடுத்து, உச்சகட்ட அதிர்ச்சிக்கு ஆளானவர், உடனடியாக தன் கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதோடு, 'ஹாலிவுட் சினிமாவில் இருக்கும் நடைமுறையை பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசி விட்டேன். இனிமேல், இவ்வாறு பேச மாட்டேன். என்னை கைவிட்டு விடாதீர்கள்...' என்று, சரண்டர் ஆகி இருக்கிறார், வாரிசு நடிகை.
சினி துளிகள்!
* தற்போது, அருண் விஜய் நடிப்பில், வணங்கான் படத்தை இயக்கி வரும், பாலா, அதையடுத்து, விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை, நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
* தன் வீட்டில் வளர்த்து வரும், செல்ல நாய்களை படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து வரும், த்ரிஷா, ஓய்வு நேரங்களில் அவைகளுடன் விளையாடி மகிழ்கிறார்.
* தற்போது, பிரபாஸ் உடன் நடித்து வரும், ஸ்ருதிஹாசன் சலார் படத்தில், முதன்முறையாக ஒரு மாறுபட்ட, 'கெட் - அப்'பில் நடித்து வருகிறார்.
அவ்ளோதான்!
