PUBLISHED ON : ஆக 27, 2023

ஷங்கரை அசரடித்த, ராம்சரண்!
தற்போது, கமல் நடித்துள்ள, இந்தியன்- 2 படத்தை அடுத்து, தெலுங்கில், ராம்சரண் நடிப்பில், கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார், ஷங்கர். இந்த படத்தை முடித்துவிட்டு, 'வேள்பாரி' என்ற நாவலை தழுவி, மூன்று பாகம் கொண்ட, பான்- இந்தியா படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், கேம் சேஞ்சர் படத்தில், ராம்சரணின் சிறப்பான நடிப்பை பார்த்து அசந்து போனவர், 'என்னிடம்
உள்ள இன்னொரு கதையில் அவரை நடிக்க வைத்து, மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த படத்தை, கடந்த காலங்களில் நான் இயக்கிய, அந்நியன், எந்திரன் மற்றும் 2.ஓ வரிசையில், பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கப் போகிறேன்...' என்கிறார், ஷங்கர்.
— சினிமா பொன்னையா
'ஐட்டம்' நடிகையான, ரித்திகா சிங்!
சமீப காலமாக, சமந்தா, தமன்னா, பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நடிகையரும், 'ஐட்டம்' பாடலுக்கு நடனமாடி பிரபலமாகி வருகின்றனர். இந்நிலையில் இறுதிச்சுற்று படத்தில் அறிமுகமான, குத்துச்சண்டை நடிகை, ரித்திகா சிங்கும், தற்போது, மலையாளத்தில், துல்கர் சல்மான் நடித்து வரும்,
கிங் ஆப் கோதா என்ற படத்தில், ஒரு, 'ஐட்டம்' பாடலுக்கு அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த, 'கிளுகிளு'ப்பான பாடலுக்காக கூடுதல், 'வெயிட்' போட்டு, கவர்ச்சி நடிகையருக்கே, 'டப்' கொடுக்கும் கட்டுமஸ்தான உடல்கட்டுக்கு மாறியுள்ளார், ரித்திகா சிங்.
எலீசா
அரசியல்வாதியாக
நடிக்கும், விஜய் சேதுபதி!
'பேமிலி சென்டிமென்ட்' கதைகளை குறைத்து, அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறார், விஜய் சேதுபதி. அதன் முதல் கட்டமாக, தற்போதைய, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில், கதர் வேஷ்டி - சட்டை அணிந்து, காரசாரமான அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்துகிறார், விஜய் சேதுபதி, இப்படத்தில், இந்திய அரசியலையே அலற விடக்கூடிய சில அதிரடியான அரசியல், 'பஞ்ச் டயலாக்'குகளை எடுத்து விட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும், தன்னை திரும்பி பார்க்க வைக்கப்போவதாக, கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
அரசியல் படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்த, புயல் காமெடியனின் மார்க்கெட் தற்போது எகிறி நிற்கிறது. இந்த நேரத்தில், வம்புக்கார நடிகரிடம் கதை சொல்லியிருந்த, ஒரு இயக்குனர் தற்போது, அந்த கதையை புயல் காமெடியனிடம் சொல்லி அவரை வைத்து படம் பண்ணுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த செய்தியை அறிந்த, வம்பு நடிகர் செம காண்டாகி விட்டார். 'எனக்கு, தயார் செய்த கதையை, அந்த வயதான காமெடியனிடம் சொல்லி படம் பண்ண போகிறாயா? என்னை விட அந்த நடிகர் மீது உனக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டதா?' என்று அந்த இயக்குனரை அழைத்து ஆவேசமாக பேசியதோடு, அவரது கன்னத்திலும், 'பளார் பளார்' விட்டுள்ளார். இதனால், ஏற்கனவே, 'ரெட் கார்டு' சிக்கலிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய வம்பு நடிகர், மீண்டும் புதிய பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார்.
சினி துளிகள்!
* தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்கும் அவரது, 48வது படத்தில், கமல்ஹாசனும் ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்கிறார். இந்த படத்தை, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
* மலையாளத்தில், பிரித்விராஜ் உடன், ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்திருக்கும் அமலாபால், அடுத்தபடியாக, தனுஷின்,
50-வது படத்தில் நடிக்க போகிறார்.
* பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த, சர்தார் படம், கடந்த அக்டோபர் மாதம் திரைக்கு வந்த நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
* 'சந்திரமுகி- - 2 படம் வெற்றி பெற்று, தமிழில் எனக்கு நிலையான இடத்தை பிடித்து தரும்...' என்கிறார், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.
* விஜயின், 68வது படத்தில், அவருடன், குஷி, திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த, ஜோதிகாவை, மீண்டும் ஜோடி சேர்க்க முயற்சி எடுத்து வருகிறார், இயக்குனர் வெங்கட் பிரபு.
* பிரபல நடன மாஸ்டர் ஜானி, ரன்னர் படம் மூலம், 'ஹீரோ'
ஆக உருவெடுத்துள்ளார்.
அவ்ளோதான்
