PUBLISHED ON : ஆக 27, 2023

சந்நியாசி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவரை தேடி வந்த ஒருவன், அவரை வணங்கினான்.
'சுவாமி, தாங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்...' என்றான்.
'என்ன செய்ய வேண்டும் உனக்காக?' என்றார்.
'நானும், என் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்...' என்றான்.
'அவ்வளவு தானே...' என்று சொல்லி, 'இறைவா, எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எங்குமே துன்பம் இல்லாமல் மறைய வேண்டும். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும். அனைவருக்கும் நிம்மதி வேண்டும்...' என, தன் வழிபாட்டை துவங்கினார், சந்நியாசி.
சந்நியாசியின் வழிபாடு, நம்ம ஆளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.
'சுவாமி என்ன இது... எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று விரும்பினேன். நீங்களோ, உலக மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறீர்கள். உங்கள் இறை வணக்கத்தில் ஒருமுறை கூட என் பெயரையோ, என் குடும்பத்தையோ குறிப்பிடவே இல்லையே...' என்றான்.
'மகனே, மன்னிக்க வேண்டும். நீ குறிப்பிடுவது போல, என்னால் பிரார்த்தனை செய்ய முடியாது. அனைவருக்காகவும், அனைத்து உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்வது பற்றி தான், என் குருநாதர் கற்றுத் தந்தார். என் சந்நியாச தர்மமும் எனக்கு அதைத்தான் கற்றுத் தந்தது.
'எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யும்போது கிடைக்கிற பலன், உனக்கும் உண்டு. அப்படி இருக்கும்போது, ஏன் நீ கவலைப்படுகிறாய்...' என்றார்.
இவ்வளவு கூறியும், நம்ம ஆளுக்கு தெளிவு ஏற்பட வில்லை.
'சரி, இங்கே வா...' என்று அழைத்து, ஒரு வாளி நிறைய தண்ணீரை நிரப்பி, அவனிடம் கொடுத்து, 'இதோ அந்த செடிக்கு, இந்த தண்ணீரை ஊற்றி விட்டு வா...' என்றார்.
அப்படியே செய்தான்.
'தண்ணீரை எங்கே ஊற்றினாய்...' என்று கேட்டார், சந்நியாசி.
'அந்த செடியின் வேர் பாகத்தில் ஊற்றினேன்...' என்றான்.
'இலைகள் தானே வாடியிருக்கிறது. ஒவ்வொரு இலைக்கும் தண்ணீர் விட்டு வரவேண்டியது தானே...' என்றார்.
'சுவாமி, வேருக்கு நீர் ஊற்றினால், அது எல்லா கிளைகளுக்கும், இலைகளுக்கும் போய் சேர்ந்து விடுமே...' என்றான்.
'நான் பிரார்த்தனை செய்வதும் அது மாதிரி தான். உலக நன்மைக்காக வழிபாடு செய்யும்போது, உனக்கும் அந்த பலன் வந்து சேரும்...' என்றார்.
- பி.என்.பி.,
