PUBLISHED ON : அக் 29, 2023

'ரூட்'டை மாற்ற விரும்பாத, மிஷ்கின்!
சிவகார்த்திகேயன் நடித்த, மாவீரன், விஜயின், லியோ படங்களில், வில்லனாக நடித்த, இயக்குனர் மிஷ்கினின் நடிப்பு பேசப்பட்டதால், அடுத்தடுத்து பலரும்,'நெகட்டீவ்' வேடங்களில் நடிப்பதற்கு, அவரை அணுகினர்.
'படங்களை இயக்கியபடி அவ்வப்போது, படத்தில் நடிப்பேன். அதனால், என்னை இயக்குனர் என்ற, 'ரூட்'டிலிருந்து திசை திருப்பி, முழு நேர நடிகராக மாற்றி விடாதீர்கள்...' என்று, வந்த பட வாய்ப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார், மிஷ்கின்.
தற்போது, விஜய் சேதுபதி நடிப்பில், ஒரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கியுள்ளார், மிஷ்கின்.
—சினிமா பொன்னையா
ராஷ்மிகா கொடுத்த, பதிலடி!
ஹிந்தியில், ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற படத்தில், உதட்டு முத்த காட்சியில் நடித்திருக்கிறார், ராஷ்மிகா மந்தனா. அது குறித்த புகைப்படம் வைரலானதால், கடுமையாக விமர்சித்தனர், அவரது ரசிகர்கள்.
'சினிமாவில் கணுக்காலை காண்பிப்பதே கவர்ச்சியாக இருந்து வந்த காலம் மாறி, இன்றைக்கு, 'டூ பீஸ் - சிங்கிள் பீஸ்' என்று, கவர்ச்சியில், எல்லை கட்டுப்பாடே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
'இப்படிப்பட்ட காலகட்டத்தில், உதட்டு முத்த காட்சியில் நடிப்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல. அதனால், இதை அருவருப்பாக பார்க்காமல், ரசிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள்.
'நவீன காதலை வெளிப்படுத்த, இதைவிட ஒரு அற்புதமான விஷயம் உலகில் இருக்கிறதா என்ன?' என, ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார், ராஷ்மிகா மந்தனா.
— எலீசா
அட்லி போடும் திட்டம்!
விஜய் நடிப்பில், தெறி, மெர்சல் மற்றும் பிகில் என, அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய, அட்லி, ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், 'அடுத்து, ஷாருக்கான், விஜயை இணைத்து, ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை. இருவரும், 'கால்ஷீட்' கொடுத்தால், அவர்களை வைத்து இயக்கும் படத்தை, என்னால், 3,000 கோடி ரூபாய் வசூல் செய்து காட்ட முடியும்...' என்று, அடித்துச் சொல்கிறார், அட்லி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
ஊதா கலரு ரிப்பன் நடிகை, சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, தற்போது, மூன்றெழுத்து படத்தின் மூலம், தமிழ் சினிமாவில், 'ரீ - என்ட்ரி' கொடுத்திருக்கிறார். இதையடுத்து, கோலிவுட்டில் தற்போது முகாமிட்டிருக்கும் நடிகை, தன், 'மாஜி ஹீரோ'களை துரத்த துவங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் கோடு போட்டு நடித்து வந்த நடிகை, தற்போது, 'டூ பீஸ், பிகினி' களத்தில் குதிப்பதற்கும் தயாராக இருப்பதாக சொல்லி, அபிமான, 'ஹீரோ'களிடம் சிபாரிசு கோரி வருகிறார்.
குறிப்பாக, 'மெரினா நடிகருடன் நடித்த படங்கள், எனக்கு, 'மெகா ஹிட்'டாக அமைந்ததால், மறுபடியும், அவருடன், 'டூயட்' பாடாமல் விட மாட்டேன்...' என, துரத்தி வருகிறார், நடிகை.
சினி துளிகள்!
* ஷாருக்கான் உடன், ஜவான் ஹிந்தி படத்தில் நடித்து, பாலிவுட்டில் அறிமுகமானார், நயன்தாரா. அடுத்தபடியாக, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும், ஹிந்தி படத்தில் நடிக்கப் போகிறார்.
* அதர்வா நடிக்கும், டிஎன்ஏ என்ற படம், 'ஆக் ஷன், திரில்லர்' கதையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை, ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய, நெல்சன் வெங்கடேசன் இயக்கி வருகிறார்.
* புவனா ஒரு கேள்விக்குறி படம், நெல்லையில் படமாக்கப்பட்டது. தற்போது, ரஜினி நடித்து வரும், 170வது படத்தின் படப்பிடிப்பு, 46 ஆண்டுகளுக்கு பின், மீண்டும், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
* வருத்தப்படாத வாலிபர் சங்கம், வெள்ளக்கார துரை, காக்கிச்சட்டை என, பல படங்களில் நடித்தார், ஸ்ரீதிவ்யா. சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, தற்போது, விக்ரம் பிரபுவுடன், ரெய்டு என்ற படத்தில் நடித்துள்ளார்.
அவ்ளோதான்!
