PUBLISHED ON : அக் 29, 2023

கொற்கை மன்னர், சவுமார வல்லபர்; இவர் ஆட்சி செய்த சமயம், மழையின்றி கடும் பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டனர், மக்கள்.
ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்தார், மன்னர்.
கொற்கை நதிக்கரையில், 1,008 வேதியர்களை வைத்து, மாபெரும் யாகம் நடத்தத் தீர்மானித்து, ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், எதிர்பார்த்த வேதியர்களில் ஒருவர் குறைந்து, 1,007 பேர் தான் இருந்தனர்.
வருந்தினார், மன்னர்.
'விநாயகப் பெருமானே, யாகம் நல்ல படியாக நடந்து, மக்கள் நன்றாக இருக்க வேண்டும்...' என்று, மனதார பிரார்த்தித்தார்.
அப்போது, அங்கு ஒரு வேதியர் வந்தார்.
அவரை வணங்கி, 'சுவாமி, தாங்கள் இந்த யாகத்தில் பங்கேற்க வேண்டும்...' என வேண்டினார், மன்னர்.
வந்த வேதியர் ஒப்புக் கொண்டு, 1,008 ஆவதாக, யாக சாலையில் அமர்ந்தார். யாகம் நல்லவிதமாக நடந்து, முடிந்தது.
சொல்லி வைத்தாற் போல, யாகம் முடிந்ததும், பெரும் மழை பொழிந்தது. மன்னரும், மக்களும் மகிழ்ந்தனர்.
யாகத்தில் பங்கேற்ற, 1008 வேதியர்களுக்கு, மரியாதை செய்ய, சம்பாவனை, அதாவது, வெற்றிலை, பாக்கு, பழம், பொன் போன்றவைகளை கொடுத்தார். ஒருவர் குறைந்தார்.
கடைசி நேரத்தில் வந்த வேதியரை காணவில்லை.
மனம் வருந்தினார், மன்னர்.
அன்றிரவு வரை, அந்த எண்ணத்திலேயே படுத்த மன்னரின் கனவில், விநாயகப் பெருமான் தோன்றினார்.
'மன்னா, 1,008வது வேதியராக வந்தது யாம் தான்...' என்று கூறி, மறைந்தார்.
கனவு கலைந்த மன்னர், வியந்தார்.
மறுநாள்... யாக சாலையில், விநாயகர் அமர்ந்த அதே இடத்தில், கோவில் எழுப்பிய மன்னர், அதில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, அவருக்கு, 'ஆயிரத்தெட்டு விநாயகர்' என, பெயரும் சூட்டினார்.
தகுந்த நேரத்தில் வந்து துயர் தீர்த்த விநாயகருக்கு, மன்னர் எழுப்பிய அந்த கோவில், துாத்துக்குடியிலிருந்து - திருச்செந்துார் -பழைய காயல்பட்டினம் செல்லும் வழியில், 6வது கி.மீ., துாரத்தில் உள்ள, ஆறுமுக மங்கலம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
தெய்வம் ஒரு போதும் நம்மை கை விடாது, காப்பாற்றி அருள் செய்யும்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
பக்தர்கள், கோவிலுக்கு செல்வது, தன் மனம், வாக்கு, காயம் இம்மூன்றையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக அர்த்தம். இதன் அடிப்படையில் தான் கோவிலை மூன்று முறை சுற்றும் வழக்கம் ஏற்பட்டது
