PUBLISHED ON : அக் 29, 2023

எப்.வி.அருள் எழுதிய, 'ஒரு போலீஸ்காரரின் டைரி' நுாலிலிருந்து:
வேலுார் போலீஸ் பயிற்சி நிலையத்தில் நான் சேர்ந்தபோது, அங்கு, நீண்ட நாட்கள் முதல்வராக இருந்த, பர்னெஸ், நீலகிரியில், போலீஸ் சூப்பரன்டெண்டாக பணி மாறி சென்றிருந்தார்.
'பிறரை துன்புறுத்தி மகிழ்பவர். இவரது கொடுமையான பயிற்சிகளை தாங்க முடியாமல், பலருடைய கை, கால்கள் உடைந்து போய் விட்டது...' என்று கூறுவதைக் கேட்டுள்ளேன்.
கொடுங்கோலராக வர்ணிக்கப்பட்ட இவரை, முற்றிலும் மாறுபட்ட குணத்துடன் நான் காண நேர்ந்தது.
பயிற்சி காலத்தில், குதிரையேற்றமும் எங்களுக்கு சொல்லித் தரப்படும். அந்த குதிரைகள் முரட்டுத்தனமானவை. அதில் ஏறி பயிற்சி பெறுவது எளிதல்ல.
பல்வேறு காரணங்களால், போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த குதிரையேற்ற பயிற்சி அளிப்பது, எங்கள் காலத்துடன் முடிந்து போயிற்று. ஆகவே, சில குதிரைகளை விற்று விட்டனர். வயதான பல குதிரைகளை சுட்டுக் கொன்று விட முடிவாயிற்று.
இந்த செய்தி, நீலகிரியில் இருந்த பர்னெஸ் காதுக்கு போனது. உடனே, விடுமுறை எடுத்து, வேலுாருக்கு வந்து விட்டார்.
பர்னெசுக்கு குதிரையேற்றம் என்றால் உயிர். அதுமட்டுமல்ல, நீண்ட காலம் வேலுார் பயிற்சி நிலையத்தில் முதல்வராக இருந்த அவருக்கு, எல்லா குதிரைகளும் நன்கு பழக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு குதிரைக்கும், ஒரு செல்ல பெயர் வைத்திருந்தார். அந்த செல்ல பெயர்களை கூறி அழைக்க, அவரை அடையாளம் தெரிந்து, ஒரு காலை துாக்கி, கை குலுக்குவது போல் நீட்டின.
தன் கைகளை நீட்டி அவற்றுடன் கை குலுக்கினார், பர்னெஸ். கடைசியில் இந்த குதிரைகள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு, 6 அடி ஆழத்திற்கு வெட்டப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தப்பட்டன.
குதிரையின் நெற்றியில் துப்பாக்கி வைத்து சுட, அருகில் உள்ள குழியில் செத்து விழ வேண்டும் என்பது ஏற்பாடு.
நான் பயிற்சி பெற்ற குதிரையை, என் கையாலேயே சுட்டுக் கொன்றேன்.
ஒரு குதிரையில் அமர்ந்தவாறு இந்த கோரக் காட்சியை பார்த்து, 'ஓ'வென்று கதறி அழுதார், பர்னெஸ்.
ஒருசமயம், சண்டிஹோமம் செய்வதற்காக, மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார், ஜெயலலிதா.
அப்போது, எம்.ஜி.ஆர்., கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியிருந்த தங்க வாளை கொண்டு வரச்சொல்லி, சற்று நேரம் கையில் பிடித்திருந்தார்.
வாளை தொட்டதாலோ என்னவோ, உடனே, 30 ஆயிரம் ரூபாய் எடுத்து, அன்னதானத்திற்கு வழங்கியதோடு, விளக்கு எரிக்க, ஒரு டன் நெய்யையும் வழங்கினார்.
ராஜாஜி மண்டபத்தில், பொதுமக்கள் முன்னிலையில், மார்ச் 6, 1967 அன்று, காலை, 11:00 மணிக்கு, முதல்வராக பொறுப்பேற்றார், அண்ணாதுரை. அப்போது அவர் கூறியது...
'ஒரு நாட்டு நிர்வாகத்தில், ஒரு சர்கார் வருவது என்பது, 66வது பக்கம் முடிந்து, 67வது பக்கத்திற்கு போவதைப் போன்றது; ஒரு புத்தகத்தை மூடி வைத்து, இன்னொரு புத்தகத்தை எடுத்துக் கொள்வது என்று அர்த்தமில்லை...' என்றார்.
கி.வா.ஜ.,வை, தமிழ் இலக்கியவாதி என்று மட்டுமே உலகம் அறியும். அவர் சிறந்த தேசியவாதியும் கூட; தம் கைகளாலேயே நுால் நுாற்று, அதில் நெய்யப்பட்ட கதர் துணிகளையே கடைசி மூச்சு வரை, உடுத்தினார்.
மேடையில் பேசும்போது, 'சங்கு சக்கரசாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்...' பாடலை கி.வா.ஜ., பாடினால், அரங்கமே அதிருமாம்.
- நடுத்தெரு நாராயணன்
