தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : அக் 29, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மா —

என் வயது: 40, கணவர் வயது: 45. இரு குழந்தைகள் உள்ளனர். மகனுக்கு, 10 வயது. மகளுக்கு, 7 வயது. என் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அப்போது, தனியார் நிறுவனத்தில், 12 ஆயிரம் ரூபாய், சம்பளத்தில் வேலை பார்த்துள்ளார். கணவரின் தந்தை, காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்து, பணி ஓய்வு பெற்றவர்.

கணவரின் முதல் மனைவி, திருமணம் நடந்த அன்றே, இவரை விட்டு பிரிந்து விட்டார்; விவாகரத்தும் ஆகியுள்ளது. கணவரின் தங்கைக்கு, 100 பவுன் நகை போட்டு மிகவும் வசதியான குடும்பத்தில், ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்க்கும் பையனுக்கு திருமணம் முடித்துள்ளனர்.

நான் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவள். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. ஆறு வயதில், பாம்பு கடித்து, தம்பி இறந்தான். அதிலிருந்து என்னை மகனாகவும், மகளாகவும் கண்ணும் கருத்துமாக, உலக விஷயங்கள் அனைத்தும் சொல்லி கொடுத்து, முதுகலை படிப்பு படிக்க வைத்தார், அப்பா.

நான் விரும்பிய அனைத்தையும் கற்றுக் கொடுத்து வளர்த்து, வசதியான, படித்த பையனுக்கு மணம் முடிக்க விரும்பினார். கிராமத்தில், எனக்கு நிகராக படித்த மாப்பிள்ளை கிடைக்காததால், திருமண தகவல் மையத்தில் பதிந்து, வரன் தேடினார்.

என் கணவர் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு, 'கணவரின் முதல் மனைவியின் நடத்தை சரியில்லாததால், நாங்கள் விவாகரத்து செய்து விட்டோம். என் மகன் சொக்கத் தங்கம்...' என, பொய் கூறினர்.

மேலும், 'நகை, பணம் எதுவும் எங்களுக்கு முக்கியமில்லை; நல்ல குடும்ப பெண் தான் எங்களுக்கு வேண்டும்...' என, என்னை திருமணம் முடித்தனர்.

திருமணம் முடிந்த அன்றிலிருந்து, 'வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வா, உன் வீட்டில், உன் பெயரிலுள்ள விவசாய நிலத்தை விற்று விட்டு வா...' என, பல கொடுமைகள் செய்தனர்.

கரு தரித்தபோதும், கொடுமை செய்யவே, இரு முறை கரு கலைந்து விட்டது. மூன்றாம் முறை கருத்தரித்த உடன், நடு இரவில் வீட்டை விட்டு வெளியேற்றினர்.

என் தாய் வீட்டிற்கு சென்று, குழந்தை பிறக்கும் வரை இருந்தேன். என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என வருந்தி, 'ஹார்ட் அட்டா'க்கில் இறந்து விட்டார், அப்பா. கை குழந்தையுடன், தாய் வீட்டிலேயே தங்கினேன்.

குழந்தைக்கு ஒரு வயது ஆனவுடன், வேறு வழியில்லாமல் மீண்டும் கணவர் வீட்டிற்கு வந்தேன். திரும்பவும் கொடுமை ஆரம்பமாக, தனி குடித்தனம் சென்றோம்.

மாமனாருக்கு சொந்தமாக பல வீடுகள், கடைகள் இருக்கின்றன. அதை வாடகைக்கு விட்டு, பணம் சம்பாதித்தாலும், கணவருக்கு ஒரு வீடு தர மறுத்தனர். வாடகை வீட்டில் தான் வசித்தோம். ஆனால், கணவருக்கு தனியாக குடும்பத்தை நடத்த தெரியாமல், என்னிடம் தகராறு செய்வார்.

இந்நிலையில், எங்களுக்கு மகள் பிறந்தாள். கணவரும் வேலைக்கு சென்று, மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார். மகனை, தனியார் பள்ளியில் சேர்த்தேன். சிறந்த முறையில் படித்து வருகிறான்.

தான் அணிந்திருந்த தாலி செயினை விற்று, என் மாமியாரிடமிருந்து ஒரு பழைய வீட்டை எங்களுக்கு வாங்கி கொடுத்தார், அம்மா. அந்த பழைய வீடு தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது.

நான், மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்துள்ளேன். மகளையும் பள்ளியில் சேர்த்துள்ளேன். ஒரு நல்ல வீட்டை மாமியார் தந்தால் உதவியாக இருக்கும்.

கணவரும், தன் பெற்றோரிடம் இது பற்றி பேச மாட்டார். எனக்கு ஒரு வழி கூறுங்கள், அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

உன் கடிதப்படி பார்த்தால், கணவருக்கு ஒரே ஒரு தங்கை தான் இருப்பதாக தெரிய வருகிறது. கணவருக்கு கூடுதல் சகோதரர்கள் இருப்பதை கடிதத்தில் சொல்ல மறந்து விட்டாயோ?

எனக்கு சில சந்தேகங்கள் முளைக்கின்றன.

மாமனார், மாமியாருக்கு சொந்தமாய் பல வீடுகள், கடைகள் இருந்தும் உன் பெயரிலுள்ள விவசாய நிலத்தை விற்று பணத்தை கொடுக்க, ஏன் துன்புறுத்துகின்றனர்?

மருமகள் மீது ஆயிரம் ஆவலாதிகள் இருக்கலாம். ஒற்றை மகனின் மீது என்ன பிணக்கு? மனைவி, குழந்தைகளுடன் வசிக்க தங்களது வீடுகளில் ஒன்றை மகனுக்கு கொடுக்கலாமே!

வீட்டை எழுதி கொடுக்க வேண்டாம்; ஒரு புரிதல் அடிப்படையில், வீட்டை அவனுக்கு விட்டுக் கொடுக்கலாமே? மகன், சூதாடி, ஸ்திரீலோலன். வீட்டைக் கொடுத்தால், அதை விற்று தின்று விடுவானோ என பயப்படுகின்றனரா?

நாம் உயிரோடு இருக்கும் வரை, சொத்துகளை ஏகபோகமாக அனுபவிப்போம். நமக்கு பின், மகனும், மகளும் சொத்தை பிரித்து எடுத்துக் கொள்ளட்டும் என, குயுக்தியாய் யோசிக்கின்றனரோ!

மகள், கூனிதனம் பண்ணி, சொத்து முழுவதையும் தானமாய் அடைய பெற்றோரை கைக்குள் போட்டு வைத்திருக்கிறாளோ!

புகுந்த வீட்டு சொத்து, வரும்போது வரட்டும். நீயும், உன் கணவரும் மாதம், 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீர்கள். ஒன்று: வீட்டு லோன் போட்டு, பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டலாம். இரண்டு: உன் விவசாய நிலத்தை நல்ல விலைக்கு விற்று, அந்த பணத்தில் பழைய வீட்டை இடித்து, பெரிய வீடாகவும் கட்டலாம்.

கணவரை, உரிமையியல் வழக்கறிஞரிடம் அழைத்து போ. பெற்றோருக்கு பயந்தோ, சொந்த வீட்டு அனுகூலத்தை புரியாமலோ, நல்ல குடும்பஸ்தனுக்குரிய இலக்கணங்கள் தெரியாமலோ நிற்கும் கணவருக்கு, சட்ட ஆலோசனை வழங்கட்டும், வழக்கறிஞர்.

மொத்த சொத்தையும் கணவரின் தங்கை, தானமாய் முழுங்கி விடுவாள் என்ற அதிரடி உண்மையையும் போட்டு உடைக்கட்டும். இது ஒரு, லீகல் கவுன்சலிங்.

முதலில் உன் மாமனார், மாமியாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்கள். சமாதானத்துக்கு வந்தால், பிரதான பாகப்பிரிவினைக்கு முன், தற்காலிக ஏற்பாடாய் ஒரு வீட்டை உங்களுக்கு கொடுக்க சொல்.

சமாதானத்துக்கு வராவிட்டால், உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு போடு. வழக்கின் போக்கு தெரிந்து கூட, மாமனார், மாமியார் சமாதானத்துக்கு வரக்கூடும். அப்போதும் சொத்து பங்கீடு அமலுக்கு வரும்.

மாமியாரிடமிருந்து வீடு கிடைத்தவுடன் அல்லது சொந்தமாய் நீ, வீடு கட்டியவுடன் உன் மனம் திருப்தியடைந்து விடுமா? சந்தேகம் தான்.

கணவருடன் இணக்கமான உறவு, பண திருப்தி, மன திருப்தி தரும் வேலை- மற்றும் நன்கு படிக்கும் ஆரோக்கியமான குழந்தைகள் இவையே உனக்கான வரம்.

மாமியாரிடமிருந்து வீடு கிடைத்த பிறகும் மாமனார், மாமியார் மற்றும் நாத்தனாருடன் தொடர்ந்து உறவில் இரு.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us