PUBLISHED ON : அக் 29, 2023

ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில், விதைகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. விதைகள் மிகச்சிறந்த நொறுக்குத்தீனி. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
குறிப்பாக, பூசணி விதை, சூரிய காந்தி விதை, ஆளி விதை, எள், சியா விதை மற்றும் கசகசா போன்றவைகளை, நொறுக்குத் தீனியாக சாப்பிடலாம்.
பூசணி விதைகளில் மக்னீசியம், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் மற்றும் ஜிங்க் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
பூசணி விதைகளை ஒருவர், தினமும், ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் நன்மைகள்:
* பூசணி விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
* குளுக்கோஸ் அளவைக் குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
* நார்ச்சத்து, புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது. இந்த விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும்.
* பூசணி விதைகளில் ஏராளமான அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மூட்டு வலியை குறைப்பதுடன், இப்பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுவிக்கும்.
* முதுமைக் காலத்தில் கனிமச்சத்துக்கள் குறைபாட்டால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, 'ஆஸ்டியோபோரோசிஸ்' குறைபாடு ஏற்படும். பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.
* பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும்.
* இறுதி மாதவிடாய் கால அறிகுறிகளான உடல் சூடு, தலைவலி, இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றை குறைக்கும்.
* பூசணிவிதைகளில் உள்ள, 'ஆன்டி-ஆக்ஸிடன்ட்'கள், புரோஸ்டேட் வளர்ச்சியைத் தடுக்கும். ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியமாக இருப்பதற்கு, ஜிங்க் சத்து அவசியமானது. புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்கும். இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோயைத் தடுப்பதிலும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.
தொகுப்பு: பி.பரத்
