PUBLISHED ON : அக் 29, 2023

தமிழக சீதோஷ்ண நிலைக்கு நல்லெண்ணெயே நல்லது. கடுமையான வேலை, டென்ஷனுக்கு பிறகு, நம் உடம்பை, 'ரிலாக்ஸ்' செய்வதற்கு சிறந்த தீர்வு, எண்ணெய் தேய்த்து குளிப்பது தான். எண்ணெய் குளியலின் மகத்துவத்தை பார்ப்போம்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, 'ஐந்து காயணும்'ன்னு சொல்வாங்க. மேலே வெயில் காயணும், வயிறு காயணும், எண்ணெய் காயணும், தண்ணீர் காயணும், சீயக்காய் சுடு தண்ணியில் கரைச்சு வெதுவெதுப்பா இருக்கணும்.
இந்த ஐந்தும் காய்ந்து குளிக்கும் போது, எண்ணெயின் வீரியத்தால், உடம்பின் உட்புற குழாய்களில் உள்ள அழுக்குகள் நெகிழும். சுடு தண்ணீரை உடம்பில் ஊத்தும் போது, அது கரைஞ்சு மலம், சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேறத் துவங்கும்.
இரும்பு கரண்டியில், நல்லெண்ணெயுடன், மிளகு, சீரகம் போட்டு பொரித்து, அதை அப்படியே வாயில் போட்டு மெல்ல வேண்டும். எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும்போதே தேய்த்து கொள்ள வேண்டும்.
இரும்புடன் எண்ணெய் சேரும் போது, நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை அதிகரிக்கும். உச்சி முதல் பாதம் வரை, எண்ணெயை ஊற வைத்து, 20 நிமிடம் வரை, மசாஜ் பண்ணலாம். 45 நிமிடங்கள் வரை, எண்ணெய் ஊறிய பின் குளிக்கலாம்.
எண்ணெய் தேய்க்கும் போது, மேலிருந்து கீழாக தேய்ப்பதே சரியான முறை. சிலருக்கு வயிற்றில் வாயு தொல்லை இருக்கும். வலது பகுதியிலிருந்து இடது பகுதிக்கு உருட்டி உருட்டி தேய்க்க சரியாகும். இடுப்பு வலி இருந்தால், அந்த பகுதியில் விளக்கெண்ணெயை சூடு செய்து தேய்த்து குளிக்கலாம்; மலச்சிக்கலும் சரியாகும்.
எண்ணெய் குளியலில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மூன்று இடங்கள்... உச்சந்தலை, காது, பாதம்.
வெதுவெதுப்பாக இருக்கும் எண்ணெயை காதின் உள்ளே விட்டு, காதின் பின்புறத்தின் கீழ் பகுதியை பெருவிரலால் நன்கு அழுத்தி தேய்ச்சு விடணும். இப்படி செய்தால், காது மந்தம் வரவே வராது. எத்தனை வயதானாலும் காதின் கேட்கும் திறன் குறையாது.
தாடை, கழுத்து நரம்புகள், காதுக்கு செல்லும் நரம்புகள் வலுப்பெறும்.
தலையில் எண்ணெயை அழுத்தி தேய்க்கும் போது, மூளை நரம்புகள் வலு பெறும். மூளையில் உள்ள ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி சுரப்பி சரியாய் இயங்கும். பிட்யூட்டரி சுரப்பி சீராய் இயங்க உடம்பின் அத்தனை சுரப்பிகளும் சீராகும்.
ஆனால், முடி கொட்டுறவங்க தலையை அழுத்தி தேய்க்க கூடாது. அது, முடி உதிர்தலை மேலும் அதிகரிக்கும். அவங்க எண்ணெயை பஞ்சில் முக்கி, உச்சந்தலையில் வைக்க, எண்ணெயின் வீரியம் அப்படியே தலையில் இறங்கும். அதுவே அவங்களுக்கு போதுமானது.
நம் பாதத்தின் நடு பகுதியில், தலஹிருதயம் என்ற வர்மம் இருக்கிறது. அங்கிருந்து இரு நரம்புகள் கண்களுக்கு செல்கின்றன. அங்கு எண்ணெயை தேய்க்கும் போது, நரம்புகள் வலுப்பட்டு கண் ஒளி பெறும், குளிர்ச்சியாகும்.
ஆண்டுக்கணக்கில் சரியாக துாங்காமல் இருக்குறவங்க கூட, அன்னிக்கு நல்லா துாங்குவாங்க. உடம்பின் மொத்த எடையையும் தாங்குற பாதத்தின் தசை நார்கள், எலும்புகள், நரம்புகள் வலுவடையும். தோல் வறட்சி, பித்த வெடிப்பு இதெல்லாம் கூட சரியாகும்.
எண்ணெய் தேய்த்து குளித்தவுடன், உடலின் உட்புற அழுக்குகள் எல்லாம் நெகிழ்ந்து குடலுக்கு வரும் என்பதால், அன்று, இட்லி, தோசை, வடை, பொங்கல் என, சாப்பிடக் கூடாது; அசைவ உணவும் ஆகாது. மிளகு ரசம், பருப்பு துவையல் மட்டும் சாப்பிடலாம்.
எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, பகலில் உறங்கக் கூடாது. பகலில் துாங்கினால் நெகிழ்ந்து போன அழுக்குகள், உடம்பில் உறைந்து விடும். கண்டிப்பாக, உடலுறவு கூடவே கூடாது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல், பெண்களின் உடலமைப்பிற்கு கூடுதல் பலனை தரும். சில கிரகங்களிலிருந்து பூமிக்கு வரும் கதிர்கள், அந்த நாட்களில் பெண்களுக்கு மருத்துவ ரீதியாக கூடுதல் பலன்களை தருகிறது. திங்கள், புதன் கிழமைகளில், ஆண்கள் எண்ணெய் குளியல் எடுக்கலாம்.
சூரியனுக்கு ரொம்ப உகந்த நாள், ஞாயிறு. அந்த நாளில் சூரிய கதிர்கள், பூமியில் இறங்கும். அந்த சூடான நிலையில் எண்ணெய் தேய்த்து குளித்தால், உடலின் நீர்க்கட்டு வற்றி, உடல் சோர்வாகும்.
மாதவிடாய் காலங்களில் உடம்பில் ஏகப்பட்ட ஹார்மோன் மாற்றம் இருக்கும். அன்று, எண்ணெய் குளியல் கூடவே கூடாது. எப்போதும் குளித்த பிறகு, தலைக்கு எண்ணெய் தடவ கூடாது. அப்படி தடவினால் கை, கால் வலி வர வாய்ப்பு உண்டு.
தீபாவளி தவிர, மற்ற நாட்களில், சூரிய உதயத்துக்கு முன், எண்ணெய் குளியல் எடுக்கக் கூடாது.
ஆயில் புல்லிங்...
நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளிக்கும் போது, அழுக்குகள் நெகிழ்ந்து வெளியில் வந்து விடும். இப்படி செய்வதால், வாயில் உமிழ் நீரோடு மற்ற என்சைம்களும் சுரந்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும். ஆயில் புல்லிங் செய்வதால், வாய் சுத்தமாவதுடன், முகமும் பூரிப்படையும். இந்த எண்ணெய் கொப்பளித்தலை, பல் தேய்த்த உடனே செய்யக் கூடாது.
தொகுப்பு : எஸ். வைத்தீஸ்வரன்.
