
பிரபல துப்பறியும் சாம்பு கதையில், அவர் அப்பாவித்தனமாக, ஏதோ செய்யப் போக, ஒரு பெரிய குற்றவாளி பிடிபடுவார். சமீபத்தில், அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
எங்கள் குடியிருப்பில் இருந்த, பழைய இரும்பு கேட்டுகளை, விலைக்கு போட்டுக் கொண்டிருந்தனர். எடை மேடை எந்திரத்தை கொண்டு வந்து, அதில் ஒவ்வொரு துண்டுகளாக, கேட்டை தூக்கி வைத்து, எடை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு ஆள், அதை நோட்டில் குறித்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு திடீர் ஆசை. அந்த எடை மேடை மீது நின்று, நம் எடையை பார்த்துக் கொண்டால் என்ன என்று தோன்றியது. அதனால், எடை மிஷின் மேல், ஏறி நின்றேன்.
சென்ற வாரம் அப்பலோ மருத்துவமனைக்கு செக்கப்புக்கு போயிருந்த போது, என் எடை, 77 கிலோ. இப்போது, எடை மிஷின், 62 கிலோ காட்டியது. (15 கிலோ குறைவாக) சரியான பித்தலாட்ட மிஷன் என்று புரிந்தது; விலைக்கு வாங்க வந்தவரின் சாயம் வெளுத்தது. நான் மட்டும், எடை மிஷினில் ஏறி நிற்காமல் இருந்திருந்தால், எங்களுக்கு, மூவாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.
— பாக்கியம் ராமசாமி