PUBLISHED ON : நவ 25, 2018

சிவனுக்கு நெற்றிக்கண் உண்டு. ஆனால், பெருமாளுக்கு இருக்கிறதா...
பெருமாள், 10 அவதாரங்கள் எடுத்தார். அதில், நரசிம்ம அவதாரம் முக்கியமானது. நரசிம்மர் சிலைகள், இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் வடிக்கப்படும்.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலிலுள்ள பாடலாத்ரி நரசிம்மர் சிலை, வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் வடிக்கப்பட்டுள்ளது; அத்துடன் இவருக்கு, நெற்றிக்கண்ணும் உள்ளது.
ஜாபாலி மகரிஷி என்பவர், பெருமாளின் நரசிம்ம வடிவத்தைக் காண வேண்டி, இங்கு வந்து, கடும் தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒருநாள் பிரதோஷ வேளையில், தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில், இத்தலத்தில் பிரதோஷத்தன்று, அபிஷேகம் நடக்கிறது.
இந்த நரசிம்மர், சங்கு, சக்கரம் ஏந்தியுள்ளார். வலது கை, பக்தர்களைப் பாதுகாக்கும் அபயகரமாகவும், இடது கை, தொடை மீது வைத்த நிலையிலும் உள்ளது. நெற்றிக்கண் இருப்பது மிக விசேஷம்.
குகைக்கோவிலில் அருள்பாலிப்பதால், அவரை வலம் வர, குன்றையும் சேர்த்து சுற்றி வர வேண்டும். உற்சவரான பிரகலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்கிறார். தாயார், அஹோபிலவல்லி, தனி சன்னிதியில் இருக்கிறாள். 'அஹோ' என்றால் அழகிய, 'பிலம்' என்றால் குகை என்று பொருள்.
மூலவர் நரசிம்மரை, 'பாடலாத்ரி நரசிம்மர்' என்பர். 'பாடலம்' - சிவப்பு, 'அத்ரி' - மலை. நரசிம்மர் கோபக்கனலாக சிவந்த கண்களுடன், இம்மலையில் தரிசனம் தந்ததால், 'பாடலாத்ரி' - சிவந்த மலை என, இவ்வூருக்கு பெயர் ஏற்பட்டது.
இது, பல்லவர் கால குடவறைக் கோவிலாகும். ஆண்டாள், விஷ்வக்சேனர், லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதிகள் இங்கு உள்ளன. தசாவதார காட்சிகள், சுண்ணாம்பால் செய்யப்பட்டு, சுதை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் சிறப்பம்சம், பவுர்ணமி கிரிவலம்.
மார்கழி, தை மாதங்களில், நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில், அவரது உடலிலும் சூரிய ஒளி நேரிடையாக படும்படி கோவில் அமைப்பு உள்ளது.
கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இங்கு, சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தினரும், ராகு திசை நடப்பவர்களும், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
கோவிலின் பின்புறமுள்ள அழிஞ்சல் மரம், சக்தி வாய்ந்தது. திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்போர், இந்த மரத்தில் சந்தனம் மற்றும் குங்குமம் பூசி நெய் விளக்கேற்றுவர்.
சித்திரையில், தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, நரசிம்மர் ஜெயந்தி, ராமானுஜர் ஜெயந்தி; வைகாசியில் சுவாதிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் துவங்கி, 10 நாள் பிரமோற்சவம் நடைபெரும். ஆடிப்பூரம்; ஆவணியில், பவித்ர உற்சவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி.
புரட்டாசியில், நவராத்திரி; ஐப்பசியில், மணவாள மாமுனிகள் உற்சவம். திருக்கார்த்திகை; தை மகர சங்கராந்தியன்று, ஆண்டாள் நீராட்டு உற்சவம்; மாசியில், தெப்ப உற்சவம்; பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் நடக்கின்றன.
செங்கல்பட்டு - சென்னை வழியில், இந்த சிங்கபெருமாள் கோவில் உள்ளது.
தி.செல்லப்பா
