தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 25, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆயாம்மாக்களை கவுரவித்த மாணவர்கள்!

தனியார் பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறேன், நான். பள்ளி ஆண்டு விழாவில், இங்கு படித்த முன்னாள் மாணவர்களை, ஆண்டு அடிப்படையில் வரவழைத்து, விழா நடத்துவது வழக்கம். அவர்களும், தம்மை உருவாக்கிய, செதுக்கிய, ஏணியாக இருந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தி கவுரவிப்பர்.

இந்த ஆண்டு நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், பள்ளியில் இன்று வரை, ஆயாம்மாவாக வேலை பார்க்கும் மூன்று பெண்களை மேடைக்கு அழைத்தனர்.

'எங்களை சிறந்த நிலைக்கு உருவாக்கியது ஆசிரியர்கள் தான். அதே சமயம், நாங்கள், எல்.கே.ஜி.,யில் சேர்ந்தபோது, கழிவறை சென்றால் கழுவி விடுவது, சாப்பாடு ஊட்டி விடுவது, உடல்நிலை சரியில்லை என்றால், அன்பாகவும், ஆதரவாகவும், ஒரு தாயாக இருந்து எங்களை கவனித்துக் கொண்டோர், இவர்கள் தான். எனவே, இவர்களையும் மறக்காமல் கவுரவிக்க ஏற்பாடு செய்தோம்...' என்றனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில், மூன்று பெண்களுக்கும், தலா, 0.5 சவரன், தோடு வாங்கி கொடுத்து, மேடையிலேயே அதை அணிய வைத்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகியது. மாணவர்களின் வித்தியாசமான இச்செயலால், பள்ளி வளாகமே அதிர்ந்தது. ஆசிரியர்களும், அந்த மாணவர்களை பாராட்டினர்.

மாணவர்களின் வெற்றிக்கு பின், ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆயாம்மாக்களும் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா!

— வி.சாந்தி, சென்னை.

வறுமையை வென்ற திறமை!

சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற நான், காய்கறி வாங்கி வர, கடைக்கு சென்றேன். காலை, 7:00 மணியளவில், குறிப்பிட்ட அந்த கடையில் மட்டும் ஏக கூட்டம். கூட்டத்தின் காரணம் அறிந்ததும், வியப்பும், ஆச்சரியமும் அளித்தது.

அப்போது தான் பறித்த காய்கறி விற்பனை ஒருபுறம் என்றால், மறுபுறம், கீரைகள், வாழைத்தண்டு, கேரட், அவரை மற்றும் பீன்ஸ் ஆகியவை, நறுக்கி தரப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைத்து கொடுப்பது போல், காய்கறி வாங்கி கொடுத்துச் சென்றால், கழுவி சுத்தபடுத்தி நறுக்கி தருகின்றனர். சாம்பார், கூட்டு, பொரியலுக்கு தேவையான காய்கறிகளை, 15 நிமிடம் முதல், ஒரு மணி நேரத்திற்குள் நறுக்கி, அதற்கு ஆகும் நேரம் மற்றும் அளவை பொறுத்து, விலை நிர்ணயிக்கின்றனர்.

விசாரித்ததில், அவர்களின், 'கேட்டரிங் சர்வீஸ்' பிரபலம் என்பதால், வேலை கேட்டு வரும், வறுமையில் வாடும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, வேலை கொடுக்கின்றனர். வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, வறியவர்களுக்கு உதவிய புண்ணியமும் கிடைக்கிறது, என்றார் கடை உரிமையாளர்.

— தி.பூபாலன், காவேரிப்பாக்கம்.

இரவு நேரம் காரில் பயணம் செய்கிறீர்களா?

இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்யும் போது, கார் கண்ணாடியில் ஏதோ விழுந்து, நீங்கள் தொடர்ந்து காரை ஓட்ட முடியாமல் போனால், உடனே காரை நிறுத்தி விடாதீர்கள். காரின் வேகத்தை குறைத்து, கொஞ்சம் சமாளித்து, தொடர்ந்து காரை ஓட்டுங்கள். சில கி.மீ., தூரம் சென்ற பின், காரை நிறுத்தி, என்ன ஏது என்று பாருங்கள்; உடனே இறங்கினால், கொள்ளையர்களிடம் சிக்கி கொள்வீர்.

சமீபகாலமாக, நெடுஞ்சாலைகளில் காரில் பயணம் செய்பவர்களிடம், ஒரு நூதன கொள்ளை நடந்து வருகிறது... கொள்ளையர்கள் ஒளிந்திருந்து, கார் கண்ணாடி மீது, அழுகிய முட்டையை வீசுகின்றனர். கார் கண்ணாடியை சரியாக பார்க்க முடியாமல், காரை நிறுத்தி, நீங்கள் கீழே இறங்கினால், உங்கள் கதி அதோ கதி தான். உங்கள் பணம், நகை, மொபைல்போன் போன்றவற்றை கொள்ளையர்கள் பிடுங்கிக் கொள்வர். சமயத்தில், காரையும் ஓட்டி சென்று விடுவர்.

கார் கண்ணாடியை துடைக்கும், 'வைப்பரை'யும், இந்த சமயத்தில் உபயோகப்படுத்தக் கூடாது. அதை உபயோகப்படுத்தினால், அழுகிய முட்டை, கண்ணாடி முழுவதும் பரவி, பாதை சுத்தமாக தெரியாமல் போய் விடும்.

இரவு நேரத்தில், நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்பவர்கள், இந்த புது வித கொள்ளையில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஜெ.கண்ணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us