PUBLISHED ON : ஆக 13, 2023

ஆடி மாதத்தில், சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிக்கிறார். சூரியன், சிவ அம்சமாகும். அதைப் போல சந்திரன், சக்தியின் அம்சமாகும். இந்த இரண்டு அம்சங்களும் ஒன்று சேர்வது, ஆடி அமாவாசை விரதத்தின் சிறப்பை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமாவாசை, பவுர்ணமி நாட்களில், கடலில் நீராடுவது நல்லது. நம் பாவத்தை போக்கும் பரிசுத்த நீராகவும், இறைவனின் அருள் நீராகவும், கடல் நீரை நினைத்து, காலம் சென்ற பித்ருக்களுகளை எண்ணி, அவர்களது பாவத்தை போக்கி, அவர்களுக்கு முக்தியளிக்கும் வகையில் இறைவனை வேண்டி, கடல் நீரில் நீராட வேண்டும்.
உடல் நலத்தின் பொருட்டும், கடலில் நீராடுவது நன்மை தரும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் நிலையும், நம் உடலின் நிலையும் மாற்றம் அடைகிறது. கடலில் நீராடுவதால், உடலில் உள்ள அனேக உள் நோய், புற நோய்கள் நீங்கி, சரீரம் துாய்மையாகிறது. ஆரோக்கியம், உற்சாகம் உண்டாகிறது. மனம் ஒருமைப்பட்டு, பரிசுத்தமும், அதிக பசியும் ஏற்படும். எனவே, அவ்வப்போது கடல் நீராடல் அவசியம்.
ஆடி அமாவாசையன்று காலையில் எழுந்து, ஆற்றிலோ, குளித்திலோ நீராடி விட்டு, கரையோரத்தில் இருக்கும் அந்தணர்கள் மூலம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள், வீட்டில் நீராடி, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, அங்குள்ள அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். தர்ப்பணம் செய்வதற்கு, இந்தியாவில் காசியும், இலங்கையில், கீரிமலை கடற்கரையும், மாமாங்க பிள்ளையார் கோவிலும் விசேஷமானவை.
வீட்டில் உள்ளோர் குளித்து விட்டு, சமையல் செய்ய வேண்டும். யார் யாருக்கு படைக்க வேண்டுமோ அவர்களை நினைத்தபடி, இலைகள் போட்டு உணவை அதில் படைத்து, துாப, தீபம் காட்டி, வழிபட வேண்டும்.
பின், இலையில் இருக்கும் எல்லா பதார்த்தங்களிலும் சிறிது எடுத்து, தனியாக ஓர் இலையில் வைத்து, காகத்திற்கு வைக்க வேண்டும். காகம் உண்ணத் துவங்கிய பின், விரதம் இருப்பவர்களும், வீட்டில் உள்ளோரும் உணவு உண்ணலாம்.
இவ்வாறு முறையாக விரதம் அனுஷ்டித்தால், முக்தி அடைந்தவர்களின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பி. உதயராணி
