PUBLISHED ON : மார் 24, 2013

மார்ச் 26 - பங்குனி உத்திரம்
மனிதனாய் பிறந்தவன், அவனுக்குரிய தர்மத்தை (கடமையை) சரி வர செய்ய வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, கடவுளே பூமியில் பிறந்து வாழ்ந்து காட்டினார். ஒருவனுக்கு ஒருத்தி, தந்தை சொல் மீறாமை, தாய்க்கு பணிதல் ஆகிய தர்மங்களை, ராமபிரான் அனுஷ்டித்துக் காட்டினார். சிவவிஷ்ணுவுக்கு பிறந்த தர்மசாஸ்தாவும், பெற்றோரை பேணல், சத்தியம் தவறாமை, இல்லறமாகிய நல்லறம், துறவு எனும் தர்மங்களை பேணினார். இந்த சத்திய தெய்வங்களில், ராமபிரானுக்கு பங்குனி உத்திரத்தில் திருமணம் நடந்தது. தர்மசாஸ்தா பங்குனி உத்திரத்தில் அவதரித்தார்.
சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், அவர்களை யாரும் அழிக்க முடியாமல், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தேவர்களைக் காப்பாற்ற, மோகினி வடிவம் எடுத்தார். இந்த வடிவத்துடன் உலக நன்மை கருதி, சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார்.
பூலோகம் சென்று, உலக மக்களுக்கு தர்மத்தை போதிக்கும்படி சிவவிஷ்ணு அவருக்கு கட்டளையிட்டார். அதன்படி, அவர் பந்தளமகாராஜாவின் மகன் ஆனார். தாய் சொல் காப்பது உலக தர்மம் என்பதை உணர்த்த, புலிப்பால் கொண்டு வந்தார். இளைஞர்கள், பெற்றவர்களுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று உணர்த்தினார்.
வேத காலத்தில், பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு நிலைகளை மக்கள் பின்பற்றினர். தர்மசாஸ்தா, ஐயப்பனாக அவதாரம் செய்து, பந்தளத்தில் பிரம்மச்சரியத்தை அனுபவித்தார். ஆரியங்காவில் பூர்ண, புஷ்கலா என்ற தேவியருடன் கிருகஸ்தனாக (இல்லறத்தான்) வாழ்ந்து காட்டினார். குறிப்பிட்ட காலத்துக்குப் பின், கணவனும், மனைவியும் குடும்பத்தை துறந்து வனத்துக்கு சென்று விட வேண்டும் என்ற வானப்பிரஸ்த அடிப்படையில், புஷ்கலாவுடன் அச்சன்கோவிலில் கோவில் கொண்டார். இறுதி நிலையான சந்நியாசியாக, தனித்து சபரிமலையில் தவக்கோலத்தில் அமர்ந்தார்.
இன்றைய வாழ்க்கைக்கும் இது பொருந்தும். குழந்தைகளுக்கு திருமணமாகி சொந்தக்காலில் நிற்கத் துவங்கி விட்டால், பெற்றவர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களுக்கு ஆலோசனை கூறலாமே தவிர, அதை ஏற்றே தீர வேண்டுமென கட்டாயப் படுத்தக் கூடாது. தங்கள் இளமைக்காலத்தில், தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்படி அனுசரித்துப் போனார்களோ, அதே போன்ற அனுசரிப்பை தங்கள் மருமகளும், தன் மகனிடம் எதிர்பார்ப்பாள் என்பதை அவர்கள் உணர வேண்டும். இதற்கு வழிவிடும் வகையில், இளையவர்களை சுதந்திரமாக இயங்கவிட்டு, இறை சிந்தனையில் மூழ்கி விட வேண்டும்.
வயதான பிறகு, மனைவியோ, கணவனோ இறந்துபோனால், அக்கால தர்மப்படி ஏறத்தாழ துறவு நிலைக்கு சென்று விட வேண்டும். துறவு என்றால், காவி உடுத்தி காசியில் போய் இருக்க வேண்டுமென்பதில்லை. மனதளவில் எல்லா விஷயங்களில் இருந்தும் ஒதுங்கி விட வேண்டும். சிறியவர்கள் விஷயத்தில் தலையிட்டு, அவர்கள் நிம்மதியையும் கெடுத்து, தங்கள் நிம்மதியையும் அழித்துக் கொள்ளக் கூடாது.
பங்குனி உத்திரத்தில் அவதரித்த தர்மசாஸ்தாவின் வரலாறு, இதையே நமக்கு எடுத்துச் சொல்கிறது. கடைபிடிப்பீர்களா பெரியவர்களே!
***
தி. செல்லப்பா

