
மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டா....
திருமணமான புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன். இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே, தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல் சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது வழக்கம்.
இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் சலிப்பு ஏற்படவே, சண்டைக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். 'இனி, எதை செய்தாலும், நம் இஷ்டப்படி செய்யாமல், மனைவியின் ஆலோசனைப்படி செய்வதே சரி...' என முடிவுக்கு வந்தேன். அதிலிருந்து, நண்பர்கள் ஏதாவது சொன்னால் கூட, 'என் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்...' என்பேன்.
நண்பர்களோ, 'பொண்டாட்டி தாசன் ஆகி விட்டாயா?' என்று கேலி செய்வர். 'நம்ப லைப் பார்ட்னர் ஆச்சே... பார்ட்னர் கிட்ட கேட்காமல் செய்வது தப்பில்லையா?' என்று சொல்லி சமாளித்து விடுவேன்.
இப்போதெல்லாம், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, மனைவிக்கு சம உரிமை அளிப்பதால், நான் எதைச் சொன்னாலும், ஓ.கே., சொல்லி விடுகிறாள். அதனால், எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது, மனைவி போற்றும் கணவனாக மட்டுமில்லை, மாமனார், மாமியார் மெச்சும் மருமகனாகவே மாறி விட்டேன்.
— வீ.சுரேந்திரன், காரைக்குடி.
இளநீர் குடிக்கச் செல்கிறீர்களா?
இது கோடை காலம்! நம்மில் பலர், இளநீர் கடையை நோக்கி படையெடுக்கிறோம். வெயில் கொடுமையும், தண்ணீர் தாகமும் சேர்ந்து, நம் கண்கள் இளநீரையே வட்டமிடுவதால், அதை குடிப்பதற்கு கொடுக்கும் ஸ்டிராவை கவனிப்பதில்லை.
நாம் குடித்து விட்டு தூர எறியும் ஸ்டிராக்களை, இளநீர் வியாபாரிகள் எடுத்து, தண்ணீரில் கழுவாமல், வெயிலில் காய வைத்து, மீண்டும் உபயோகிக்கின்றனர். இதனால், அந்த ஸ்டிராவின் மூலம் பலவிதமான நோய் பரவ வாய்ப்புண்டு. எனவே, இளநீர் பருகியவுடன், அந்த ஸ்டிராவை மறுமுறை உபயோகிக்க முடியாத அளவிற்கு முறுக்கியோ அல்லது முறித்தோ போட்டு விடுங்கள்.
இப்படி செய்வதால், நம் எச்சிலை பிறர் சாப்பிட வேண்டியதில்லை. அத்துடன் நோய் பரவாமலும் தடுக்கலாம்.
— எஸ்.வினோதினி, சென்னை.
அடகு கடை பித்தலாட்டங்கள்!
என் கணவர், என்னுடைய ஒரு பவுன் தங்கச் செயினை, சில மாதங்களுக்கு முன், அடகு வைத்திருந்தார். அது மிகச் சரியாக, ஒரு பவுன் - அதாவது, எட்டு கிராம் இருந்தது. ஆனால், அடகு வைத்த ரசீதில், 7.900 மில்லி கிராம் என்று எழுதியிருக்க, கணவரிடம் விசாரித்தேன். 'அடகு கடைக்காரர்கள் சேதாரத்தை கழித்து விட்டுதான் எழுதுவார்களாம்; நானும் விசாரித்தேன்...' என்றார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டோம்.
சமீபத்தில் மீண்டும் பணப் பற்றாக்குறை ஏற்பட, அந்த செயினை மீட்டு, வேறு பிரபலமான, அடகு நகை வங்கியில், அதிக தொகைக்கும், குறைந்த வட்டிக்கும் வைத்தோம். அப்போது தான், அந்த அதிர்ச்சி தெரிய வந்தது. ஏற்கனவே, 100 மில்லி கிராம் குறைத்து எழுதியதோடல்லாமல், பிரபலமான அந்த வங்கியின் கம்ப்யூட்டர் தராசில் எடை போட, 7.700 மில்லி தான் இருந்தது. பித்தலாட்டத்தை விசாரித்த போது, ஏற்கனவே அடகு வைத்த நகைக்கடையின் கைவரிசை புரிந்தது. கோபப்பட்டு, அந்த கடையில் விசாரித்ததற்கு, 'நகையை மீட்கும் போதே, எடை போட்டு விட்டு போக வேண்டியது தானே ...' என்று கூலாக பதில் சொல்ல, ஆடிப் போனோம்.
மிடில் கிளாஸ் மக்களே... தங்க நகை அடகு வைக்கும்போது, ஏரியாக்களில் புற்றீசல் போல் முளைத்துவிட்ட அடகு நகை கடைக்காரர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள். எங்களைப் போல் ஏமாறாதீர்கள்.
— பி.ஜெயலட்சுமி, திருப்பூர்.

