sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தெய்வ தரிசனத்தின் பலன்!

/

தெய்வ தரிசனத்தின் பலன்!

தெய்வ தரிசனத்தின் பலன்!

தெய்வ தரிசனத்தின் பலன்!


PUBLISHED ON : டிச 27, 2015

Google News

PUBLISHED ON : டிச 27, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூஜை மற்றும் புனஸ்காரங்களால் மட்டுமே இறைவனை தரிசித்து விட முடியாது; அவன் மீது கொண்ட நிலைத்த சிந்தனையின் மூலமே இறைவனை தரிசிக்க முடியும் என்பதை விளக்கும் கதை இது:

சனந்தனன் என்பவர், குருவிடமிருந்து, மந்திர உபதேசம் பெற்றார். அந்த மந்திரத்திற்கு உரிய இறைவனை, நேரில் தரிசிக்க, ஆசை. அதனால், காட்டில், இறைவனை நோக்கி, கடுமையாக தவம் செய்தார். அவ்வழியே வந்த வேடன் ஒருவன், 'ஏ சாமி... இந்த அத்துவானக் காட்டுல கண்ண மூடிக்கிட்டு என்ன செய்ற?' எனக் கேட்டான்.

'வேடனே... உன்னைப் போல, நானும், ஒரு விலங்கைத் தேடுகிறேன்; அது, பாதி சிங்கமாகவும், பாதி மனிதனாகவும் இருக்கும். அதை, நரசிம்மம் என்பர். விசித்திரமான அந்த மாய விலங்கை பிடிப்பதற்காகத் தான், கண்ணை மூடி அமர்ந்துள்ளேன்...' என்றார்.

வேடன் சிரித்தபடியே, 'அட என்ன சாமி கதை சொல்றே... நீ சொல்ற மாதிரி விலங்கு கிடையவே கிடையாது. இந்தக் காட்டுல, எனக்குத் தெரியாத விலங்கா... ஆனா, உன்னைப் பாத்தா பொய் சொல்ற மாதிரி தெரியல. அதனால, இன்னைக்கு சூரியன் மறையறதுக்குள்ள, நீ சொன்ன அந்த நரசிம்மத்த நான் பிடிச்சிட்டு வரேன். அப்படி நான் கொண்டு வரலன்னா இறந்து போயிடறேன்...' என்று சொல்லி, நரசிம்மத்தைத் தேடிச் சென்றான்.

உணவு, ஓய்வு மற்றும் தாகம் என எந்த சிந்தனையும் இல்லாமல், அந்த விலங்கைப் பற்றியே சிந்தித்தவாறு காடு முழுவதும் தேடினான். மாலை நேரம் வந்து விட்டது. ஆனாலும், நரசிம்மம் கிடைக்கவில்லை. மனமொடிந்து போன வேடன், 'சே... நாம சொன்னதச் செய்ய முடியல; சபதம் போட்ட மாதிரி, செத்துப் போயிடணும்...' என்று புலம்பியபடி, காட்டுக் கொடிகளால், சுருக்கு தயார் செய்து, அதில் தன் தலையை நுழைத்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான்.

அப்போது, 'கர்...கர்...' என்று ஓசை கேட்க, திரும்பிப் பார்த்தான் வேடன். ஓசை வந்த இடத்தில், நரசிம்மம் இருந்தது; வேடனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் கழுத்தில் இருந்த கயிறை எடுத்து நரசிம்மத்தின் கழுத்தில் மாட்டி, தரதரவென சனந்தனனிடம் இழுத்து வந்தவன், 'சாமி... இந்தா நீ கேட்ட நரசிம்மம்...' என்றான்.

கண்களை திறந்து பார்த்தார் சனந்தனன்; ஆனால், அவர் கண்களுக்கு நரசிம்மம் தெரியவில்லை. அந்தரத்தில் நிற்கும் காட்டுக் கொடியும், அதில் உள்ள சுருக்கு மட்டுமே தெரிந்தன; கூடவே, நரசிம்மத்தின் உறுமலும் கேட்டது.

சனந்தனன் நடுங்கி, 'ஹே நரசிம்மா... தவம் செய்யும் என் கண்களுக்குத் தெரியாமல், ஒரு சாதாரண வேடனுக்குத் தரிசனம் தருகிறாயே...' எனக் கதறினார்.

'சனந்தனா... முனிவர்களுக்குக் கூட இல்லாத, நிலைத்த சிந்தையுடன் தேடிய இவனுக்குக் காட்சியளிக்காமல், வேறு யாருக்குக் காட்சியளிப்பேன்...' என்றார் பகவான்.

இறைவனை காண முடியாத தன் நிலையை எண்ணி அழுதார் சனந்தனன். அவருக்கு ஆறுதல் கூறிய பகவான், 'சனந்தனா... இந்த வேடனின் தொடர்பினால் தான், என் குரலை கேட்கும் பாக்கியமாவது உனக்குக் கிடைத்தது; வருத்தப்படாதே... ஒரு காலத்தில், நான் உனக்குள் ஆவாஹனம் ஆவேன்...' என்றார். அதன்படியே, பிற்காலத்தில் சனந்தனன், ஆதிசங்கரருக்கு சீடனாகி, பத்மபாதர் எனும் பெயர் பெற்றபின், அவர் உடம்பில் ஆவாஹனம் ஆனார் நரசிம்மர். அது, ஆதிசங்கரரை காப்பாற்றிய வைபவமாக ஆயிற்று.

வேடன் ஒருவன், தெய்வத்தை நேருக்குத் நேராகத் தரிசித்ததால், அதன் பயனாக, உத்தமர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டது. அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்கு தெய்வம் என்றுமே தன்னை மறைத்துக் கொண்டதில்லை; வெளிப்பட்டு அருள் புரியும்!

பி.என்.பரசுராமன்

திருமந்திரம்!

அடியார் அடியார் அடியாருக்கு அடிமைக்கு

அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்

அடியார் அருளால் அவனடி கூட

அடியார் இவனென்று அடிமை கொண்டானே!

கருத்து: அடியார்கள் பாராட்டுக்கு உரியவர்கள்; அந்த அடியார்களை போற்றும் தொண்டர்கள் வணங்குவதற்கு உரியவர்கள். அப்படிப்பட்ட தொண்டர்களின் அடியவனாக இருக்கவே இறைவனிடம் வேண்டினேன்; அவர்களுக்கு அடிமையும் செய்தேன். அத்தகைய அடியாரின் அருளால், இறைவனின் திருவடி தரிசனம் கிடைத்தது. 'இவன் சிறந்த அடியவன்; நமக்கு தொண்டு புரிபவன்...' என்று இறைவனும் அடியேனை, அடிமையாய் கொண்டு அருள் புரிந்தார்.

விளக்கம்: தோணியின் உதவியால் நதியை எளிதாக கடப்பதைப் போல, அடியார்கள் உதவியால் இறையருளை சுலபமாக பெறலாம்.






      Dinamalar
      Follow us