PUBLISHED ON : மார் 14, 2021

அது ஓர் அடர்ந்த வனம்... அவ்வழகிய வனத்தின் நடுவே, கூவம் என்ற பேரழகி, மாசற்ற தன் பளிங்கு நிற மேனியால் பார்ப்பவர் கண்களையும், கருத்தையும் கொள்ளை கொண்டவளாக, மேற்கிலிருந்து கிழக்கே வங்காள விரிகுடா கடலை நோக்கி, ஓடிக் கொண்டிருந்தாள்.
வானில் சென்ற கந்தர்வன் ஒருவன், வனத்தின் அழகில் மயங்கி, அங்கே இறங்கினான். இயற்கையின் அற்புதத்தை ரசித்துக் கொண்டிருந்தவன், அடர்ந்த செடிகளுக்கு நடுவே மெலிதான சலங்கை ஒலி கேட்கவே, அந்த திசையில் உற்று நோக்கினான்.
இளம் வன மகள் ஒருவள், இடுப்பில் சிறு குடத்துடன் கூவம் ஆற்றை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அவள் அழகில் மயங்கிய கந்தர்வன், அவளை பின் தொடர்ந்தான்.
கூவம் ஆற்றங்கரையில், அரச மரங்கள் அடர்ந்திருந்த பகுதியில், சிறு மேடையில் பிள்ளையார் வீற்றிருந்தார். கூவம் ஆற்றில் இக்கரைக்கும், அக்கரைக்குமாக நீந்தி மகிழ்ந்தாள், வன மகள். பின், குடத்தில் நீர் எடுத்து, பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தவள், அனிச்சம் மலர்களை மாலையாக தொடுத்து பிள்ளையாரை வணங்கி, திரும்பினாள்.
மறைந்திருந்து அவளை கவனித்துக் கொண்டிருந்த கந்தர்வனுக்கு, வன மகள் மீது மையல் வரவே, திடீரென வெளிப்பட்டு, அவளை அடைய முயற்சி செய்தான்.
அவன் கரங்களை உதறித் தள்ளி, 'ஏய்... கந்தர்வனே... இளமையின் வேகத்தில் நீ கந்தர்வன் என்பதையும், நான் பூலோக பெண் என்பதையும் மறந்து, என் விருப்பத்திற்கு மாறாக அடைய நினைத்தாய்.
'நீ, இன்று முதல் இளமையை இழந்து, முதுமையிலும், வியாதியிலும் துன்பப்படுவாயாக...' என்று, சாபம் கொடுத்தாள்.
அவள் சாபத்தின் விளைவாக, தன் இளமையின் வேகம் அடங்கி, முதுமையின் சாயல் உடம்பில் தோன்றவே பயந்து போனான்.
'இவள் சாதாரண வேடர் குலப் பெண் அல்ல; தவ வலிமை உள்ளவள். இவளிடம் சரணாகதி அடைவதைத் தவிர, சாப விமோசனம் பெற வழியில்லை...' என நினைத்தான்.
'தாயே... அறியாமல் நெறி பிறழ்ந்து விட்டேன்; பிழையை மன்னித்து, இந்த கொடும் சாபத்திலிருந்து விமோசனம் தர வேண்டும்...' என, வேண்டினான்.
அவன் மீது இரக்கம் காட்டிய வன மகள், '100 ஆண்டுகள் இந்த வனத்தில் பிள்ளையாரை வழிபட்டு வா... 101வது ஆண்டில், இதே வசந்த கால பவுணர்மியில் உனக்கு சாப விமோசனம் கிட்டும்...' எனக் கூறி சென்று விட்டாள்.
மோகத்தின் விளைவாக பாவத்தை தேடிக் கொண்ட கந்தர்வன், அந்த வனத்தில், பிள்ளையாரை வழிப்பட்டு வந்தான்.
ஒரு மழைக்காலம்... இரு கரைகளையும் தொட்டுத் தழுவி, புது வெள்ளமாய் பொங்கி ஆர்ப்பரித்து, ஆரவாரத்துடன் ஓடியது கூவம். நீராட ஆற்றில் இறங்கிய கந்தர்வனை வெள்ளம் அடித்துச் சென்றது. உயிர் பயத்தில் அவன், கங்கா மாதாவை வணங்கி, அபயக் குரல் எழுப்பினான்.
சிறிது நேரத்தில், ஒரு மென் கரம் அவனை தாங்கி, கரை சேர்த்தது. கண் விழித்தபோது, ஓர் அழகிய யுவதியின் மடியில் தலை வைத்து படுத்திருந்தான்.
'பெண்ணே... யார் நீ...' என்று கேட்டான்.
'என் பெயர் கூவம்... நான் கங்கையின் மறு வடிவம். என்னை திருபுவனமாதேவி என்றும் அழைப்பர். திரிலோக அசுரர்களான மூவரை வதம் செய்ய சென்ற சிவன், முழு முதல் கடவுளான விநாயகரை வழிபட மறந்து விட்டார். அதனால், சிவனின் ரதம் சேற்றில் கவிழ்ந்து விட்டது.
'ரதத்தை நிமிர்த்த இறங்கிய சிவபெருமானின் பாதத்தை கழுவுவதற்காக, பூமிக்கடியிலிருந்த க் ஷீரா நதி எனும் பாலி நதியாக பெருக்கெடுத்து பூமிக்கு வந்தேன்... காசியில் கங்கா தீர்த்தத்தில் நீராடினால், செய்த பாவம் தொலையும்.
'என்னில் நீராடிய ஒருவன், தன் பாவம் தொலைந்து, பிறப்பு, இறப்பு எனும் உயிர் சுழற்சியில் இருந்து விடுபடுகின்றான். புண்ணிய ஷேத்திரங்களில் நான், காசி, கயா, வாரணாசிக்கு இணையானவள்...' என்றாள்.
'தாயே... அபயம் அளித்திடு; தவ யோகியான ஓர் இளம் வன மகள் கொடுத்த சாபத்தால், என் தேவ சக்தியை இழந்து, முதுமையிலும், வியாதியிலும் துன்பம் அடைகிறேன். என் பாவத்தை நீக்கி, சாபத்தின் வீரியம் குறைய அருள வேண்டும்...' என்று வேண்டினான்.
'மகனே... உத்தம ஸ்திரிகளின் சாபத்திற்கும், எண்ணத்திற்கும் வலிமை அதிகம். அவள் சாபத்தின் சக்தியை நீக்குவது, அந்த பரம்பொருளால் கூட முடியாது. ஆனால், உன் பாவத்தின் வீரியத்தை குறைப்பேன். அதன் மூலம், விநாயக பெருமானின் அருளால், நீ விரைவில் இந்த சாபத்திலிருந்து விடுவிக்கப்படுவாய்...' என்று அவனது, பாவத்தை நீக்கினாள்.
கூவத்தில் நீராடி, பாவம் தொலைத்த கந்தர்வன், பின், விநாயகரின் அருளால் சாப விமோசனம் பெற்று, தேவலோகம் சென்றான். ஆனாலும், ஒவ்வொரு, 100வது ஆண்டு வசந்த கால பவுணர்மி அன்றும், கூவம் ஆற்றை வணங்கி, அந்நீரால், உடல், மனதை சுத்தி செய்து, விநாயகரை வழிபட்டு செல்வது அவனது வழக்கமானது.
பல நுாறு ஆண்டுகளாக தன் இயற்கை வளம், அழகை இழக்காத வனம், 19ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களால் அழிவை சந்திக்க ஆரம்பித்தது.
இன்று, சென்னை மாநகரம் என்று அழைக்கப்படும் இந்நகரின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த அந்த அழகிய வனம், வழிப்பறி திருடர்களும், குற்றச் செயல் புரிபவர்களின் புகலிடமாக மாறியது; கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து, 19ம் நுாற்றாண்டின் கடைசியில் முழுவதுமாக அழிந்து போனது, வனம்.
இருபதாம் நுாற்றாண்டின் ஒரு பவுர்ணமி அன்று, பூலோகம் வந்தான், கந்தர்வன். ஓங்கி உயர்ந்த மரங்களுக்கு பதில், பல மாடி கட்டடங்களும், வீடுகளும், மின் விளக்குகளும், துாசி படித்த வீதிகளையும் கண்டு திகைத்து, வனத்தையும், பிள்ளையார் கோவிலையும் தேடித் தவித்தான்.
சுற்றிலும் இருந்த அரச மரங்கள் அழிக்கப்பட்டு, பெரிய பெரிய வணிக வளாகங்கள் முளைத்திருக்க, அதன் நடுவே, இருப்பதே தெரியாமல், பரிதாபமாய் காட்சி அளித்த பிள்ளையாரை கண்டு, துடித்துப் போனான், கந்தர்வன்.
கருவறையில் இருந்த துாசுகளை துடைத்து, பிள்ளையாரை அபிஷேகம் செய்ய, தீர்த்தம் எடுக்க கூவம் ஆற்றை தேடிய போது, அடுத்த அதிர்ச்சி...
கோவில் அருகில், பெரும் சமுத்திரமோ என, மனம் மயங்கும்படி ஓடிய கூவம் ஆற்றைக் காணவில்லை. அவன் மனம் தவித்தது.
'கூவா... என் தாயே நீ எங்கிருக்கிறாய்... என்னவானாய், வடக்கே சரஸ்வதி மறைந்தது போல், நீயும் பூமிக்கடியில் மறைந்து விட்டாயா... உன்னிடம் வாக்கு அளித்தபடி, உன்னைக் காண வந்திருக்கிறேன். நீ எங்கே போனாய்...' என்று, உரத்த குரலில் அழுதான்.
அப்போது எங்கிருந்தோ விம்மும் குரல் கேட்கவே, 'இது, கூவாவின் குரல் போல் அல்லவா இருக்கிறது... ஏன் இப்படி கையறு நிலையில் பலகீனமாக ஒலிக்கிறது அவள் குரல்...' என பதறி, ஒலி வந்த திக்கில் பறந்து சென்றான்.
குப்பைகளும், கழிவுகளும் கொட்டப்பட்டு, பயங்கர துர்நாற்றத்துடன் கரிய நிறத்தில் தென்பட்ட சிறு கால்வாயில் இருந்து அந்த விம்மல் குரல் வந்தது. தன் நாசியை மூடிக் கொண்டு, 'தாயே, கூவா... நீ எங்கிருக்கிறாய்...' என்று உரக்க சத்தமிட்டான்.
'கந்தர்வா... என் மகனே... உன் காலடியில் பார்...' என்றதும், குனிந்து பார்த்தான். அந்த துர்நாற்றம் எடுக்கும் சாக்கடை தான், புனித நதியான கூவம் என்பதை அறிந்து, துடிதுடித்துப் போனான்.
'தாயே... இது என்ன கோலம்... நீயா இப்படி ஆனாய்... விதி செய்த சதியா இது...' என்று வேதனையும், கோபமும் கொண்டான்.
'விதியின் மீது பழி போடாதே மகனே... இது, மனிதர்கள் செய்த சதி...' என்றாள், வெறுப்புடன்.
'என்ன தாயே சொல்கிறாய்... உயிர்களின் வாழ்வதாரமாக இருக்கும் உன்னை, கடவுளாகவும், தாயாகவும் கொண்டாடியவர்களா உன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினர்...' என்றவன் தொடர்ந்தான்...
'உன் அருமை தெரியாமல், அலட்சியப்படுத்தி உன்னை கழிவுநீராக்கிய இந்நகரத்து மானிடர்கள், குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்காமல், தெருத்தெருவாய் தண்ணீருக்கு அலைய வேண்டும்.
'சுகாதாரமற்ற கழிவுநீரை குடித்து, பலவித நோய்கள் பீடித்து, கவலையிலும், துன்பத்திலும் மருத்துவமனைகளில் உழல வேண்டும். இது தான் அவர்களுக்கு நான் கொடுக்கும் சாபம்...' என்று சபித்தான்.
''அய்யோ இதென்ன கொடும் சாபம்...'' என்று அலறி, 'திடுக்'கிட்டு விழிந்தேன். உடல் தெப்பமாய் நனைந்திருந்தது.
சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் விழித்து, 'அட... இதுவரை கண்டது வெறும் கனவா...' என நினைத்து, மணியைப் பார்த்தேன்.
அதிகாலை, 5:00 மணி-
''ஐயோ... 4:00 மணிக்கு மோட்டார் போட்டால் தானே, ரெண்டு குடம் தண்ணீராவது கிடைக்கும்... இப்ப, 5:00 மணி. பக்கத்து வீட்டுக்காரங்க மோட்டார் போட்டு தண்ணீரை உறிஞ்சியிருப்பாங்களே... பாத்ரூம் போனா கழுவக் கூட தண்ணியில்லயே...'' என்று அலறி அடித்து, 'சுவிட்'சைப் போட்டேன்.
ஒரு மணிநேரம் மோட்டார் ஓடியும், குழாயைத் திறந்தால் வெறும் காற்று தான் வந்தது. ஒரு சொட்டு தண்ணீர் வரவில்லை. அடுப்படியில், தேய்க்காத பாத்திரம் மலை போல் குவிந்திருந்தது. குடிப்பதற்கு என்று மூன்று 'கேன் வாட்டர்' வாங்கி வைத்திருந்ததில் மீதம் ஒன்று தான் இருந்தது.
சமைப்பதற்காக பிடித்து வைத்த கார்ப்பரேஷன் தண்ணியும் ஒரு குடம் தான் இருந்தது. இதில் எப்படி நான்கு பேர் கொண்ட குடும்பம் பாத்ரூம் போய், குளித்து, பாத்திரம் தேய்த்து, சமைத்து சாப்பிட்டு, அலுவலகம் கிளம்புவது... நினைக்கும்போதே தலை சுற்றியது. கூடவே, கனவில், கந்தர்வன் சபித்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது.
ஏற்கனவே, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம்... ரோட்டோர கையேந்தி பவன் முதல், பெரிய உணவகங்கள் வரை தண்ணீர் பிரச்னையில் தற்காலிக மூடுவிழா கண்டிருந்தது. ஐ.டி., நிறுவனங்களும், பெரிய தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து, வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என்று பணித்தன.
மக்கள், குடங்களை துாக்கி, தண்ணீருக்காக வீதி வீதியாக அலைந்தனர். ஆறு, குளம், கண்மாய்களை, 'ஏப்பம்' விட்ட எதிர்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் நெஞ்சில் குற்ற உணர்ச்சி, மனச்சாட்சியே இல்லாமல் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எல்லாம் மழை பொழிகிறது. சென்னையில் மட்டும் ஒரு துளி மழை இல்லை.
நன்றாக துாங்கி, நிதானமாக எழுந்து, சாவகாசமாக அலுவலகம் வந்தவளுக்கு, இந்த தண்ணீர் பிரச்னையால், 'லேட்'டாக துாங்கி, பரபரப்பாக எழுந்து, துாங்கி வழிந்தபடி, அலுவலகம் வருவது வழக்கமானது.
ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, அப்படியே கண் மூடிய போது, காலை நேரக் காற்று முகத்தில் வந்து மோத, அது துாசு காற்றாக இருந்தாலும் கொஞ்சம் இதமாகவே இருந்தது.
ஆட்டோ ஓட்டுனர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். வயதானவர் என்பதால் தொணத் தொண என, ஏதாவது பேசிக் கொண்டே வருவார்.
''நான் சென்னைக்கு வந்த புதிதில் இதெல்லாம் வெறும் காடாக இருந்தது. இப்ப, ஒரு சதுர அடி வாங்க முடியல,'' என்றதும், கனவில் வந்த அந்த அழகிய வனமும், ஆறும், கந்தர்வனும் நினைவுக்கு வர, 'படக்'கென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
''முன்பு இங்க காடாக இருந்தது. பிள்ளையார் கோவில் மட்டும் தான் இருந்துச்சு. அப்புறம் இதோ இந்த வீதியில் சில குயவர்கள், சட்டி பானை செஞ்சுட்டு இருப்பாக... இப்ப, 'ஸ்கை வாக்' இருக்குதே... அந்த இடத்தில சேரி ஜனங்கள் குடியிருந்தாங்க...
''மத்தபடி இந்தப் பக்கம் போக்குவரத்தே கிடையாது. ரவுடிகளும், கள்ளச்சாரயம் காய்ச்சுரவங்களும் தான் இருப்பாங்க... வழிப்பறியும், கொலையும் சர்வ சாதாரணமாக நடக்கும். நகை நட்டை பறித்து, கொன்னு கூவம் ஆத்துல துாக்கி போட்டுட்டுப் போயிடுவாங்க,'' என்றார்.
''கூவம் ஆறு இங்க எங்கே இருக்குது,'' என்றேன்.
''அதைத்தான் ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டி, சாக்கடை மாதிரி ஆக்கிப்புட்டாங்கல்ல... நான் எட்டு வயசுல சென்னைக்கு வந்தேன். அப்பயெல்லாம் கூவம் ஆறு எப்படி இருக்கும்ன்னு நினைக்கிறீங்க... தண்ணியை அப்படியே அள்ளிக் குடிக்கலாம். அம்புட்டு சுத்தமா இருக்கும்.
''மழை காலத்துல இரண்டு கரையையும் தொட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். படகுல போயி மீன் பிடிப்பாக...'' என்றவர், நெல்சன் மாணிக்கம் ரோட்டை சுட்டிக் காட்டி, ''இதெல்லாம் அடர்ந்த காடா இருந்துச்சு,'' என்றார்.
நான், கனவின் தாக்கத்தில் ஏதோ மாய உலகில் சஞ்சரிப்பது போல், ஒவ்வொன்றையும் ஆவலுடன் பார்த்து வந்தேன். தினம் செல்லும் பாதை தான். ஆனால், இன்று, அவை யாவும் எனக்கு புதுமையாகவும், ஏதோ ஒரு கதை சொல்ல காத்திருப்பது போல் தோன்றியது.
அன்று, கூவம் ஆற்றின் கரையில் இருந்த அரச மர பிள்ளையார், இன்று, சாலையோரம் துாசி படிந்து... கனவில், கந்தர்வன் அடைந்த மன வேதனை, என்னையும் சூழ்ந்து கொண்டது.
ப. லட்சுமி