PUBLISHED ON : ஜூலை 02, 2023

கொத்துமல்லி, கறிவேப்பிலை போல், புதினாவும் வாசனையுள்ள இலை. புத்துணர்ச்சியூட்டும் இந்த இலையில், பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
முதலில் மண் கலவையில் தோட்ட மண், எரு, தேங்காய் நார் மற்றும் தழைச்சத்து என, கலந்து நிரப்பிக் கொள்ள வேண்டும். குறைந்தது, 4 அங்குலமுள்ள, புதினா காம்பை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள இலைகளை, காம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நீக்க வேண்டும். தொட்டி மண்ணில் குழியிட்டு காம்புகளை நடவு செய்ய வேண்டும்.
ஒரு காம்புக்கும் அடுத்த காம்புக்கும் 2 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். நல்ல வெளிச்சம் படும் இடத்தில் தொட்டியை வைத்து, தண்ணீர் ஊற்றுங்கள். நேரிடையான சூரிய ஒளியை தவிர்ப்பது நல்லது. 15வது நாளில், துளிர் விட ஆரம்பிக்கும். 25 நாட்களில் அறுவடை செய்ய தயாராகி விடும்.
வாயிலுள்ள உமிழ்நீர் மற்றும் செரிமான சொதிகளை சுரக்கும் சுரப்பிகளை செயல்பட வைத்து, செரிமானத்தை எளிதாக்குகிறது, புதினா. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புகளை எரித்து, உடலை சீராக வைக்கிறது.
முகத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் வடுக்கள் மீது, புதினா இலை சாறை பூசினால், அவை குணமாகி விடும். குளவி மற்றும் தேனீ உள்ளிட்ட பூச்சிகளின் விஷக்கடி தாக்குதலால், தோலில் உண்டாகும் எரிச்சல் மற்றும் நமைச்சலை உடனடியாய் சரி செய்கிறது, புதினா இலைச்சாறு.
புதினா எண்ணெய், ஆன்டிசெப்டிக் மற்றும் அரிப்பு நீக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால், தோலில் நோய் தொற்று மற்றும் நமைச்சலை நீக்கி, சுத்தமாக்கும்.
முதன் முறை விமானம் மற்றும் கப்பலில் பயணம் போவதாக இருந்தால், கொஞ்சம் புதினா இலைகளையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். இலையாக இல்லையென்றாலும் அதன் சுவை சேர்ந்த பற்பசை, சூயிங்கம், ப்ரீத் ப்ரெஷ்னர், மிட்டாய் மற்றும் இன்ஹேலர்களை உடன் வைத்திருங்கள்.
குமட்டல் வரும்போது, இதன் வாசனையை முகர்ந்தால், பிரச்னை தீரும். தலைவலிக்கு நாம் தேய்க்கும் எல்லா களிம்புகளிலும் புதினாவின் பங்கு அதிகம் உள்ளது.
ஒரு லிட்டர் கொதிக்கும் நீரில், இரண்டு புதினா இலைகளை போட்டு, நன்கு கொதித்ததும் வடிகட்டி குடிக்கலாம். இது, மாதவிடாய் நேரத்து வயிற்று வலியை குறைப்பதோடு, அதிக ரத்தப்போக்கை மட்டுப்படுத்தும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு புதினா எண்ணெய், மிகப் பெரிய வரப்பிரசாதம். குழந்தை பால் குடிப்பதால், தளர்ந்துள்ள மார்பு காம்புகளில் புதினா எண்ணெயை தினமும் பூசி வருவதால் அந்த பாதிப்பு சீராகும்.
புதினாவில் உள்ள பாலிபீனாலான ரோஸ்மரினிக் அமிலம், வயதானவர்களின் நினைவாற்றலை அதிகப்படுத்துவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம், மந்தம், பித்தம் போன்றவற்றை இதன் வாசனை போக்குகிறது.
புதினா மட்டுமல்ல, நாங்களும் வாசனையுள்ள இலைகளுக்கு சொந்தகாரர்கள் தான் என, முன் வரும், கொத்தமல்லி.
— வளரும்
ஒரு கைப்பிடி புதினா, கொத்துமல்லி மற்றும் தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து அரைத்து வடிக்கட்டவும். அரை குவளை நீரில், கைப்பிடி அளவு வெல்லம் போட்டு சூடாக்கி கரைந்ததும் வடிக்கட்டி, உப்பு, எலுமிச்சை சாறு, வடிகட்டிய சாறு கலந்து சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் மணப்பாகு. தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் வெந்நீருடன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட, உடல் எடை சீராகும்.
ம. வான்மதி
