PUBLISHED ON : ஜூலை 02, 2023

அ நிறம் | அளவு
உயர்வும், தாழ்வும்
அவரவர் செயல்களே
தீர்மானிக்கின்றன!
சில சமயங்களில்
நாம் வெளிப்படுத்தும்
வார்த்தைகளாலும்
தாழவும், உயரவும் செய்கிறோம்!
தன்னைத் தாழ்த்தி
பிறரை உயர்த்துவோரே
பெரும் தலைவர்களாய்
மேதைகளாய், மகான்களாய்
உயர்ந்து நிற்கின்றனர்!
உயர்ந்து நிற்கும்
கோபுரத்திற்கு
அதன் அஸ்திவாரமே
ஆதாரம்!
அழகாய் நகர்ந்து வரும்
தேருக்கு அதன் அச்சாணியே
பிரதானம்!
இதில் எது உயர்ந்தது
எது தாழ்ந்தது?
ஒன்று இல்லாமல் மற்றது இல்லை!
ஏணியின் முதல் படியும்
மலையின் முதல் படிக்கல்லும்
மேலும் மேலும்
உயரம் ஏற உதவுகின்றன!
உயர்ந்தவன், தாழ்ந்தவன்
என்ற பேதம்
மானுடத்தை தாழ்த்தும்!
யாவரும் சரி நிகர் சமானம்
எனும் மனித நேயமே
நாட்டையும், வீட்டையும்
உயர்த்தும் வேதம்!
மாற்றுவோம்
ஜாதி மத வெறியை...
ஏற்றுவோம்
ஓர் இனம் நாம் எனும்
மனித ஜோதியை!
— ஜனபிரவாகன், சென்னை.
