தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கனவுத்தோட்டம் (6) - கொத்தமல்லி!

கனவுத்தோட்டம் (6) - கொத்தமல்லி!

கனவுத்தோட்டம் (6) - கொத்தமல்லி!


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய செடிகளில் கொத்தமல்லியும் ஒன்று.

தரமான கொத்தமல்லி விதைகளை (இதை தனியா என்று சொல்லலாம்) எடுத்து, ஒரு துணியில் கொட்டி, மூட்டையாக கட்டவும். இரு கைகளால் இந்த விதை மூட்டையை கசக்கினால், விதைகள் இரண்டிரண்டாய் பிளந்துக் கொள்ளும். பின், இவற்றை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து, விதைக்கலாம்.

விதை விதைக்க இன்னொரு முறையும் உள்ளது. தனியாவை இரண்டிரண்டாய் உடைத்த பின், எரு, மண் கலந்து, ஒரு துணியில் கட்டி தண்ணீர் தெளித்து, முடிச்சுப் போட்டு தொங்க விடவும். நான்காவது நாள் முளை விட்டிருக்கும்.

அதை எடுத்து, தெரிவு செய்து வைத்திருக்கும் தோட்ட மண், சாணிக்குப்பை, வேப்பம் பிண்ணாக்கு கலவையில் தெளித்து விடுங்கள். மேலே அதே மண் கலவையை துாவி, ஒரு மெல்லிய தாள் கொண்டு மூடி வையுங்கள். தினமும் அதன் மீதே தண்ணீர் தெளியுங்கள்.

ஐந்தாவது நாள், நன்கு முளைத்து தலை துாக்கிவிடும். ஓரளவு வெளிச்சத்தில், கீழே ஒரு கோணியை போட்டு அதன் மீது தொட்டியை வையுங்கள். அவ்வளவுதான் கொத்துமல்லி விதைப்பு.

கொத்தமல்லி இலைகள் செழிப்பாய் வளர, மண்புழு உரம் தான் முக்கியம். இதில் உயிர் சத்துகள் அதிகம். அரிசி, பருப்பு கழுவிய நீரையும் ஊற்றலாம்.

முருங்கை இலை அல்லது கறிவேப்பிலை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டவும். சக்கையை வேறு ஏதாவது ஒரு செடியின் வேரில் போட்டு விடலாம். வடிகட்டிய சாற்றுடன் நீர் சேர்த்து, கொத்தமல்லி விதைப்புடன் தெளித்து வர, செழிப்பாக புதர் போல் வளரும்.

ஆரோக்கியமான கண் பார்வைக்கு, கொத்தமல்லி சிறந்தது. ஏனெனில், கொத்தமல்லியில், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கரோட்டினாய்டு போன்ற சத்துக்கள் உள்ளன.

கொத்தமல்லியை தினமும் துவையல், சாதம், குழம்பு, பக்கோடா, தோசை, ஜூஸ் என, ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொண்டால், வயது தொடர்பான சிதைவை தாமதப்படுத்தவும், வெண்படலத்தையும் குணப்படுத்தும்.

கொத்தமல்லியை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து, அந்த விழுதை சருமத்தில் பூசி, 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவலாம். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் கொத்தமல்லி ஜூஸ் பருகலாம். இரண்டு தேக்கரண்டி சாற்றை மோரில் கலந்தும் குடிக்கலாம்.

கொத்தமல்லி சேர்த்து பரோட்டா, கொத்தமல்லி தக்காளி சால்சா, கொத்தமல்லி வடை மற்றும் பக்கோடா செய்து சாப்பிட, சுவையாக இருப்பதோடு, உடல்நலத்திற்கும் நன்மை தரும்.

இரவில் நன்றாக துாக்கம் வர, கொத்தமல்லியை இரவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொத்தமல்லி இலையயை ஒரு கைபிடி எடுத்து, நன்கு கழுவி மென்று தின்றால், உடல் சூடு குறையும் மற்றும் பசியை துாண்டும்.

ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை, ஒரு கப் நீரில் இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை, விதைகளை வடிகட்டி, வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்க, பல உடல் சங்கடங்கள் வராமல் தடுக்கும்.

இரும்பு சத்து நிறைந்த, கறிவேப்பிலை​வளர்ப்பு பற்றி அடுத்த வாரம்.

வளரும் ம. வான்மதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us