PUBLISHED ON : ஜூலை 09, 2023

அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 28. பெற்றோருக்கு ஒரே மகள். அப்பா, அம்மா இருவருமே வேலைக்கு செல்வதால், என்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று, எட்டு வயதிலேயே, உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து விட்டனர்.
பள்ளி, கல்லுாரி வாழ்க்கை மொத்தமும், கைதி போல், விடுதியில் தான். ஒரு கட்டத்துக்கு பின், சகித்துக் கொள்ள பழகிக் கொண்டேன்.
குடும்ப உறவுகளுடனான அரவணைப்பிலிருந்து, வெகு துாரத்துக்கு சென்று விட்டேன். அச்சமயத்தில் தான் அறிமுகமானான், என் காதலன். மிகவும் பொறுமைசாலி. என் மீது மிகுந்த அக்கறை காட்டி, ஆதரவாக இருந்தான்.
படித்து முடித்து, ஐ.டி., வேலையில் சேர்ந்தேன். அவனும், வேறொரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தான். இரு குடும்பத்தினரின் எதிர்ப்பில்லாமல், எங்கள் திருமணம் இனிதே நடந்தது.
வாழ்க்கை சந்தோஷமாக சென்றது. சில மாதங்களிலேயே, எங்கள் இருவரது வேலை நேரம் மாறி, வாழ்க்கையின் திசையை மாற்றியது.
கணவருக்கு, 'டே ஷிப்ட்' எனக்கு, 'நைட் ஷிப்ட்' ஆனது. ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் சேர்ந்து இருப்போம். அன்றும், அலுவல் பணி கழுத்தை நெரிக்கும், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து விடுவார், கணவர்.
மீண்டும் தனிமையை உணர்ந்தேன். எதிலும் பிடிப்பு இல்லாம் போனது. எதற்கெடுத்தாலும் கோபம், அது அத்தனையையும் கணவர் மீது கொட்டினேன்.
என் அழுகையும், ஆத்திரமும் அதிகமானதே தவிர, பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
'உன் உணர்வுகள் எனக்கு புரிகிறது. வாழ்க்கையில் பல ஆண்டுகள் விடுதியில், தனிமையில் கடந்து விட்டாய். இப்போது, வேலை, குடும்பம் என்று, 'செட்டில்' ஆன நிலையில், வேலை நேரம் நம்மை பிரித்து விட்டது. சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்க, நீ வேலையை விட்டு விடு. வீட்டில், 'ரிலாக்ஸ்' ஆக இருக்கலாம்...' என்கிறார், கணவர்.
ஒருபக்கம் அவர் சொல்வது சரியென்று பட்டாலும், வேலையை விட்டு விட்டால், திரும்ப தேட முடியாது என்பதும், வேலையும், அது தரும் சம்பளமும் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது. அதை இழந்து விடுவேனோ என்றும் தயங்குகிறேன். எனக்கு ஆலோசனை கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,அன்பு மகள்.
அன்பு மகளுக்கு —
நீ சிறப்பாக படித்து, வாழ்க்கையில் முன்னேற, விடுதி வாழ்க்கையை உனக்கு பரிசளித்தனர், வேலைக்கு செல்லும் உன் பெற்றோர். உன் பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டு, அவரவர் தனி துணை தேடிக் கொண்டு உன்னை நட்டாற்றில் விட்டனரா? இல்லையே...
தந்தை குடி நோயாளியாக மாறி, உன் படிப்பை பாதியில் நிறுத்தினாரா? இல்லையே... உன் தாயார் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு இல்லத்தரசியாகி, உன்னை முழுநேரம் கவனித்திருக்கலாம் என, ஆவலாதி கொள்கிறாயா?
தாயார் தன் வேலையை விட்டு விட்டால், உங்கள் வீட்டு பொருளாதாரம் பாதியாய் நலிவடையுமே... நீ விரும்பின விலையுயர்ந்த கல்வியை உனக்கு கொடுக்க முடியாமல் பெற்றோர் திண்டாடி இருப்பரே... இது தேவையா?
பெற்றோர் தன்னையே சுற்றிச் சுற்றி வரவேண்டும். கணவன் அல்லது மனைவி தன்னையையே கொஞ்சிக் கொண்டிருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் காலடியில் கிடக்க வேண்டும் என, இந்த இன்டர்நெட் தலைமுறை, பிறரிடம் அதிகம் எதிர்பார்க்கிறது.
மருமகன் அல்லது மருமகள், தன்னை கடவுள் என, துதி பாட வேண்டும். பேரனோ, பேத்தியோ மார்பில் தவழ்ந்து கிடக்க வேண்டும். மொத்தத்தில், உலகமே தன்னை காதலாலும், நன்றியுணர்ச்சியாலும் திக்குமுக்காட வைக்க வேண்டும். இது நடக்குமா? இது சாத்தியமா?
சந்தோஷத்தை மூன்று வகையாக விளக்குகிறது வேதம்...
* மானசீக சந்தோஷம், -மனதால் ஏற்படும் சந்தோஷம்
* வாசீக சந்தோஷம், -வாக்கால் ஏற்படும் சந்தோஷம்
* சாநுாக சந்தோஷம்,- உடலால் ஏற்படும் சந்தோஷம்
வெறுப்பு, ஆசை, பொறாமை, கோபம், களவு, காமம், அதிக எதிர்பார்ப்பு ஆகியவற்றை விடுத்து, உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை.
சந்தோஷம் பிறர் கொடுத்து வருவதல்ல, தனக்குள் பீரிட்டு எழுவதை கண்டுபிடித்து கொண்டாடுவது.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பெற்றோர் உடனான உறவை புதுப்பி. நீயும், கணவரும் சேர்ந்து இருக்கும் சொற்ப நேரத்தை மகிமைபடுத்து. தாம்பத்யம் உங்களை பேரானந்தம் படுத்தட்டும்.
எதிர்பார்ப்புகளை குறை. பிறருக்கு அன்பை வாரி வழங்கு. உன் பணியை செக்குமாடு தனமாய் செய்யாமல் புதுமையாய், தனித்துவமாய் செய். பிடித்த புத்தகங்களை வாசி. பூனை, நாய், கிளி என, இதில் ஏதாவது ஒன்றை வளர்.
மொட்டை மாடியில் தோட்டம் அமை. மாதம் ஒருமுறை, நீயும், கணவரும், சிற்றுலா போங்கள். வாரம் ஒருமுறை கோவிலுக்கு போங்கள். உறவினர்களை அழைத்து உபசரியுங்கள்.
ஹாஸ்டல் தோழியருடன் பேசு. நேரம் கிடைக்கும் போது மால், தியேட்டர், ஹோட்டல் சுற்றுங்கள். தினம் யோகா, தியானம் செய்.
உங்களிருவருக்கும் குழந்தை பிறந்து விட்டால், பிறர் மீது புகார் சொல்ல நேரமிருக்காது.
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
