PUBLISHED ON : ஜூலை 23, 2023

இன்சுலின் செடியை தொட்டியில் வைத்து வளர்க்க முடியும். இதன் விதைகளை தேடிக் கொண்டிருக்க வேண்டாம். மூன்று கணுக்கள் இருக்கும்படியான ஒரு தண்டை எடுத்து மண்ணில் சொருகி வைத்தால் போதும், வளர ஆரம்பிக்கும்.
வேர் பகுதியில், கிழங்கு போல் முட்டு இருக்கும். அந்த கிழங்கோடு ஒரு முதிர்ந்த குச்சிக் கிடைத்தால், நட்டு வையுங்கள். ஒரே வாரத்தில் முளைப்பு வந்துவிடும்.
தொட்டியில் இலகுவான சாதாரண மண், இலை, தழைகள், எரு உரம் போட்டு நன்றாக நீர் விட்டு வந்தால் போதும்.
சில சமயம் எறும்புகள், சிறுசிறு பூச்சிகள் இலைகளில் பட்டையாய் ஒட்டிக்கொள்ளும். நல்ல தண்ணீரை பீய்ச்சி அடிக்க, அந்த பூச்சிகள் உதிர்ந்துவிடும். மிக அதிமான தாக்குதல் இருந்தால், கிளையை கிள்ளி எறிந்து விடுங்கள்.
இதன் இலை மட்டுமல்ல, முழுத்தாவரமும் மருந்தாகத்தான் பயன்படுகிறது.
இன்சுலின் என்பது, நம் உடலின் கணையத்திலிருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன். நம் ரத்தத்திலுள்ள உயர் சர்க்கரை அளவை குறைக்கிறது.
உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் பல பிரச்னைகள் ஏற்படத் துவங்கும். இதன் ஒன்று அல்லது இரண்டு இலைகளை உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, சர்க்கரையின் அளவும் குறையும்.
நீரிழிவு, நரம்பியல் பிரச்னை, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, சளி, இருமல் ஆகியவற்றுக்கும் சிகிச்சையளிக்க, இன்சுலின் செடி இலைகள் பயன்படுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது. சரும நோய், இதய நோய் வராமல் தடுக்கிறது. மன அழுத்தத்தை போக்குகிறது. ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது. மூளை செல்களைப் பாதுகாக்கிறது.
நோய் உள்ளோர் மட்டுமல்ல, ஆரோக்கியமானவர்களும், இன்சுலின் செடியின் இலைகளை மென்று தின்றால், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வாய், உதடு, நாக்கு, தொண்டை அல்லது மூக்கைச் சுற்றி வீக்கம், வாசனை பிடிக்காமல் மூச்சு விடுவதில் சிரமம், காரத்தன்மையால் கண்கள் சிவந்து போதல், சுவை பிடிக்காமல் வாந்தி ஏற்பட்டால், உடனடியாக இலைகளை உட்கொள்வதை நிறுத்தி விடலாம்.
பயன்படுத்துவது எப்படி?
கறிவேப்பிலை மற்றும் இன்சுலின் செடி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஆற வைத்து தினமும் காலை, மாலை குடித்து வர, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இஞ்சி, மஞ்சள் வகையை சேர்ந்தது என்பதால், உணவிலும் இதை சேர்த்துக் கொள்ளலாம்.
இதன் இலைச்சாறு, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வையே குறைத்துவிடும்.
நிறைய இலைகள் கிடைக்கும் போது, நன்கு காய வைத்து பொடியாக்கி, டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின் குடித்து வர, சிறுநீர் எளிதாக பிரியும். சிறுநீர்ப்பைத் தொற்று குணமாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
இன்சுலின் செடியின் இலைகளை அரைத்து, தேன் மற்றும் எலுமிச்சை சாறுடன் கலந்து முகம், கழுத்து மற்றும் கை முட்டிகளில் பூசி வர, அந்த இடத்தின் கருமை நீங்கும். முகத்திலுள்ள பருக்கள் மீது பூச, காய்ந்து உதிர்ந்து விடும்.
துயர் தீர்க்கும் துத்திச்செடி அடுத்த வாரம்.
— வளரும்
- ம. வான்மதி
