தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/புலிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

புலிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?

புலிகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம்?


PUBLISHED ON : ஜூலை 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை   29  -  உலக புலிகள் தினம்

இந்தியாவில், 17 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் ஓர் உயிரினம், புலி. இதன் எடை சராசரி, 200 கிலோ, 3.3 மீ., நீளம் இருக்கும். மணிக்கு, 60 கி.மீ., ஓடக்கூடிய விலங்கு.

ஒருவேளைக்கு இரையாக, 40 கிலோ மாமிசம் சாப்பிடும். பசித்தால் மட்டுமே வேட்டையாடும். வயிற்றில் குட்டிகளை சுமக்கும் எந்த விலங்கையும் இது தாக்காது; குட்டிகளையும் தாக்காது. புலிகள் இயல்பில் கூச்ச சுபாவம் உள்ளவை. ஒரு முகத்தை பார்த்து விட்டால் எளிதில் மறக்காது.

இந்தியாவின் தேசிய விலங்கு, புலி. உலகிலுள்ள புலிகளில், நான்கில் மூன்று பங்கு இந்தியாவில் இருக்கிறது. தற்போது இந்தியாவில், 3,167 புலிகள் உள்ளன.

நமக்கு கிடைக்கும் தண்ணீர் முதல், காற்று வரை அனைத்தும், காடுகளில் இருந்து தான் கிடைக்கிறது. அதை காப்பது புலிகள் என்பதால் தான், அவற்றை காடுகளின் காவலன் என்கின்றனர்.

புலிகளின் எச்சங்கள் தான், காடுகளில் பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன. புலிகள் இருக்கும் காடுகளில் மனித நடமாட்டம் இருக்காது. அதனால், மரங்கள் வெட்டப்படாது. காடுகளில் மரங்களின் அடர்த்தி அதிகரித்து, பல பறவைகள் மற்றும் விலங்குகள் வாழத் துவங்கும்.

ஒரு புலி, ஒரு ஆண்டுக்கு சுமார், 45 முதல் 55 வரையிலான விலங்குகளை உணவாகக் கொள்ளும். இதன் மூலம் காடுகளின் சமநிலை காக்கப்படுகிறது. தனக்கான உணவு இல்லாத இடத்தில் புலிகள் வசிக்காது.

இந்தியாவில், 19ம் நுாற்றாண்டின் இறுதியில், 40 ஆயிரம் புலிகள் இருந்தன. 1972ல் கணக்கெடுப்பின் போது, வெறும், 1,411 புலிகள் மட்டுமே இருந்தன. இந்திரா பிரதமராக இருந்தபோது, அழிந்து வரும் புலிகளை காப்பாற்ற, ஏப்., 1, 1973ல், 'புராஜெக்ட் டைகர்' ஆரம்பிக்கப்பட்டது.

இதனால், ஒன்பதாக இருந்த புலிகள் காப்பகம், 53 ஆக மாறியது. 2010ல், ரஷ்யாவில், 13 நாடுகள் கலந்து கொண்ட புலிகள் விழிப்புணர்வு மாநாட்டில் தான், ஜூலை 29ம் தேதியை உலக புலிகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். புலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில், தானியங்கி புகைப்பட கருவிகள் பொருத்தப்படும். அவற்றின் நடமாட்டத்தை கேமரா மூலம் பதிவு செய்து, கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல, புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது, இயற்கையின் அதிசயம். இதன் அடிப்படையில் தான் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இந்தியாவில், 17 மாநிலங்களில் புலிகள் இருக்கின்றன. கடந்த, 2018ம் ஆண்டிலிருந்து புலிகள் கணக்கெடுப்பிற்கு, 4.7 கோடி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில், புலிகளின் உருவம் மட்டும் பதிவானது, 97 ஆயிரத்து 399. இதிலிருந்து தான் 3,167 புலிகள் உள்ளதாக கணக்கிட்டனர்.

உலகிலேயே அதிகம் பேரால் விரும்பப்படும் விலங்கு, புலி. காரணம், அதன் கம்பீரம் மற்றும் வண்ணமயமான உடலமைப்பு. இதனால் தான் உலகில் அதிகம் புலிகள் உள்ள, 13 நாடுகளில், ஏழு நாடுகள், 'குளோபல் டைகர் போரம்' எனும் அமைப்பில் இணைந்து, அதை பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதன் தலைமையகம் புதுடில்லியில் உள்ளது.

ஞான தேவ்ராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us