தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஊர் கூடித் தேர்... (13)

ஊர் கூடித் தேர்... (13)

ஊர் கூடித் தேர்... (13)


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிரன்ட் லைனர்ஸ்' ஐந்தாம் பகுதியை வெளியிட, நடிகரும், இயக்குனரும், 'டிவி'யில், 'அரட்டை அரங்கம்' நடத்தியவருமான விசுவை, 'டிவி' செய்தி வாசிப்பாளர், வரதராஜன் மூலம் சந்தித்திருந்தேன்.

அரட்டை அரங்க பட்ஜெட் அங்கு சாத்யம் இல்லை என்பதால், 'என்னை உட்படுத்தாமல், உள்ளூர் பேச்சாளர்களை வைத்து நடத்திக் கொள்ளுங்கள்...' என்று அனுமதித்தார். அதன்படியே பலமான வரவேற்புடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

ஒரு சில பிரபலங்களை கடைகளுக்கு அழைத்தோம் என்றால், 'நல்ல பரிசுப் பொருளாக தரச்சொல்லுங்கள்...' என்பர். ஆனால், விசுவோ, 'ரசிகர்களை சந்தோஷப்படுத்த கடைக்கு வரேன். ஆனால், அவர்களின் பரிசு பொருட்கள் எதையும் ஏற்க மாட்டேன்...' என்றார்.

அந்த சமயத்தில், குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டிருக்க, வழக்கமான உதவியுடன், இதற்கும் உதவ முடிவெடுத்து, விசுவிடம் தெரிவித்தோம். 'நல்லா செய்யுங்க. என் நிகழ்ச்சி மூலம் பூகம்ப நிவாரண நிதி திரட்ட முடியுமானால், என் பெயரை தாராளமாய் பயன்படுத்திக்கலாம்...' என்று ஊக்கம் தந்தார்.

பேச்சாளர்கள் உள்ளூர் என்பதால், அதை தொகுத்து வழங்க, பிரபலம் வேண்டும் என்று, லேனா தமிழ்வாணனை அழைக்க, சம்மதித்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு அந்த தேதியில் வர முடியாத நெருக்கடி.

என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது, அண்ணன் இல்லாவிட்டால் என்ன, தம்பியை அழைப்போம்; மணிமேகலை பிரசுர ரவி தமிழ்வாணன் சட்டென ஞாபகத்துக்கு வர, அவரும் சற்று தயக்கத்துக்கு பின் சம்மதித்தார்.

வானொலிகளில் பேசிய அனுபவம் மட்டும் ரவிக்கு இருந்ததே, தயக்கத்துக்கு காரணம். மேடை பேச்சு அவருக்கு புதுசு.

வானொலியில் கேட்டிருந்த அவரது கணீர் பேச்சை வைத்து, 'மேடையிலும் உங்களுக்கு முடியும் வாருங்கள்...' என்று, ஒரு சவாலாக அவரை அழைத்து வந்து விட்டேன். ஆனால், முதல் நாள் ஒத்திகையில் ஏமாற்றம். ரவிக்கும், தன் தொகுப்பில் திருப்தியில்லை.

ஒருநாள் தான் இருந்தது. ரவிக்கு சரிப்படாது என்ற பட்சத்தில், இனி யாரை வைத்து எப்படி என்று மன உளைச்சல் ஏற்பட்டது. அதி நம்பிக்கையில் தவறான முடிவு எடுத்து விட்டேனோ என்று உறுத்தல். அப்படி, குழம்பிப் போயிருந்த சமயத்தில், அருமருந்தாக அமைந்தார், விசு.

ரவியை தனியே அழைத்து, லேசாய் பயிற்சி கொடுத்து, யோசனைகள் சொல்லி, மறுநாள் காலையில் பேச்சாளர்களை வைத்து மீண்டும் ஒரு ஒத்திகை.

எதிர்பார்த்தபடியே நிகழ்ச்சிக்கு ஏக கூட்டம்.

தன் ஆழமான, அழுத்தமான பேச்சால் அசத்தி விட்டார், ரவி. கூட்டத்தை பார்த்த, விசு, நெகிழ்ந்து போய் வெறும் தலைமை மட்டும் என்பதை தளர்த்தி, இடையிடையே மேடை ஏறி பேசி, தீர்ப்பு சொல்லி, கூட்டத்தை பிரமாதப்படுத்தி விட்டார்.

இதேபோல மிக சிறப்பாக கலக்கிய இன்னொருவர், பி.எச்.அப்துல் ஹமீது.

பி.எச்.அப்துல் ஹமீது, தமிழ் பற்று மட்டுமின்றி, பண்பாடு, நேர்மை, நாணயம், நாகரிகம் மற்றும் வாக்கு காப்பாற்றும் மேன்மையானவர்; மென்மையானவர். எப்போதும் மலர்ந்த முகம். இனிமையான பழக்க வழக்கங்கள். தெளிவான உச்சரிப்பு.

தமிழ் இலக்கியம் என்றில்லாமல், சினிமா பாடல்களையும் அந்த நாள் முதல் இன்று வரை, நுனி நாக்கில் வைத்திருப்பவர். இவரது, 40 ஆண்டு சேவைக்கு, பிப்., 2002ல், பாராட்டு விழா எடுக்க வேண்டி அணுகியபோது, உடனே சம்மதித்தார்.

'நிகழ்ச்சி எந்த மாதிரி அமைக்கப் போறீங்க...' என கேட்டு, தன் ஆலோசனைகளுடன், விசா, விமான டிக்கெட் விஷயங்களை விசாரித்தபடி இருப்பார்.

'குவைத்தில், பாட்டு திறமையுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், பாட்டுக்கு பாட்டு நடத்தலாம். ஆனால், பாட்டுக்கு பாட்டுன்னு வரும்போது, பின்னணியில் வாத்தியங்கள் வாசித்தால்தானே நிகழ்ச்சி எடுபடும். அதற்கு கைதேர்ந்த இசை கலைஞர்களையும் ஏற்பாடு செய்யுங்க...' என்றார்.

விமான டிக்கெட், விசா என, பட்ஜெட் கூடுமே என்று யோசிக்க, 'அப்போ, என் மனைவியை வேண்டுமானாலும் விட்டுடலாம். நான் மட்டும் வர்றேன். இசை கலைஞர்கள் மிக முக்கியம்...' என்று, அண்டை நாடான இலங்கையிலிருந்து சிறந்த இரண்டு இசை கலைஞர்களை, மிக குறைந்த ஊதியத்தில் அழைத்து வந்தார்.

ஹமீது சொன்னபோது தெரியாத உண்மை, முக்கியத்துவம், நிகழ்ச்சி சிறப்பாக அமைந்த பின், எங்களுக்கு புரிந்தது. அவரது பாராட்டு விழாவிற்கு வந்திருந்த, திருநாவுக்கரசர் எம்.பி.,யையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டு பேசி, ரசிகர்களை ஆரவாரிக்க வைத்தார்.

நட்புக்கும் மிகுந்த மரியாதை தரக்கூடியவர், ஹமீது. என் மகளின் திருமண வரவேற்புக்கு வந்து கடைசி வரை இருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின், திரும்பவும் குவைத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வந்தபோது, 'நிகழ்ச்சி முடிந்து, என் நண்பர்களை சந்திக்க வேண்டும்...' என்று, நிகழ்ச்சி அமைப்பாளரிடம் பேசி, எங்களுக்காக ஒரு முழு நாளையே ஒதுக்கியது, மெய்சிலிர்க்க வைத்தது.

சினிமாவில், சிவாஜி முதல் கமல் வரை இவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். தெனாலி படத்துக்காக, கமலுக்கு, சிங்கள தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, அவர் எந்த அளவிற்கு அதை கிரகிப்பாரோ என்று ஆரம்பத்தில் இவருக்கு ஐயம் ஏற்பட்டதாம். ஆனால், கமல் ஒரே பிடியாய் ஆழமான சிங்கள தமிழுக்கு போய்விட, இயக்குனர் ரவிக்குமாரும், இவரும், எளிமையான சிங்கள தமிழ் போதும் என்று, அவரிடம் கெஞ்சும்படி ஆயிற்றாம்.

'முடி இல்லாவிட்டால் என்ன சார்... 'விக்' வைத்துக் கொள்ளக் கூடாதா...' என, ஹமீதிடம், 'தலை'யாய கேள்வி கேட்டேன்.

அவரும் தயங்காமல், 'உங்களுக்கு தெரியுமா... அந்த நாட்களில் எனக்கு அதிக முடி இருந்தது. 'விக்' வைத்தால் ஏற்படும் உபாதைகளை சிவாஜி முதற்கொண்டு பலரும் சொல்லி இருந்ததால், எந்த தொந்தரவும் இல்லாமல், 'ப்ரீ'யாக இருக்கிறேன்...' என சொல்லி, சிரித்தார்.

குவைத் நிகழ்வுக்காக வந்த நடிகர் ஜெய்சங்கர், விமான நிலையத்திலேயே மயங்கி, 'கோமா'வாகி விட்ட சம்பவம் பற்றி அடுத்த வாரம்...

தொடரும்

என். சி. மோகன்தாஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us