தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா - கே

'மணி, அலுவலக நேரம் முடிந்ததும், வீட்டுக்கு வந்துட்டு போயேன்...' என்று போன் செய்தார், லென்ஸ் மாமா.

'எதுக்கு வீட்டுக்கு வரச்சொல்றார். இரண்டு நாளா ஆபீசுக்கும் வரலயே அவர்... உடம்பு சரியில்லையோ...' என்று நினைத்தபடி, மாலை, அவரது வீட்டுக்கு சென்றேன்.

கதவை லேசாக தட்ட, திறந்து கொண்டது. நான் வருவேன் என்று, கதவை தாழ் போடாமல் வைத்திருந்திருக்கிறார்.

'உள்ளே வா...' என்று குரல் கொடுத்தார், மாமா.

ஹாலில் இருந்த, 'டிவி'யில் மியூசிக் சேனல் ஒன்றில், சமீபத்தில் வெளியான படத்தின் ஒரு குத்துப்பாடலை ரசித்து, பார்த்துக் கொண்டிருந்தார்.

'சமந்தா பொண்ணு என்னமா ஆடறா பாரு மணி. இந்த ஒரு நடனத்துக்கு மட்டும், ஒன்றரை கோடி சம்பளமாம்...' என்று சிலாகித்தார்.

'மாமி இல்லையா... ஏன் இரண்டு நாளா ஆபீசுக்கு வரலை...' என்றேன்.

'அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா... ஒரே மாதிரியான வேலை செய்து, அலுத்துப் போச்சு. அதான், 'லீவு' அடிச்சிட்டேன். வீட்டில் சும்மா இருப்பதும், 'போர்' அடிச்சுதா, அதான் பேச்சுத் துணைக்கு உன்னை வரச்சொன்னேன்...' என்றார்.

'இரவு சாப்பாட்டுக்கு ஏதாவது செய்யட்டுமா?' என்றவாறு, சமையலறைக்கு சென்றேன்.

'பிரிஜ்'ஜை திறந்து பார்த்ததில், அரை பாக்கெட் மஷ்ரூம், தக்காளி, கொஞ்சம் இஞ்சி, பச்சை மிளகாய் இருந்தது.

அடுப்பு மேடையின் கீழே கூடையில், வெங்காயம், பூண்டு இருந்ததையும் எடுத்துக் கொண்டேன்.

சமையலறை, 'செல்ப்'பை சோதித்ததில், ஒரு ஆழாக்கு பாசுமதி அரிசி இருந்தது. 'மஷ்ரூம் ப்ரைடு ரைஸ்' செய்துடலாம். 'சைடு டிஷ்'சுக்கு ஆகுமே என்று, மீதமிருந்த பச்சை பயரையும் எடுத்து, மளமளவென்று சமையல் செய்ய ஆரம்பித்தேன்.

வெங்காயம், மஷ்ரூம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு, எண்ணெயில் வதக்கினேன். சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு மற்றும் மிளகு துாள் சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் பாசுமதி அரிசி சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்தேன். 'மஷ்ரூம் ப்ரைடு ரைஸ்' தயார்.

அடுத்து, பச்சை பயரை வேக வைத்து, மசாலா பொடிகளுடன் சீரகம் மற்றும் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, 'கிரேவி' செய்து முடித்தேன்.

'மணி, வாசனை மூக்கை துளைக்குதே...' என்றபடி எழுந்து வந்தவர், 'வாசனையே பசியை துாண்டுது... வா, இரண்டு பேரும் சாப்பிடலாம்...' என்றார்.

'மஷ்ரூம் ப்ரைடு ரைஸ்' மற்றும் பச்சை பயறு, 'கிரேவி' செய்து, நீங்களும் சாப்பிட்டு பார்த்து, எனக்கு எழுதுங்கள்.



சென்னையை சேர்ந்த வாசகி, சவுமியா சுப்ரமணியன் அனுப்பிய கடிதம் இது:

முகநுால் பக்கத்திலிருந்த 'இன்ஸ்பிரேஷனல் கோட்ஸ்' என்ற ஒரு பதிவு, என்னைக் கவர்ந்தது. அது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன்:

ஐம்பது வயதைக் கடந்து, 60 நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தன் தோழியிடம், 'உன்னிடம் என்ன மாற்றங்களை உணர்கிறாய்?' என்று கேட்டுள்ளார், இன்னொரு பெண்.

அவர் அனுப்பிய பதில்:

* என் பெற்றோரை, என்னுடன் பிறந்தவர்களை, என் இணையரை, என் குழந்தைகளை, என் தோழியரை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கியுள்ளேன்

* நான், 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை

* காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். 10 ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று, மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே

* உணவகங்களில் கூடுதலாக, 'டிப்ஸ்' தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்

* 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க...' என்று இப்போதெல்லாம் முதியோரிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தம் பழைய நினைவுகளை அசை போடுகின்றனர்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகின்றனர்

* சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன். எல்லாரையும் திருத்தும் பொறுப்பு, என்னுடையது அல்ல. எல்லாரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட, என் மன அமைதி எனக்கு முக்கியம்

* பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என் மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை:- ஒருவர் உங்களைப் பாராட்டும் போது, ஒருபோதும் மறுக்காதீர்கள்; நன்றி சொல்லி, முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்

* என் ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது

* என் மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்

* யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணி, மோசமாகச் செயல்பட்டாலும், நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை; என் வாழ்க்கையை வாழ்கிறேன்

* என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுஷியாக்குபவை என் உணர்வுகள் மட்டும் தான்

* ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, 'ஈகோ-'வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என், 'ஈகோ' என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்

* ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்

* என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என் சந்தோஷத்திற்கு நான் தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு; அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா!

- இப்படி எழுதியுள்ளார்.

ஐம்பது வயதை கடந்தவர்கள் மேற்கண்டவைகளை முயற்சி செய்து பார்க்கலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us