PUBLISHED ON : பிப் 27, 2022

* ஆ. மாடக்கண்ணு, பொட்டல்புதுார், தென்காசி: குடித்து விட்டு வாகனத்தை செலுத்துபவர்கள், சாலை விதிகளை பின்பற்றுவது இல்லையே...
'குடி' அவர்கள் கவனத்தை முற்றிலும் மாற்றி விடும்... அதனால், சாலை விதிகள் அவர்களுக்கு மறந்து விடும்! இதனால் ஏற்படுவது தான் இறப்புகள்.
தி. குமார், நெல்லை: நம் நாட்டின் தந்தை மகாத்மா காந்தியை பார்த்திருக்கிறீர்களா?
குமார்... என் வயதை தெரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள் என்பது தெரிகிறது... மகாத்மாவை பார்த்திருக்கிறேன்... புகைப்படங்களில்!
வி. ஜலாலுதீன், கோவை: நடிகையருக்கு, பொதுவாக ஏன் திருமணம் நடப்பதில்லை?
அச்சம் காரணமாக இருக்கலாம்... தங்களது திரைமணம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று!
கி. ரமேஷ், சென்னை: என் மனதிற்கு சங்கடம் ஏற்படுத்தும் ஒரு கேள்வி... என் வளர்ச்சியை கண்டு, தொடர்புடையோர் அனைவரும் பொறாமைப்படுகின்றனரே...
பொறாமைக்கு எதிராக பொறுமை தான் தேவை. உங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களை லட்சியம் செய்ய வேண்டாம்!
எஸ். ரகோத்தமன், சென்னை: உங்களைக் காட்டிலும் படு சுறுசுறுப்பான பத்திரிகையாளர் என்று யாரை கருதுகிறீர்கள்?
எத்தனையோ பேர் இருக்கின்றனர். நான், படு சோம்பேறிகளுக்கும், சோம்பேறிகளுக்கும் இடையில் இருப்பவன்!
* ரா.ஹேமா, சென்னை: ஒரு பெரிய குடும்பத்திற்கு மூத்த மருமகளாய் செல்ல இருக்கிறேன்... உங்கள் அறிவுரை வேண்டும்...
புத்திசாலித்தனத்துடன், மனித இயல்பை புரிந்து கொண்டு செயல்படுங்கள்; அன்பாய் நடந்து கொள்ளுங்கள்... உரிய மதிப்பு கிடைக்கும்!
க. அன்புராஜ், பழனி: இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டம் தேவையா?
செய்திதாள் படிப்பதில்லையா... விபத்துகளில் எத்தனை பேர் மண்டை உடைகிறது. கவசம் அணியாவிட்டால் திவசம் தான்!
