தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (4)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (4)

நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (4)


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன் கதைச்சுருக்கம்: காதலர்களான புவனேஷ் - முகிலா திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், காணாமல் போனாள், முகிலா. புவனேஷ், நண்பன் தருண் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர், கோவில் அருகில் முகிலாவின் தோழி அதுல்யாவை சந்திக்கின்றனர். அதுல்யாவிடம் விசாரிக்கும்போது, முகிலா எப்போதும், 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி'யை தான் பயன்படுத்துவார், என்ற தகவல் கிடைக்க, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார், இன்ஸ்பெக்டர் -

மொபைல் போனின் மறுமுனையிலிருந்த அகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன்.

''அகிலன்...''

''சார்...''

''டாக்சி இருக்கிற, 'லொக்கேஷனை' மறுபடியும் ஒரு தடவை சரி பார்த்து, அதை, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து என், 'வாட்ஸ் ஆப்'க்கு உடனடியாய் அனுப்பி வைக்கணும். அப்பத்தான் அந்த இடத்தை நான் துல்லியமாய் அடையாளம் கண்டு, அங்கே போய்ச் சேர முடியும்.''

''எனக்குப் புரியுது சார்... இன்னும் ரெண்டு நிமிஷத்துல உங்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' பண்ணிடறேன்.''

''டிரைவர் மகுடபதியோட போட்டோவும் வேணும்.''

''அனுப்பிடறேன் சார்.''

''பை த பை... டிரைவர் மகுடபதி ஆள் எப்படி?''

''பரவாயில்லை சார்.''

''பதில் தெளிவாய் இல்லையே?''

''கார் ஓட்டுவதில் திறமையானவர், மகுடபதி. ஆனா, கொஞ்சம் குறுகிய மனப்பான்மை உடையவர்; முன்கோபம் அதிகம். 'டிரைவிங்' பண்ணும்போது, ரோட்ல போற மற்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மீறிட்டா, வண்டியை நடு ரோட்ல நிறுத்திட்டு, சண்டைக்குப் போயிடுவார். இப்ப கூட அவர் மேல, கோர்ட்ல ரெண்டு அடிதடி வழக்கு இருக்கு.''

''மகுடபதிக்கு இதே ஊரா?''

''இல்ல சார்... திருநெல்வேலி.''

''சரி... இப்போதைக்கு இந்த விபரங்கள் போதும். நான் இப்போ அந்த ஜி.பி.எஸ்., பாயின்ட்டுக்கு போயிட்டு, போன் பண்றேன்.''

''சார்...'' மறுமுனையில் குரல் தயக்கமாய் இழுபட்டது.

''என்ன?''

''இப்பவாவது பிரச்னை என்னான்னு சொல்லலாமே?''

''அதையெல்லாம் மொபைல் போன்ல சொல்லிட்டிருக்க நேரமில்லை. இப்ப உடனடியா களத்துல இறங்க வேண்டிய கட்டாயம்,'' என்று, மொபைல் போன் இணைப்பை துண்டித்தார், முத்துக்குமரன்.

தனக்கு அருகில் நின்றிருந்த அதுல்யாவிடம் திரும்பி, ''முகிலாவோட கல்யாணத்தை நீ பார்க்க வராம இருந்திருந்தா, உன் மூலமா இந்த, 'லிட்டில் ஸ்டார் கால் டாக்சி' பற்றிய விபரங்கள் எனக்கு கிடைச்சிருக்க வாய்ப்பில்லை. நீ, சரியான நேரத்தில் தகவல் சொன்னதுக்கு நன்றி.''

அதுல்யாவின் விழிகளில் நீர் நிரம்பி பளபளத்தது.

''சார்... முகிலாவுக்கு ஏதும் ஆகியிருக்காதே?''

''கவலைப்படாம நீ வீட்டுக்குப் போம்மா... அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ள முகிலா உன் கூட பேசுவா,'' என்ற முத்துக்குமரன், தருணையும், புவனேஷையும் ஏறிட்டு, ''இனிமேல் வரக்கூடிய ஒவ்வொரு விநாடியும், நமக்கு முக்கியம். வாங்க, ஜி.பி.எஸ்., பாயின்ட்டுக்கு போவோம்.''

போலீஸ் வேன், லாலி ரோடு சிக்னலைத் தொட்டபோது, நேரம் காலை, 5:30 மணி.

நான்கு சாலைகள் கூடும் சிக்னலில் இருந்த மஞ்சள் விளக்குகள் சீராய் விட்டு விட்டு ஒளிர்ந்து, ஆனைக்கட்டியை நோக்கி வேகமாய் போகும் மூர்க்கத்தனமான லாரிகளை எச்சரித்து அனுப்பிக் கொண்டிருந்தன.

சிக்னலுக்கு சற்று தள்ளியிருந்த உழவர் சந்தை, சொற்ப அளவு ஜன நடமாட்டத்தோடு தெரிந்தது. மினி வேன்களிலிருந்து காய்கறிகளை இறங்கிக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தன் மொபைல்போனில், 'வாட்ஸ் ஆப்'பில் இருந்த, ஜி.பி.எஸ்., பாய்ன்ட்டை உள்வாங்கி, ''டாக்சி நின்னுட்டிருக்கிற இடம், உழவர் சந்தைக்குப் பக்கத்து ரோடான, குரு கோவிந்த்சிங் ரோடுன்னு ஜி.பி.எஸ்., காட்டுது. அந்த ரோடுக்கு போயிட வேண்டியது தான்,'' என, தருண் மற்றும் புவனேஷிடம் கூறினார்.

குரு கோவிந்த்சிங் ரோடுக்குள் நுழைந்தது, போலீஸ் வேன்.

ஆள் நடமாட்டம் சுத்தமாய் வறண்டு போயிருந்த அரையிருட்டான அந்த ரோடின் இடதுபக்க ஓரமாய் ஒரு மரத்துக்கு கீழே, மஞ்சள் நிற, 'லிட்டில் ஸ்டார் டாக்சி' நின்றிருந்தது. சத்தமில்லாமல் அதன் பின்னால் போய் நின்று, இன்ஜின் சத்தத்தை நிறுத்திக் கொண்டது, போலீஸ் வேன்.

முத்துக்குமரன், தருண் மற்றும் புவனேஷ் மூவரும் வேனிலிருந்து வெளியேறி, மெதுவான குரலில் பேசியபடி நடந்தனர்.

''சார்... காரோட பதிவு எண்ணை, 'செக்' பண்ணிட்டீங்களா?''

''பண்ணிட்டேன்; அதே நம்பர் தான்.''

டாக்சியின் மேற்பரப்பு, பனி ஈரத்தோடு தெரிய, பின்பக்கக் கதவின் கண்ணாடிகள் மட்டும், ஒரு அங்குல இடைவெளியோடு திறந்திருந்தது.

அந்த இடைவெளியில் கண்ணை வைத்து பார்த்தார், முத்துக்குமரன். பின் சீட்டில், கழுத்து வரைக்கும் போர்வையை போர்த்தி ஒரு அடைப்பு குறி போல் படுத்து குறட்டை விட்டுக் கொண்டிருந்த, அந்த நபர் பார்வைக்கு தட்டுப்பட்டான்.

நடுத்தர வயது, தொப்பை போட்ட உடம்பு, சிலும்பிய தலைமுடி.

டாக்சியின் கண்ணாடியை மெல்லத் தட்டினார், முத்துக்குமரன். குறட்டை உடனே நின்றது.

சில விநாடிகள் பொறுமை காத்து, சற்று பலமாய் தட்டினார்.

இப்போது போர்வை அசைந்தது.

டாக்சியின் கதவு அதிரும்படியாக இன்னும் பலமாய் தட்ட, உள்ளேயிருந்து, ''யா... யார்ரு?'' குரல் குழறலாய் வெளிப்பட்டது.

எரிச்சலடைந்த முத்துக்குமரன், காரின், 'டாப்'பை ஓங்கி தட்டி, குரல் கொடுத்தார்.

''வெளியே வா...''

''யார்ன்னு கேட்டேன்.''

''போலீஸ்...''

அவசர கதியோடு போர்வை இப்போது வேகமாய் அசைய, உருவம் எழுந்து உட்கார்ந்தது. காரின் கண்ணாடி கீழே இறங்கிய அதே விநாடி, தாடி, மீசையோடு துாக்க கலக்க முகம் ஒன்று எட்டிப் பார்த்து, குரல் நடுக்கத்தோடு வெளிப்பட்டது.

''சார்...''

''உம் பேரு மகுடபதி தானே?''

''ஆ... ஆமா சார்.''

''வெளியே வா.''

டிரைவர் மகுடபதி, அரக்க பரக்க காரின் கதவைத் திறந்து வெளியே வந்தான். முத்துக்குமரன் தன் ஆட்காட்டி விரலால் மூக்கைத் தேய்த்தபடி, ''என்ன குடிச்சிருக்கியா?''

''சும்மா கொஞ்சம்... அதுவும் இப்பத்தான் சார். இன்னிக்கு, 'நைட் ஷிப்ட் டிரைவிங்' என்பதால், ரொம்பவும் சோர்வாக இருந்ததுன்னு போட்டுட்டு படுத்துட்டேன். 'ரெண்டு மணி நேரத்துக்கு, வாடிக்கையாளர் யாரையும், 'பிக் - அப்' பண்ண மாட்டேன்'னு ஆபீஸ்லேயும் சொல்லிட்டேன். 'லிக்கர்' ஒரு துளி உள்ளே போனாலும், 'ஸ்டியரிங்' மேல கையை வெக்க மாட்டேன் சார்.''

''சரி... அந்தப் பொண்ணு எங்கே?''

மகுடபதியின் முகம் வெகுவாய் மாறியது.

''எந்தப் பொண்ணு சார்?''

''முகிலா?'' என்றார், முத்துக்குமரன்.

''முகிலாவா... அது யாரு சார்?''

''நீ இன்னிக்கு கடைசியா, 'பிக் - அப்' பண்ணின, வாடிக்கையாளர் ஆணா, பொண்ணா?''

''பொண்ணு சார்.''

''எந்த இடத்திலிருந்து, 'பிக் - அப்' பண்ணினே?''

''பீளமேடு சந்திரகாந்தி நகர்லயிருந்து.''

''ட்ராப் ஆப் எங்கே?''

''டி.பி., ரோடு சார்.''

''நீ, 'பிக் - அப்' பண்ணின அந்தப் பொண்ணோட பேர் தான், முகிலா.''

''பேரெல்லாம் எனக்குத் தெரியாது சார்... வாடிக்கையாளரோட போன் நம்பரை மட்டும் தான் ஆபீசிலிருந்து எனக்கு, 'மெஸேஜ்' பண்ணுவாங்க.''

''ஓ.கே., இப்ப நான் மறுபடியும் முதல் கேள்விக்கே வர்றேன். அந்த வாடிக்கையாளர் பொண்ணு முகிலா இப்ப எங்கே?''

''ட்ராப் பண்ணிட்டேன் சார்.''

''ஸ்பாட் எது?''

''அது வந்து சார்... அந்தப் பொண்ணு முதல்ல சொன்ன இடம், டி.பி., ரோடு... ஆனா, அந்தப் பொண்ணு இறங்கின இடம் வேற சார்.''

பதட்டமடைந்தான், புவனேஷ்.

''வேற இடம்ன்னா எந்த இடம்?''

''பூ மார்க்கெட் கார்னர்.''

''அங்கே இறங்க என்ன காரணம்?''

''என்ன காரணம்ன்னு எனக்குத் தெரியலை சார். தேவாங்கர் ஹைஸ்கூல் ரோட்ல, அர்ச்சனா தியேட்டரைத் தாண்டி டாக்சி போயிட்டிருக்கும் போது, அந்தப் பொண்ணு என்கிட்ட காரை ரோட்டோரமாய் நிறுத்தச் சொன்னா...

''உடனே நான், 'டி.பி., ரோடுக்கு போக வேண்டாமா'ன்னு கேட்டேன். 'வேண்டாம் டிரைவர், என்னை அந்த பூ மார்க்கெட் கார்னர்ல, இறக்கி விடுங்க; அங்கே எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு'ன்னு சொன்னதால, நான் அங்கே இறக்கிவிட்டு வந்துட்டேன்.''

இறுகிய முகத்தோடு, முத்துக்குமரன் இரண்டடி முன் வந்து, மகுடபதியின் தோள் மீது கையை வைத்து அழுத்தி, ''இப்ப நீ சொன்னது உண்மையா, பொய்யா?'' என்றார்.

''நான் எதுக்காக சார் பொய் சொல்லணும்... என்ன நடந்ததோ அதைத்தான் சொல்லிட்டிருக்கேன். ஏன் சார், அந்தப் பொண்ணு எம் மேல ஏதாவது புகார் கொடுத்திருக்கா?''

''இல்ல.''

''அப்புறம் என்ன சார் பிரச்னை... எதுக்காக என்னை இப்படி விசாரிக்கிறீங்க?''

''அந்தப் பொண்ணு முகிலாவை காணோம்... டி.பி., ரோட்ல இருக்கிற விநாயகர் கோவிலுக்கு வரவேண்டிய பொண்ணு வரலை.''

மகுடபதியின் முகம், ஒரு சில விநாடிகள் அதிர்வுக்கு உட்பட்டு, பின் இயல்புக்கு மீண்டது.

''அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்... அந்தப் பொண்ணு டாக்சியில் ஏறும்போது, 'இறங்குற இடம் ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு'ன்னு சொல்லிட்டு, அதுக்கப்புறம் நடுவுல காரை நிறுத்தச் சொல்லி, பூ மார்க்கெட் கார்னர்ல இறங்கிட்டா.

''ஒரு வாடிக்கையாளர் எந்த இடத்துல இறங்க விருப்ப படறாரோ அந்த இடத்துல விடறது தான், டாக்சி டிரைவரோட வேலை. அதைத்தான் நான் பண்ணியிருக்கேன்... என் மேல வீணா சந்தேகப்படாதீங்க சார்.''

''சந்தேகப்படாம எப்படியிருக்க முடியும்... முகிலா, உன் டாக்சியில் தானே வந்திருக்கா?''

''நியாயமான சந்தேகம் தான் சார்... ஆனா, அந்தப் பொண்ணு காணாம போனதுக்கு நான் காரணம் கிடையாது.''

''சரி... நான் இப்ப கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் கொஞ்சம் யோசிச்சு, பதிலை சொல்லு.''

''கேளுங்க சார்.''

''அந்தப் பெண், டாக்சியில் வரும்போது நார்மலாய் இருந்தாளா?''

''இல்ல சார்... டாக்சியில ஏறின நிமிஷத்திலிருந்து ஒரே பதற்றம் தான்; பீளமேட்டிலிருந்து அவினாசி ரோடு மேம்பாலம் வரைக்கும் போன்ல பேசிட்டே வந்தா.''

''என்ன பேசினாங்கிறதை, 'நோட்' பண்ணியா?''

''சார்... நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் சரி, அந்தப் பொண்ணு பேசினதுல ஒரு வார்த்தை கூட என் காது நுனிக்கு வரலை. காரணம், அந்த அளவுக்கு மொபைல் போனை காதோடு ஒட்ட வெச்சு மெதுவா பேசிட்டு வந்தா... ஒரு சமயம் அழுத மாதிரியும் இருந்தது.''

''என்ன ஏதுன்னு நீ கேட்கலையா?''

''சார்... வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் இருக்கலாம்; அது, 'பர்சனலா'வும் இருக்கலாம். என்னோட கொள்கை, வாடிக்கையாளர்கிட்டே நானா எதுவும் பேச மாட்டேன். அவங்க ஏதாவது கேள்வி கேட்டா, பதில் சொல்வேன்; அவ்வளவுதான்.''

''சரி... உன் மொபைல் போனைக் குடு.''

''எதுக்கு சார்?''

''சொன்னாத்தான் தருவியா?''

''ஒரு பேச்சுக்கு கேட்டேன்... இந்தாங்க சார்.''

தன் சட்டை பாக்கெட்டிலிருந்த மொபைல்போனை எடுத்து நீட்டினான், மகுடபதி.

அதை வாங்கிய முத்துக்குமரன், தருணிடம் கொடுத்து, ''தருண்... இந்த போனில் இருக்கிற, 'ரீசன்ட் கால்ஸ் ஆப்ஷனு'க்கு போய், 'இன் கம்மிங், அவுட் கோயிங் கால்ஸ் நோட்' பண்ணுங்க.''

தருண் போனை வாங்கிக் கொள்ள, முத்துக்குமரன் மறுபடியும் மகுடபதியிடம் திரும்பி, ''முகிலாவுக்கு அப்புறம் வேற யாராவது இந்த டாக்சியில் பயணம் செய்தாங்களா?''

''இல்ல சார்... அந்தப் பெண்ணை இறக்கிவிட்டு, நான் ஓய்வெடுக்க இங்கே வந்துட்டேன்.''

''இந்த டாக்சியை, 'செக்' பண்ணணும், சாவியைக் குடு.''

மகுடபதி தயக்கத்தோடு சாவியை நீட்ட, அதை வாங்கிய, முத்துக்குமரன், முதலில் டிக்கியைத் திறந்து பார்த்து, டாக்சியின் பின் சீட்டுக்கு போய் சாய்ந்தார். உள்ளே இருந்த காற்றில் மல்லிகைப்பூவின் வாசனை மிச்சமிருந்தது. 360 டிகிரி கோணத்தில் காருக்குள் சுழன்ற அவருடைய பார்வை, பின் சீட்டுக்கு கீழே தாழ்ந்த போது, ஒரு திடுக்கிடலுக்கு உட்பட்டு உறைந்தது.

தொடரும்

ராஜேஷ்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us