PUBLISHED ON : ஆக 23, 2020

எதைத் தேடினாலும் சரி, ஆர்வம் - ஊக்கம் - உறுதி ஆகியவை இருந்தால், எண்ணியதை எண்ணியபடியே அடையலாம் என்பது, திருவள்ளுவர் வாக்கு.
இதை விளக்கும் வரலாறு இது:
ஸ்ரீவில்லிப்புத்துாரில், சுப்பிரமணிய பிள்ளை - மீனாட்சியம்மை தம்பதியர் செய்த, தவப்பயனாக அவதரித்த ஞானக் குழந்தை, குருஞான சம்பந்தர். நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்த குழந்தை, சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கரை கண்டதாகவும் வளர்ந்தது.
ஒருநாள், பிள்ளையை அழைத்து மதுரைக்கு சென்றனர், பெற்றோர். சில நாட்கள் அங்கேயே தங்கி, சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்தனர்.
ஊரை விட்டு புறப்படத் தீர்மானித்தபோது, 'நான் இங்கேயே, மதுரையிலேயே தங்குகிறேன்...' என்று, சொல்லி விட்டார், குருஞான சம்பந்தர்.
பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்து, சிவபெருமானை துதித்துப் பாடவும் துவங்கி விட்டார்.
'சரி... பிள்ளை, நல்வழியில் தான் செல்கிறான்...' என்ற திருப்தியோடு, ஊர் திரும்பினர், பெற்றோர்.
மதுரையிலேயே தங்கி, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாதரையும், அன்னை மீனாட்சியையும் தரிசித்தபடி இருந்தார், குருஞான சம்பந்தர்.
வழக்கப்படி ஒருநாள், நீராடச் செல்கையில், பொற்றாமரைக் குளக்கரையில் அடியார்கள் பலர், நீராடி, சிவ பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த குருஞான சம்பந்தருக்கு, நாமும் இவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.
நீராடியதும், சொக்கநாதர் சன்னிதியில் நின்று, 'சொக்கநாதா... அடியேனும் இதேபோலத் தங்களை பூஜிக்க விரும்புகிறேன். திருவருள் புரிய வேண்டும் சுவாமி...' என, வேண்டுதல் வைத்து, தன் இருப்பிடம் திரும்பினார்.
அன்றிரவு, குருஞான சம்பந்தரின் கனவில் காட்சியளித்தார், சொக்கநாதர்.
'அன்பனே... பொற்றாமரைத் திருக்குளத்தில், வடகிழக்கு மூலையில், கங்கைக்குள் யாம் எழுந்தருளி இருக்கிறோம். காலையில் அங்கு சென்று, மூழ்கி எழுந்து எம்மை பூஜிப்பாயாக...' என்று, சொல்லி மறைந்தார்.
இறைவன் திருவருளை எண்ணி மகிழ்ந்த குருஞான சம்பந்தர், மறுநாள் அதிகாலையில் எழுந்து, பொற்றாமரை குளத்தில் நீராடி, இறைவன் சொன்ன இடத்தில் மூழ்கி தடவிப் பார்த்தார். பூஜை பெட்டி ஒன்று கைகளில் சிக்கியது. எடுத்து, திறந்து பார்த்தார்; உள்ளே சிவலிங்கம் இருந்தது.
மகிழ்ச்சி தாங்கவில்லை, பூஜை பெட்டியோடு சொக்கநாதர் சன்னதி சென்று, 11 பாடல்கள் பாடித் துதித்தார்.
குருஞான சம்பந்தர், பூஜை பெட்டியைத் தேடியதைப் போல், நாம் ஆரோக்கியத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். அவருக்கு, பூஜை , நமக்கும் ஆரோக்கியம் கிடைக்கும், அல்லல்கள் நீங்கும்; சந்தேகமேயில்லை.
ஆன்மிக தகவல்கள்!
பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வ சிலைகளையும் வைப்பதற்காக, அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது.
பி. என். பரசுராமன்
