தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகிமை மிக்க மாசிமகம்

மகிமை மிக்க மாசிமகம்

மகிமை மிக்க மாசிமகம்


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்., 25 - மாசிமகம்

கும்பகோணத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது மாசிமகத் திருநாள். இதற்கு காரணம்...

முன்னொரு காலத்தில், தண்ணீரால் உலகம் அழிய இருந்தது. பிரம்மா, சிவனிடம் சென்று, உலகம் மீண்டும் உருவானதும், தன் படைப்புத் தொழிலை எங்கு ஆரம்பிப்பது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், 'கும்பம் ஒன்றில் அமுதத்தை நிரப்பி, படைப்புக்கலன்களை அதனுள் வைத்து நீரில் மிதக்க விடு. உலகம் அழியும் நேரத்தில், அது எங்கு கரை ஒதுங்குகிறதோ, அங்கே சென்று எடுத்து, மீண்டும் உலகை படைக்கலாம். உலகமே அழிந்தாலும், அந்த நகரம் மட்டும் அழியாது...' என்றார்.

இதன்படியே, பிரம்மா செய்த கும்பம், வெள்ளத்தில் மிதந்தது. அந்த குடம் ஒரு இடத்தில் ஒதுங்கியது. சிவன் ஒரு பாணத்தை அதன் மீது எய்தார். கும்பத்தின் மூக்கு சிதைந்தது. அதிலிருந்த அமுதம் நான்கு புறமும் பரவியது. அதுவே தற்போது, 'மகாமகக் குளம்' எனப்படுகிறது. அமுதம், அங்கு சிதறிக்கிடந்த வெண்மணலுடன் கலந்து, ஒரு லிங்கம் உருவானது. இந்த லிங்கமே, 'கும்பேஸ்வரர்' எனப் பெயர் பெற்றது. கும்பகோணத்தில் இது பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பெரும்பாலான கோவில்களில், சுவாமி, அம்பாள் பிரகாரங்களை தனித்தனியே சுற்றிவரும் அமைப்பே இருக்கிறது. ஆனால், இக்கோவிலின் பிரகார அமைப்பு, சுவாமியையும், அம்பாளையும் சேர்த்து சுற்றிவரும் வகையில் உள்ளது. அம்மையப்பனே உலகம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இந்த அமைப்பு இருக்கிறது. கும்பேஸ்வர லிங்கம் மணலால் ஆனதால், அபிஷேகம் கிடையாது. இந்த லிங்கம், கீழே பருத்தும், மேலே செல்ல செல்ல ஊசி வடிவிலும் காணப்படும்.

கோவிலின் முன், பொற்றாமரைக்குளம் இருக்கிறது. நவகன்னியரான நதிகள், மகாமக குளத்தில் நீராடிய பிறகு, பொற்றாமரை குளத்தில் நீராடினர் என்பது ஐதீகம். இதன்படி, மாசிமகத்திற்கு வரும் பக்தர்கள், மகாமக குளத்தில் நீராடிய பின், பொற்றாமரைக்குளத்து நீரையும் தலையில் தெளித்துக் கொள்வர். வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள், வளர்மங்கை ஆகிய திருநாமங்கள் உண்டு. சிவபெருமான் தன் திருமேனியில் பாதியை, அம்மனுக்கு வழங்கியதைப்போல், தன் மந்திர சக்திகளில், 36 ஆயிரம் கோடியை, இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே அம்பாளுக்கென தனியாக, 36 ஆயிரம் கோடி மந்திர சக்தி உண்டு. இதையும் சேர்த்து, 72 ஆயிரம் கோடி மந்திர சக்தி இந்த அம்பாளிடம் உள்ளது. எனவே, இவளை, 'மந்திரபீடேஸ்வரி' என்ற திருநாமமிட்டு அழைக்கின்றனர். அம்மனுக்குரிய சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானது.

மகாமகத் திருவிழா, நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது. நீர்நிலைகளைப் பாதுகாக்கவே, அவற்றை தெய்வத்துக்கு சமமாக முன்னோர் மதித்தனர். நதிகளில் புதுநீர் வரும்போது, அவற்றுக்கு பூஜை செய்தனர். மாசிமகத்தன்று, கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து மகாமக குளத்திற்கும், காவிரியாற்றுக்கும் சுவாமிகள் எழுந்தருளுவர். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோவில் தெப்பக்குளக் கரையில், திருமணம் நடக்கவும், தீர்க்கசுமங்கலி பாக்கியத்திற்கும், பெண்கள் விளக்கேற்றுவது வழக்கமாக உள்ளது.

நம் ஊரிலுள்ள ஆறு, குளங்களைச் சுத்தப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்பதே, மாசிமகம் நமக்கு கற்றுத்தரும் பாடம். நீர்நிலைகளைப் பாதுகாக்க உறுதியெடுப்போமா!

***

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us