தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாஸ்டல் பெண்களே....



லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிப் பணிபுரியும் என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்த நான், அங்கு உலாவிக் கொண்டிருந்த சில பெண்களின் உடையை பார்த்ததும் அதிர்ந்து போனேன். மெல்லிய சிறு மேலாடைகள்; இடுப்பில், குட்டை பாவாடை போன்றவற்றை சிலர் அணிந்திருந்தனர். கையில்லாத பனியன் - லுங்கி போன்றவற்றுடனும் சிலர் இருந்தனர். என் தோழியிடம் கேட்ட போது, முழுக்க முழுக்க பெண்கள் தானே இருக்கிறோம் என்பதாலும், கோடை வெயிலை சமாளிக்கவும், இப்படி அரைகுறை ஆடையில் அவர்கள் இருப்பதாகக் கூறி, 'இதிலென்ன தப்பு...' என்றும் கேட்டாள்.

அவள் சொல்வது ஒருபுறம் நியாயமாகப் பட்டாலும், இது மற்ற பெண்களுக்கு மனரீதியான, 'காம்ப்ளெக்ஸை' ஏற்படுத்தும் என்பதே உண்மை. வளப்பமான பெண்களுக்கு பிரச்னை இல்லை. என்னைப் போன்ற ஒல்லிப்பாச்சான்களும், சுமாரான தோற்றம், அழகு மற்றும் நிறம் கொண்டவர்களும், இது போன்ற அரைகுறை ஆடையுடன் அழகிகளை பார்க்கும் போது, தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறோம்.

லேடிஸ் ஹாஸ்டல் தோழியரே... பெண்களின் உடல்வாகு, ஆளுக்கு ஆள் மாறுபடும். இதுபோன்ற விஷயங்களில், தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கும் என் போன்ற பெண்களின், 'காம்ப்ளெக்சை' அதிகரிக்கும் வகையில், உங்கள் உடல் தோற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டத்தான் வேண்டுமா? யோசியுங்கள் ப்ளீஸ்!

எஸ்.ஜானகி, சென்னை.

இது ஆம்பளைங்க சமாச்சாரம்!



மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை பற்றி, வாய் ஓயாமல் பேசுகிறோம். ஆனால், மருமகன்கள் கொடுமை மட்டும், வெளியே தெரிவதில்லை. ஆம்பளைங்க சமாச்சாரம் என்பதாலா? 'வீராதி வீரனும் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கோழைதான்!' ஆனால், மாமனார் வீட்டுக்கு சென்று விட்டால், கோழைக்கும் வீரம் வந்துவிடும் போலிருக்கு! தன்னை ஒரு வி.ஐ.பி.,யாக நினைத்து, மாமனார் வீட்டில் உள்ள அனைவரும், தன்னை ஓடி ஓடி உபசரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சிறு தவறு நடந்து விட்டாலும், அதை பெரிதுபடுத்தி மனைவியிடம் கொட்டித் தீர்ப்பது, ஆகிய கொடுமைகளை செய்கின்றனர் மருமகன்கள்!

கணவனிடம், பொறந்த வீட்டை விட்டு கொடுக்காமல் பேசினாலும், பெற்றோரிடம் ஒப்பாரி வைப்பாள் மனைவி. அதுவும் இரண்டு, மூன்று மருமகன்கள் இருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம். 'என் புருசன சரியாவே கவனிக்கல. இரண்டாவது மருமகன்னா உங்களுக்கு உசத்தி! மரியாதை இல்லாத வீட்டிற்கு இனி வரவே மாட்டேன்னு என் புருசன் சொல்லிட்டார்...' என்று மூக்கை உறிஞ்சி மகள் அழுவதும், அதைக் கேட்ட பெற்றோர், மனம் உடைந்து போவதும், அனேக குடும்பங்களில் நடக்கிற சமாச்சாரம்.

கேட்டுப் பெறுவதா மரியாதை? மனைவி மட்டும், உங்கள் பெற்றோரை, தாய், தந்தையாக நினைக்க வேண்டும். அதுபோல் நீங்களும் நினைத்தால் என்ன? மாப்பிள்ளை முறுக்குடன் அலட்டாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாக, மனைவி வீட்டாரையும் நினைத்துப் பழகுங்கள். பிறகு பாருங்கள்; உண்மையான மதிப்பும், மரியாதையும் மாமனார், மாமியாரிடமிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை!

ஜி.சபிதா, நெல்லை.

நடத்துனர்கள் கவனத்திற்கு...



கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான நான், சமீபத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பொருட்டு, அரசு பேருந்தில் பயணித்தேன். மாற்றுத்திறனாளர் அடையாள அட்டையை நகலெடுத்து, நடத்துனரிடம் கொடுத்தால், நாலில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அரசின் நடைமுறையிலுள்ள அறிவிப்பின் அடிப்படையில், அவ்வாறு, நகலை நடத்துனர் வசம் கொடுத்தேன். அதைப் பெற்றுக்கொண்ட அவர், மிகவும் கீழ்த்தரமாக, 'இதையெல்லாம் எடுத்துகிட்டு வந்து, எங்க உசிரை வாங்கறீங்களே... இதை பத்திரமா கொண்டு போய் டெப்போவுல சேர்க்கலன்னா, என் சம்பளத்துலதான் பிடிப்பாங்க...' என்கிற ரீதியில், ஏக வசனம் பேசி, சக பயணியர் முன் கூனிக் குறுகச் செய்து விட்டார்.

மாற்றுத்திறனாளராய் பிறந்துவிட்ட காரணத்தால் தான், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறோமேயொழிய, அரசின் சலுகைகளை மனதிற்கொண்டு, யாரும் உடல் உறுப்புகளை இழந்து, மாற்றுத்திறனாளராவதில்லை. இதை, அரசுப் பேருந்து நடத்துனர்கள் உணர்ந்து கொள்வரா!

கா.இளையராஜா, கடலூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us