PUBLISHED ON : பிப் 24, 2013

மண் எப்படியோ, அதே போல மக்களின் மனதும் மென்மையானது, மேன்மையானது. காட்டை திருத்தி நாடாக்கியவர்கள் நிறைந்த மண், தென்மாவட்டங்களிலேயே தொழில்வளம் நிறைந்த வளமையான பூமி. தியாகிகளும், நாட்டிற்கு உழைத்த நல்லவர்களும், கொடைத்தன்மை மிக்கவர்களும் நிறைந்த புண்ணிய பூமியும் கூட.
மதுரையில் இருந்து, குற்றாலம் போகிறவர்களுக்கு, சீசனுக்கான தூரலைத் தந்து, ரம்மியமாக வரவேற்பது ராஜபாளையமே.
இப்படிப்பட்ட ராஜபாளையத்தில், குடிநீர் பிரச்னை இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ராஜபாளையத்தில் இருந்து, ஐயனார் கோவில் போனால், அங்குள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரை நம்பித்தான், ராஜபாளையம் உள்ளது. இந்த அணைக்கட்டோ, ஐயனார் கோவிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் பெய்யும் மழையை நம்பியே உள்ளது.
ஆனால், மாறிவிட்ட இயற்கை சூழ்நிலையில், மழையை தற்போது முழுமையாக நம்ப முடியவில்லை. இதன் காரணமாக, வறண்டுவிட்ட அணைக்கட்டில் இருந்து, தண்ணீர் பெறமுடியாத சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டுவிடும். அப்போது மக்கள் குடிநீரின்றி ரொம்பவே சிரமப்படுவர்.
தண்ணீருக்காக இவர்கள் விடும் கண்ணீரை துடைப்பதற்காக, அணைக் கட்டை ஒட்டியுள்ள பகுதியில் பண்ணை வைத்துள்ளவர் கள், தாங்களே முன்வந்து, தங்களது கிணற்று நீரை வழங்க முன்வந்தனர். அவர்களில் முதன்மையானவர்தான் ராமசுப்பிரமணிய ராஜா.
ராஜபாளையத்தில் இரண்டாவது தலைமுறையாக மின்சாதன பொருள் விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் ராமசுப்பிரமணிய ராஜா, தன் தந்தை அழகர்ராஜாவின் சந்தோஷத்திற்காக, ஐயனார் கோவில் போகும் வழியில், பெரிய தோப்பு ஒன்றை வாங்கிப்போட்டார்.
அந்த தோப்பில், மோசமான நிலையில் இருந்த கிணற்றை, பெரும் செலவு செய்து சீரமைத்தார். கிணற்றுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம், சீரமைப்பு என்று பலரும் கேட்டபோது கிடைக்காத பதில், சீரமைத்து முடிந்த பின் கிடைத்தது. ஆம், சுற்று பக்கம் எதிலும் இல்லாத அளவிற்கு தண்ணீர் நன்றாக ஊற்றெடுத்தது.
கிணற்றில் நீர் நிரம்பி இருந்ததால், தோப்பில் வாழை, தென்னை, மா என, நிறைய மரங்களை வைத்து மகசூல் பார்த்தார். இந்த நேரத்தில்தான், ராஜபாளையத்தை குடிநீர் பிரச்னை வாட்டி எடுத்தது. கொஞ்சமும் யோசிக்காமல், தன் கிணற்று நீரை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று இலவசமாக வழங்கினார். ஒரு லாரியில், 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் என்ற கணக்கில், ஒரு நாளைக்கு முப்பது லாரி தண்ணீர் வரை எடுத்துச் செல்கின்றனர். இப்படி, ஒரு நாள், இரண்டு நாள் அல்ல அறுபது நாள் வரை எடுத்துச் சென்றனர். இதனால், ராஜபாளையத்தில் குடிநீர் பிரச்னை ஓரளவு குறைந்தது.
இது நடந்து, பத்து வருடம் இருக்கும். அதன் பிறகு கடந்த பத்து வருடங்களாக, எப்போதெல்லாம் ராஜபாளையத்திற்கு குடிநீர் பிரச்னை என்றாலும், உடனே இவரது கிணற்று நீருக்கு லாரிகள் படையெடுத்துவிடும். ஒரு வருடம் மோசமான குடிநீர் பிரச்னை; கொஞ்சம் கூடுதலாகவே தண்ணீர் எடுத்துச் சென்றனர். இப்படியே தண்ணீர் எடுத்தால், தோட்டத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இல்லாமல் வாடிவிடும். ஆகவே, எடுத்த வரை போதும் என்று சொல்லுங்கள் என்று, பண்ணையாட்கள் ராமசுப்பிரமணிய ராஜாவிடம் கூறியபோது, 'குடிநீர் இல்லாமல், மனித உயிர்களே வாடும் போது, பயிர்களா முக்கியம்...' என்று சொல்லி, தடையின்றி தண்ணீர் கொடுத்தார்.
இத்தனை வருடங்களாக, இவர் தண்ணீர் கொடுத்து வந்தாலும், இவர்தான் தண்ணீர் கொடுக்கிறார் என்று அங்குள்ள பலருக்கும் தெரியாது. காரணம், கொடுக்கும் இவர், 'இதை எல்லாமா சொல்லிக்கொண்டு இருப்பது...' என்ற தன்னடக்கம்தான். தண்ணீர் கொடுப்பதோடு நின்றுவிடாமல், தண்ணீரை எடுத்துச் சென்று சுத்திகரிப்பு செய்யும் நிலையத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு, அங்கு இருக்கும் பணியாளர்களையும் அவ்வப்போது உற்சாகப்படுத்துவார்.
'நான் செய்யறது சாதாரண காரியமுங்க. எனக்கு எந்த நன்றியும் வேண்டியதில்லீங்க... நன்றியெல்லாம் இறைவனுக்கும், இயற்கைக்கும் செலுத்துனா போதுமுங்க...' என்று அடக்கத்துடனும், வணக்கத்துடனும் சொல்லி முடிக்கிறார்.
பின்குறிப்பு: 'தினமலர் - வாரமலர் வாசகர்கள் குற்றால டூர் போகும்போதும், திரும்பும்போதும், வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்...' என்று கேட்டு, வாசகர்களை கவுரவப்படுத்தும் பணியை பெருமையுடன் செய்துவரும் நல்ல மனிதரும் இவரே!
***
எல். முருகராஜ்
