sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மண்ணின் மகிமை!

/

மண்ணின் மகிமை!

மண்ணின் மகிமை!

மண்ணின் மகிமை!


PUBLISHED ON : ஜூலை 07, 2013

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகரில், ஆட்டோவில் பயணித்த சுந்தரமும், அவரது மகன் குமாரும், ஒன்றும் பேசிக் கொள்ளாமல் மவுனமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையை நோக்கி, தன் பார்வையை செலுத்தினார் சுந்தரம். விட்டில் பூச்சிகளைப் போல், விளக்குகள் கண் சிமிட்டும் ஒளியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவர்களின் மவுனத்தை கலைப்பது போல, ''சார்... கோயம்பேடு வந்திருச்சு, எங்கே நிறுத்தணும்...'' என்று ஆட்டோ டிரைவர் கேட்டார். அதற்கும் சுந்தரம் தான் பதில் சொன்னார். ''இடது பக்கம் அப்படி ஓரமா நிறுத்துப்பா,'' என்றார்.

தன் தந்தையின் சூட்கேஸை எடுத்துக் கொண்டு, மதுரை செல்லும் பேருந்து நிற்கும் நடைமேடையை நோக்கி நடந்தான் குமார். அவனை பின் தொடர்ந்து வந்த சுந்தரம், ''உனக்கு ஏம்ப்பா சிரமம், நானே பஸ் பிடித்து போய் விடு கிறேன்... நீ காலாகாலத்திலே வீட்டுக்குப் போப்பா... மருமகளும், பேரனும், பேத்தியும் தனியாயிருப்பாங்க,'' என்றார்.

அவரது கையைப் பற்றி, தன் கண்களில் ஒற்றிக் கொண்டு,'' தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கப்பா... வீட்டின் நிர்வாகம் அனைத்தையும் உங்க மருமகளே கவனிச்சுக்கிறதாலே, என்னாலே எதுவும் செய்ய முடியாதுப்பா. வள்ளியின் திருமணத்தைப் பத்தி நினைச்சா தான், எனக்கு மிகவும் சங்கடமாயிருக்கு. ஏம்ப்பா... மாப்பிள்ளை வீட்டாரிடம் பத்து பவுன் நகையை குறைச்சுப் பேசி, இருபது பவுன் நகை தான், எங்களால போட முடியும்ன்னு பேச வேண்டியது தானே, இல்லாட்டி நம்ம நிலத்தை வித்தாவது, தங்கச்சியின் கல்யாணத்தை நல்லபடியா செய்யலாம்ப்பா. அதை விட்டுட்டு, பணத்தை புரட்ட இப்படி அலைய வேண்டுமா என்ன,'' என்றான்.

''நீ சொன்னதப் போல, நிலத்தை விக்க நானும் முயற்சி செஞ்சேன்பா... நம்ம நிலமையை புரிஞ்சுக்கிட்டு, ரொம்ப அடிமாட்டு விலைக்கு கேக்குறாங்கப்பா, அதான் உங்ககிட்டே பண உதவி கேட்டு வந்தேன். சரி விடுப்பா... நீ கவலைப் படாதே. ஆண்டவன் இருக்கான், அவன் பாத்துக்கிடுவான்,'' என்று மகனை சமாதானம் செய்து விட்டு, பேருந்தினுள் ஏறி, தன் இருக்கையில் அமர்ந்தார்.

பேருந்து புறப்பட்டதும், கையை அசைத்து, விடை பெற்றான் குமார். பேருந்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக சுந்தரத்தின் எண்ண ஓட்டங்கள், பின்நோக்கி நகர்ந்தன.

முன்பு எப்படி இருந்தவன், இப்போ இப்படி பேசுகிறானே... எவ்வளவு மாறிட்டான். எவ்வளவு தெளிவா பேசுறான். தன் அம்மாவின் சாவுக்கு வந்தவன் கூட, எல்லாரிடமும் ஒட்டியும், ஒட்டாமலும் இருந்துவிட்டு, காரியம் முடிந்ததும் ஊருக்கு போனவன், அதன் பின் ஊர் பக்கம் தலையை காட்டல. கூடப் பிறந்த தங்கையின் கல்யாணத்துக்கு கூட உதவி செய்ய முடியாதுன்னு நாசூக்கா சொல்லிட்டான்.

ஆனா, வள்ளி தான் பாவம்... தன் படிப்பை பாதியிலே நிறுத்திக்கிட்டு, அண்ணனை நல்லா படிக்க வையுங்க,' என்று, 'அண்ணனின் உயர் படிப்புக்காக, தன் படிப்பை தியாகம் செஞ்சா. இப்போ, அவளின் திருமணம் நடக்குமா, நடக்காதா என்று சந்தேகமாக உள்ள நிலையில், என்ன செய்வது என்று புரியாமல், சுந்தரம் கண்கலங்கினார். பேருந்து, உணவுக்காக, விழுப்புரத்தில் நின்றது. மனதை சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு, பேருந்தில் ஏறினார். பேருந்து மீண்டும், தன் பயணத்தை தொடர்ந்தது. அப்போது, முதல் நாள் இரவு தன் மகனும், மருமகளும் பேசிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தார்.

'வாயை கட்டி, வயித்தைக் கட்டி இப்போதான் நாம தாம்பரத்திலே, ஒரு வீடு வாங்கியிருக்கோம், அது உங்க அப்பாவுக்கு பொறுக்கலையா? நீங்க ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, உங்க அப்பாவை நைசா ஊருக்கு அனுப்பிடுங்க, நாம வீடு வாங்கிய விஷயத்தைப் பத்தி மூச்சு விடாதீங்க. நமக்கும் புள்ளே குட்டிங்க இருக்கு. நாளைக்கு அவங்களுக்கு ஏதாவதுன்னா பணத்துக்காக , இப்படி அலைய முடியாது...' என்று மருமகள் பாடம் நடத்தியதை கேட்டு, அப்படியே மனம் நொறுங்கிப் போனார் சுந்தரம்.

அதிகாலையில், பேருந்து மதுரை வந்தடைந்ததும் இறங்கி, தன் வீட்டை நோக்கி நடந்தார் சுந்தரம். தன் தந்தை வருவதைப் பார்த்த வள்ளி, ஆனந்தமாய் துள்ளிக் குதித்து ஓடிவந்து, தந்தையை வரவேற்றாள்.

அப்போதுதான் சோகமாக இருந்த தந்தையை கண்டு, நடந்தவைகளை ஒருவாறு புரிந்து கொண்டாள். தந்தையிடம் அதைப் பற்றிய விவரத்தை கேட்கவில்லை.

தன் மகள் வள்ளியை அழைத்த சுந்தரம், மேலூரிலுள்ள நிலத்தின் பத்திரத்தை எடுத்து வருமாறு கூறி, அதை வாங்கிக் கொண்டு, மேலூர் புறப்பட்டார். மேலூரிலுள்ள பண்ணையார் ராஜலிங்கத்திடம், அப்பத்திரத்தை கொடுத்து, ''என் நிலத்தை வாங்கிக் கொண்டு, அதற்குரிய பணத்தை கொடுத்தால், என் மகளின் திருமணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்,'' என்றார்.

அதைக் கேட்ட பண்ணையார், ''நீங்கள் கேட்கும் தொகைக்கு, உங்கள் நிலம் விலை போகாது. எனவே, நீங்கள் கேட்கும் தொகைக்கு வேறு யாரிடமாவது முயற்சி செய்யுங்கள்,'' என்று முகத்தில் அடித்தது போல் கூறவே, மனம் கலங்கிய சுந்தரம், தன் நிலத்திற்கு வந்து மரத்தடி நிழலில் துண்டை விரித்து படுத்துக் கொண்டு, தன் நிலைமையை நினைத்து கண் கலங்கினார்.

'பெத்த பிள்ளையும் கையை விரிச்சுட்டான், இந்த நிலத் தாயும், என்ன கைவிட்டுட்டா... நான் என்ன செய்ய முடியும்...' என்று புலம்பியவர், ஆவேசமாக எழுந்து, 'உன்னால எனக்கு என்ன பிரயோஜனம்' என்று, பித்துப் பிடித்தவர் போல, தன் காலை மேலே உயர்த்தி, வேகமாக நிலத்தில் ஓங்கி உதைத்தார். நிலத்தின் தூசி உயரே எழுந்தது.

''யாரப்பா அது... நிலத்தை காலால எட்டி மிதிப்பது,'' என்று அதட்டல் போட்டபடி சுந்தரத்தை நெருங்கி வந்தார், அவ்வூர் பெரியவர் மாணிக்கம். அருகில் வந்தவர், ''அட... நம்ம சுந்தரமா!''

''ஏம்ப்பா... நம்மையெல்லாம் சுமந்து, நம்ம வயித்துக்கு சோறு போடுற, இந்த பூமித் தாயை, பித்து பிடித்தவன் போல கோபப்பட்டு காலால எட்டி உதைக்கலாமா... இங்கே பாரு சுந்தரம், நம்ம வயித்திலே பிறந்த பிள்ளைங்க கூட நமக்கு வஞ்சகம் செய்யலாம். ஆனா, இந்த நிலத்தாய் நமக்கு எப்பவுமே வஞ்சகம் செய்ய மாட்டாப்பா. ஆமா... நீ இவ்வளவு கோபப்பட, என்ன காரணம்,'' என்று கேட்டார்.

நடந்தவைகளை எல்லாம் அவரிடம் சொல்லி, கண் கலங்கினார் சுந்தரம். ''கவலைப்படாதே சுந்தரம், உன்னை அந்த ஆண்டவனும், இந்த பூமாதேவியும், கைவிட மாட்டா நம்புப்பா,'' என்று சமாதானம் செய்து, ''நீ செஞ்ச தவறுக்கு, இந்த பூமாதேவிகிட்டே மன்னிப்பு கேட்டுக்க,'' என்று சொன்னதும், தன் தவறை உணர்ந்த சுந்தரம், தன் நிலத்தில் விழுந்து வணங்கி மண்ணை அள்ளி நெற்றியில் பூசி, நிலத்தை முத்தமிட்டார்.

வீட்டுக்கு வந்த சுந்தரம், தன் மகளை அருகில் அழைத்து, ''ஏம்மா... என் மீது உனக்கு ஏதும் கோபமில்லையே,'' என்றார்.

''ஏம்ப்பா... இப்படி கேக்கறீங்க...'' என்ற மகளிடம்... ''நான் தப்புப் செய்துட்டேன்ம்மா... தப்பு செய்துட்டேன், உன் அண்ணனை படிக்க வெச்ச நான், உன்னையும் படிக்க வெச்சிருக்கணும், உன் அம்மா, அப்பவே சொன்னா நான் தான் கேக்கலே,'' என்று புலம்பினார்.

அப்போது குறுக்கிட்ட வள்ளி, ''ஏம்ப்பா... என் கல்யாணத்துக்கு, இப்போ என்னப்பா அவசரம், நீங்க பணத்துக்காக சிரமப்படுறத பாத்து, என்னால தாங்க முடியலப்பா,'' என்று சொன்ன மகளை கோபமாக பார்த்து, ''என்ன வார்த்தை சொல்லிட்டே வள்ளி... நான் உயிரோடுயிருக்கும்போதே, உன் அண்ணன் உன் கல்யாணத்துக்காக எந்த முயற்சியும் எடுக்கலே, நானும் போயிட்டா, உன் நிலமை என்னாகும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாரு. மூத்த மகன் எனக்கு ஒத்தாசையாயிருப்பான்னு நெனச்சேன், ஆனா, அவனால எனக்கு எந்த ஒத்தாசையுமில்லே. ஊம்... அவனும் பிள்ளைகளை பெத்து வச்சுருக்கான்லே,'' என்று சொல்லி, வார்த்தையை முடிப்பதற்குள், தன் தந்தையின் வாயை, தன் கையால் பொத்திய வள்ளி... ''அப்பா, நீங்க வயிறெரிஞ்சு அண்ணனை ஏதும் சபிச்சிறாங்தீங்கப்பா. பாவம்ப்பா அண்ணன்... அவருக்கு என்ன சூழ்நிலையோ... உங்க எல்லாருக்கும் பாரமா வந்து நான் பொறந்திட்டேன். என்னால தானே இப்ப பிரச்னை,'' என்று கண் கலங்கிய மகளை, தன் மார்போடு அணைத்துக் கொண்ட சுந்தரம், ''உன் நல்ல மனசுக்கு நீ நல்லாயிருப்பம்மா... எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ எதுக்கும் கவலைப்படாதேம்மா,'' என்று மகளுக்கு ஆறுதல் கூறினார்.

மறுநாள் காலையில், அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்த சுந்தரம், வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்தார்.

அந்த காரிலிருந்து ஊர் பெரியவர் மேலூர் மாணிக்கம் மற்றும் மூன்று நபர்கள், சுந்தரத்திற்கு வணக்கம் சொல்லியபடியே வந்தனர். அவர்களை வரவேற்று, இருக்கையில் அமரச் சொன்னார் சுந்தரம். அப்போது, ''நான் நேற்றே சொன்னேன்ல... இந்த பூமாதேவி தன்னை நம்பினவங்களை என்றுமே கைவிட மாட்டான்னு...நான் நேரா விஷயத்துக்கு வர்றேன் சுந்தரம்.

''இவங்க சென்னையிலிருக்கிற, 'டாமின்' என்கிற தமிழக அரசின் கனிமவள நிறுவன அதிகாரிங்க. இவங்க, உன் நிலத்தை சோதனை செஞ்சு பார்த்தப்ப, உன் நிலத்திலே விலை உயர்ந்த கிரானைட் கற்கள் இருப்பதாகவும், அதை அவர்கள் ஒப்பந்த முறையில வெட்டி எடுக்க விரும்புவதாகவும், 'இது யாருடைய நிலம்' என்று ஊருலே விசாரிச்சுக்கிட்டிருந்தப்போ 'இது, என் நண்பனோட நிலம் தான்... வாங்க, அவனிடமே நேரில் சென்று பேசலாம்'ன்னு' கூட்டி வந்தேன்,'' என்றார்.

அதைக் கேட்ட சுந்தரம், ''என் நிலம் விளை நிலமாயில்லாம, பாறை விளைஞ்ச நிலமாயிருச்சேன்னு நான் ரொம்ப கவலைப்பட்டு, என் மகளின் திருமணத்துக்காக அதை நான் விக்க முடிவு செஞ்சேன். இப்போ நீங்க சொன்னதை கேட்டு, மிகவும் சந்தோஷமாயிருக்கு, உங்க முடிவுக்கு நான் முழு மனதா சம்மதிக்கிறேன்,'' என்றார்.

நிலத்தோட பத்திரத்தை கேட்டு வாங்கிய அதிகாரிகள், அதை பரிசீலனை செய்து, ''எல்லாம் சரியாயிருக்கு, நீங்க அடுத்த வாரம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு வந்து, 'அக்ரிமென்ட்'டில் கையெழுத்து போட்டு ரூபாய் பத்து லட்த்துக்கான காசோலையை பெற்றுக் கொள்ளலாம்,'' என்று அதிகாரிகள் சொன்ன தகவலை கேட்டு, சுந்தரத்தின் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது.

வள்ளியின் திருமணம் சிறப்பாக நடைபெறுவது போன்ற காட்சி, அவர் கண்முன் ஒரு நிமிடம் நிழலாய் வந்து போனது. தனக்கு நம்பிக்கையூட்டிய மாணிக்கத்தை, நன்றியுடன் பார்த்த சுந்தரம், ''பெத்த பிள்ளைங்க வஞ்சகம் செய்தாலும் செய்யலாம், ஆனா... இந்த நிலத்தாய் என்றுமே வஞ்சகம் செய்ய மாட்டா என்று நீங்க சொன்ன வார்த்தை, உண்மையாக போய்விட்டது,'' என்றார்.

வந்தவர்கள் புறப்பட்டுச் சென்றதும், மகள் வள்ளியை அழைத்த சுந்தரம், ''மகளே வள்ளி... நம்ம கஷ்டமெல்லாம், ஒரு நொடியிலே பறந்து போயிருச்சு. நாம வணங்கும் தெய்வமும், இந்த பூமாதேவியும், நம்மள கைவிடலே,'' என்றவரிடம், ''நானும், எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேம்பா...'' என்ற மகளை அன்போடு தழுவி, ''வள்ளி நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரியம்மா, யார்கிட்டேயும் கையை ஏந்த விடாம, நம்ம கவுரவத்தை காப்பாற்றிய நம்ம நிலத்தோட மகிமையே மகிமைதாம்மா,'' என்று அகம் மகிழ்ந்தார் சுந்தரம்.

***

என். அகமது






      Dinamalar
      Follow us