PUBLISHED ON : ஏப் 10, 2022

மனதை அமைதியாக்கும் தர்பூசணி!
தர்பூசணியில், 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. அதனால், கோடையில் ஏற்படுகிற நீரிழப்பை சரிக்கட்ட, முதல் இடத்தில் இருக்கிற பழம் இது. வெயில் காலத்தில் வருகிற எரிச்சல் மனநிலையை கூலாக்கும். மூளையை கூர்மையாக்கும். இதில், ஆன்டி ஆக்சிடென்ட், வைட்டமின் ஏ, சி இருப்பதால் அடிக்கிற வெயிலிலும் ரத்த அழுத்தம் எகிறாமல் பார்த்துக் கொள்ளும். இதயத்தையும் காக்கும்.
தக்காளி சாலட் ஏன் நல்லது?
தக்காளியில், 95 சதவீத தண்ணீர் இருக்கிறது. 'லைகோபின்' என்ற பைட்டோ கெமிக்கல், ஆன்டி ஆக்சிடென்ட், இரும்பு, பொட்டாஷியம், மெக்னீஷியம், வைட்டமின் என, அனைத்தும் நிறைந்து உள்ளது. காலையில் ஒரு கப் தக்காளி சாலட் சாப்பிட்டால், அந்த நாள் முழுக்க குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். தக்காளி, அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து நம்மை காப்பாற்றுவதோடு, வெயிலால் தோல் கறுக்காமலும் பாதுகாக்கும்.
* நன்கு கடைந்தெடுத்த மோரில், அரை மூடி எலுமிச்சை பழச்சாறும், வெங்காயச் சாறும் கலந்து, பெருங்காயம் சேர்த்துக் குடித்தால், கோடை வெப்பத்தில் உடல் சோர்ந்து போகாது; உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
* நன்னாரி வேர்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, பானை நீரில் போட்டு, குறைந்தது ஆறு மணி நேரம் நன்கு ஊறிய பின் பருகினால், வெப்பமே தெரியாது; உடல், 'குளுகுளு'வென இருக்கும்.
* இரவில், வெந்தயம், பச்சைப் பயறு இரண்டையும் நீரில் ஊற வைத்து, காலையில் அரைத்து, தலையில் தேய்த்து அரைமணி நேரத்திற்கு பின் குளித்து வர, சூடு தணிந்து, உடல் குளிர்ச்சியாகும்.
* வெள்ளரிக்காய்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு, மோர் ஊற்றி அதில் கொத்துமல்லி, இஞ்சி, வெட்டி வேர் போட்டு, உச்சி நேர வெயிலில் ஒரு டம்ளர் பருகினால், 'கூல் கூல்' தான்.
* இளநீரில் இரண்டு நுங்குகளை நறுக்கிப் போட்டு, அதில் வெல்லம் சேர்த்து மிக்சியில் அடித்து பருகினால், கோடையில், 'ஜில்'லென இருக்கும்.
* தர்பூசணி ஜூசில், கிர்ணி பழ ஜூசையும் கலந்து, பச்சை திராட்சை, செர்ரி பழம் சேர்த்து, 'பிரிஜில்' ஒரு மணி நேரம் வைத்திருந்து பருகினால், குளிர்ச்சியோ குளிர்ச்சி தான்.
