PUBLISHED ON : டிச 06, 2015

ஒருக்காலும் அடியார் மனம் சலிக்க, ஆண்டவன் விட மாட்டார் என்பதற்கு, திருவிசை நல்லூர், வேங்கடேச அய்யாவாள் சான்று!
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை, அர்த்த ஜாம பூஜையின் போது தரிசிப்பதை, வழக்கமாக கொண்டிருந்தார், வேங்கடேச அய்யாவாள். காவிரியின் மறுகரையிலிருந்து ஆற்றை கடந்து வந்து, மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து, திரும்புவார்.
ஒருநாள், வழக்கமாக தரிசனத்திற்காக புறப்பட்ட போது, மழையின் காரணமாக, காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால், 'ஈஸ்வரா... இது என்ன சோதனை... நான் எப்படி உன்னை வந்து பார்ப்பேன்...' என்று மனம் கலங்கினார் வேங்கடேச அய்யாவாள்.
அவரின் சிந்தனை எல்லாம் சிவ சிந்தனையிலேயே நிலைத்திருக்க, அப்படியே நின்றிருந்தார். அப்போது, அங்கே வந்த திருவிடை மருதூர் கோவில் அர்ச்சகர், 'சுவாமி... அர்த்த ஜாம பூஜையின் போது, உங்களை காணவில்லையே எனத் தேடினேன். வெள்ளத்தின் காரணமாக நீங்கள் வரவில்லை போலிருக்கு! இந்தாருங்கள் சுவாமி பிரசாதம்...' என்று கூறி, பிரசாதத்தை கொடுத்தார்.
'ஈஸ்வரா... உன் கருணையை என்னவென்று சொல்வேன்?' என மனம் உருகி, பணிவோடு பிரசாதத்தை பெற்று, பிரதி உபகாரமாக, ஒரு வெள்ளி காசை, அர்ச்சகருக்கு தட்சணையாக அளித்தார், வேங்கடேச அய்யாவாள்.
மறுநாள் காலை, சன்னிதியை திறந்து உள்ளே நுழைந்த அர்ச்சகர், சுவாமி விளக்கை தூண்டினார். வெளிச்சம் பெரிதாகப் பரவ, அங்கே, சிவலிங்கத்தின் மேல், ஒரு வெள்ளிக் காசு இருந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். இது எப்படி வந்தது என்று அவருக்கு புரியவில்லை.
அன்று மாலை, காவிரியில் வெள்ளம் வடிந்து விட்டதால், அர்த்த ஜாம தரிசனத்திற்கு வந்த வேங்கடேச அய்யாவாள், அர்ச்சகருக்கு நன்றி கூறினார். 'எனக்கு எதற்கு நன்றி கூறுகிறீர்கள்...' என்றார் அர்ச்சகர்.
'என்ன சுவாமி இப்படி சொல்றீங்க... ஆற்றில் வெள்ளம் வந்ததால், கோவிலுக்கு வர முடியாமல், நான் மறுகரையில் நின்றிருந்த போது, நீங்க தானே எனக்கு, பிரசாதம் தந்தீங்க; நான் கூட உங்களுக்கு தட்சணை தந்தேனே...' என்று கூறி விவரித்தார்.
அர்ச்சகருக்கு ஏதோ புரிந்து, கருவறைக்குள் ஓடி, கையில் வெள்ளிக் காசுடன் திரும்பியவர், 'ஆறு நிறைய வெள்ளம் ஓடும் போது, நான் எப்படி ஆற்றை கடந்து வந்திருக்க முடியும்... மழையின் காரணமாக, நேற்று நான் எங்கும் போகவில்லை. இன்று காலை சன்னிதியை திறந்தால், சுவாமி மீது, இந்த வெள்ளிக் காசு இருந்தது; இப்போது, நீங்கள் கூறிய பின்தான், உண்மை புரிகிறது...' என்றார்.
உள்ளம் நெகிழ்ந்த வேங்கடேச அய்யாவாள், 'ஈஸ்வரா... அடியேன் மனம் வருத்தம் அடையக் கூடாதென்று, தரிசனம் தந்ததோடு, பிரசாதமும் தந்த என் தெய்வமே...' என்று கண்ணீர் மல்க, இறைவனை துதித்தார்.
கங்கையை, தன் வீட்டு கிணற்றிலேயே வரவழைத்த இந்த மகானைப் போன்ற தூய பக்தி கொண்டோருக்கு, தெய்வம் ஒரு போதும் அருள்
புரியாதிருக்காது!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
கண்டேன் கமழ்தரு கொன்றையினான் அடி
கண்டேன் கரியுரியான் தன் கழல் இணை
கண்டேன் கமல மலர் உறைவான் அடி
கண்டேன் குழல் அது என் அன்பிலுள் யானே!
விளக்கம்: நறுமணம் கமழும், ஓங்கார வடிவமான கொன்றை மலரை, திருமுடிமேல் சூடியிருக்கும் சிவபெருமானின் திருவடியைக் கண்டேன். ஆணவ வடிவமான யானையை சங்காரம் செய்து, அதன் தோலை போர்த்தியுள்ள சிவபெருமானின் திருவடியை கண்டேன். மனம் எனும் தாமரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருவடியை, என் அன்பின் மூலமாக, கண்டேன்.
கருத்து: அன்பின் வலிமையும், ஆணவ நீக்கமும், ஓங்கார வடிவமும் சிவபெருமானின் திருவடியில் உள்ளதை சொல்லும் பாடல் இது!

