sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உறவு நிலைகள் உயர, உன்னத வழி!

/

உறவு நிலைகள் உயர, உன்னத வழி!

உறவு நிலைகள் உயர, உன்னத வழி!

உறவு நிலைகள் உயர, உன்னத வழி!


PUBLISHED ON : டிச 06, 2015

Google News

PUBLISHED ON : டிச 06, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி நாட்களில், எங்களுக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர், மிகக் கண்டிப்பானவர். தவறு செய்தால் நையப் புடைத்து விடுவார். சரியான அடிதடி மனிதர். அவரைக் கண்டாலே, என் வகுப்பு நண்பர்களுக்கெல்லாம் அலறல் தான்.

அக்காலத்தில், ஆசிரியர்கள் பின்னி எடுத்தால், நிர்வாகம் ஏன் என்று கேட்காது; பெற்றோரும், 'என் பிள்ளையை எப்படி நீங்க அடிக்கப் போச்சு...' என்று கேள்வி கேட்க மாட்டார்கள். மனதிற்கோ, உடலுக்கோ ஒத்தடம் தந்து பேச மாட்டார்கள். 'நல்லா வேணும் உனக்கு...' என்று (மனக்) காயத்தின் மீது, உப்பு பூசி, எரிச்சலை இன்னும் அதிகப்படுத்துவர்.

ஆசிரியரை நேரில் காண நேர்ந்தால், 'இன்னும் நல்லா நாலு போடு போடுங்க; எங்களுக்கெல்லாம் அடங்க மாட்டேங்குறான்...' என்று ஊக்க மொழி வேறு வழங்குவர், அக்காலத்துப் பெற்றோர். ஊம் - இந்த ஏக்கப் பெருமூச்சின் பொருள், உங்களுக்கா புரியாது!

நாங்கள் அனைவரும் ஒருமுறை, இதே ஆசிரியரின் தலைமையில், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா சென்ற போது, அவரா இவர் என்று எண்ணுமளவிற்கு முற்றிலும் வித்தியாசமானவராக நடந்து கொண்டார். இந்தக் கொடூர (?) நம்பியாருக்குள், இப்படி ஒரு பூர்ணம் விஸ்வநாதனா (அட... இவங்கள் எல்லாம் எங்க காலத்து ஆளுங்க!) என வியக்கும்படி, தண்ணீராய் பழகினார்; தமாஷாகப் பேசினார்; நடனமாடினார்; நடித்துக் காட்டினார். தோளில் மட்டும் தான், கை போடவில்லை. தோளை அணைத்து, எங்களுடன் புகைப்படத்துக்கெல்லாம் போஸ் கொடுத்த போது, எங்களது சுற்றுலாவின் மையப் பேச்சே, இவர் தான் என்று ஆகிப் போனது.

எனக்கு தெரிந்த மிகப் பெரிய நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூட இப்படித்தான். அவரது அலுவலக இருக்கையில் தான், 'ஆய் ஊய் அறுபத்து நான்கெல்லாம்!' இருக்கைக்கு வெளியே, நம்ப முடியாத மாற்றங்களைக் காட்டுவார். கேட்டால், 'அந்த இருக்கையில், ஒரு கழுதையை அமர வைத்தால், அதற்குக் கூட அதிகாரம் செய்யத் தோன்றும்...' என்பார்.

இருக்கையில் இறுக்கம் காட்டுகிறவர்கள் கூட, வெளியே வந்தால், இதயம் தளர்ந்து நடந்து கொள்கின்றனர்.

ஒரு குடும்பத் தலைவர், வீடு முழுவதும், தன் அதிகார எல்லைக்கு உட்பட்டதாக நினைக்கிறார். வெளியே அவரைக் கொண்டு வாருங்கள்... அவர், ஒரு நல்ல தந்தை, நல்ல கணவர் என்பது புரிய வரும். வீட்டின் பரபரப்புச் சூழல் அல்லது அத்தியாவசியங்களை செயல்படுத்தும் பொறுப்பு ஆகியவை, ஒவ்வொருவரையும், ஏனோ இயந்திரமாக்கி விடுகின்றன.

ஒரு குடும்பம், உணவகத்திற்கு, திரையரங்கிற்கு, பொருட்காட்சிகளுக்கு மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு இயன்ற போதெல்லாம் செல்ல வேண்டும். தந்தை, தந்தையாக நடந்து கொள்ள மாட்டார்; விந்தையாக நடந்து கொள்வார். தாய், தாயாக நடந்து கொள்ள மாட்டாள்; தோழியாக மாறி விடுவார். ஒட்டாத பிள்ளைகள், வாய் திறவாத பிள்ளைகள், செல்லப் பிராணிகளைப் போல் ஆகி விடுவர்.

'அவரா இவர், அவனா இவன், அவளா இவள்' என்று ஒரு மனிதனை ஆக்கும் வல்லமை, வெளிக் களங்களுக்கு உண்டு.

இதன் மூலம் ஏற்படுவது செலவினம் அல்ல; முதலீடு. இந்த முதலீட்டிற்கு, உணவக விற்பனை போல, உடனே லாபம் தெரிந்து விடாது; போகப் போகத் தெரிய வரும்; புரியவரும்.

வெளியிடங்களுக்குச் சென்று வருவது, நேர விரயம் அல்ல; மதிப்புமிக்க செலவினம் இது!

இந்தப் பண, நேர முதலீடுகள், அபரிமிதமான பலன்களைத் தரவல்லவை. வெளியே சென்று திரும்பினால், சில பரிசுகளும் கிடைக்கும் என்பதை, குடும்பத் தலைவர் உணர்த்த வேண்டும்; குடும்ப உறுப்பினர்களைத் தூண்ட வேண்டும்.

வெளியே புறப்படாத மரத்தடி பிள்ளையார்களை, வீதி உலா வரச் செய்ய, குடும்ப உறுப்பினர்கள், முயற்சி மேற்கொள்ள வேண்டும். 'பணம் தர்றேன்; நீங்க போங்க...' என்று கழற்றிக் கொள்ளப் பார்க்கும், 'தலை'களை, பாசக்கயிறு கொண்டு கட்டி, இழுத்து விட வேண்டும். 'பேசவே நேரமில்ல...' என்கிற, 'பிசி' மனிதர்களுக்கு அளிக்கப்படும் அற்புதக் கொடை இது!

திருமணம் மற்றும் பிறர் இல்லத்து விசேஷங்களுக்கு, 'நான் வரலை; நீங்க போங்க...' என்று சொல்லும் பிள்ளைகளிடம், 'அந்த வரவேற்பிற்குப் போயிட்டு, அப்படியே, உனக்கு உடை வாங்கிட்டு வந்துடுவோம் வா...' என்று, அறையோடும், 'டிவி'யோடும், கணினியில் முகம் புதைத்து வாழ்கிற இளசுகளைக் கிளப்பி, நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ளப் பழக்க வேண்டும்.

வாய்ப்பு வராதா என்று தேடித் தேடி, வீட்டை விட்டு வெளியே சென்று புதிய களம் அமையுங்கள்; உறவு நிலைகள், என்னமாய் உயர்கின்றன என்று பாருங்கள்!

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us